புத்தகத்தின் பெயர்: எனதருமை டால்ஸ்டாய்
ஆசிரியரின் பெயர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள்: 142., விலை: 100
இன்றைய தேதியில் தமிழ் கூறும் நல்லுலகில் உலக இலக்கியங்கள் பற்றியும், உலக இலக்கிய எழுத்தாளர்கள் பற்றியும், தொடர்ந்து வாசிப்பதையும், அது பற்றிப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்க கூடிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் மேலுமொரு அற்புதமான படைப்புதான் இப்புத்தகம்.
இப்புத்தகத்தில் மொத்தமாக 20 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த 20 கட்டுரைகளில் டால்ஸ்டாயில் ஆரம்பித்து ஆன்டன் செக்காவ், தஸ்தாயெவ்ஸ்கி என உலக இலக்கியவாதிகளோடு தாகூரும், கலாப்ரியாவும் இணைத்துப் பேசியிருப்பது கூடுதல் சிறப்பு.
பொதுவாக கட்டுரைகள் என்று சொன்னவுடன் சலிப்புத்தட்டக்கூடிய இடத்தைத் தாண்டி, நம் கைபிடித்து கட்டுரைகளையும் ரசித்துப் படிக்க முடியும் என்கிற வகமையை வாசகன் இடத்தில் லாவகரமாக செய்து காட்டுகிறார் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
அதிகார வர்க்கத்திற்கு புத்தகங்களின் மீது எப்பொழுதுமே அளவு கடந்த பயம் என்பது தொற்றிக்கொள்கிறது என்பதை, “இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களால் புத்தகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நூலகங்களை அப்படியே கொளுத்தினார்கள். வீதியின் நடுவே புத்தகங்களைக் குவித்து வைத்து எரித்தனர்” என்கிற வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
நிகோஸ் கசான்சாகின் என்ற கிரேக்க எழுத்தாளர் வாழ்க்கையை அணுகுகின்ற விதம் சற்றே வித்தியாசமாக இருக்கின்றது என்பதை இப்புத்தகத்தில் உள்ள “ஜோர்பா எனும் உல்லாசி” என்கிற ஒன்பதாவதுக் கட்டுரையை வாசிக்கும் பட்சத்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
“உலகை மனிதர்கள் சிக்கலாக புரிந்து கொண்டால் தாங்களும் சிக்கலாகி உலகையும் சிக்கலாகி விடுவார்கள். ஆகவே எதற்காகவும் வருத்திக் கொள்ளாதீர்கள். மனித நேசமும், எதிர்பார்ப்பில்லாத அன்பும், இருப்பதைக் கொண்டாடத் தெரியும் மனநிலையுமே மனிதனுக்கு தேவை என்று சொல்லி ஜோர்பா என்கிற கதாபாத்திரம் சிரிக்கின்றான்.
“சந்தோஷத்தை உருவாக்கவும், காப்பாற்றிக் கொள்ளவும், பகிர்ந்து தரவும் மனிதர்கள் கொள்ளும் போராட்டமே நம் காலத்தின் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. அதையும் வணிகமாக்கிவிட்டது நமது துரதிருஷ்டமே” என்று ஜோர்பா என்கிற கதாபாத்திரம் கூறுவது எவ்வளவு பெரிய உண்மை. பணம் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்கிற எண்ணத்தை மனிதர்களிடம் விதைத்து தான் வணிகத்தின் முதல் வெற்றி.
இப்புத்தகத்தை வாசிக்கும் பட்சத்தில் உலக எழுத்தாளர்களின் அறிமுகம் நமக்குக் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நன்றி
அன்புடன்: வா. ஸ்டாலின்