காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

SHARE

புத்தரை பல கோணங்களில் ஆய்வு செய்து சிறப்பாக எழுதப்பட்ட பொத்தகம் இது. பவுத்த சமயம் தோன்றுவதற்கு முன் அன்றைய சமுதாயம் எப்படி இருந்தது? அரசியல் சூழ்நிலை எப்படி இருந்தது? மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? என்றவாறு இந்த பொத்தகம் தொடங்குகிறது.

அடுத்ததாக புத்தர் பார்வையில் நீதிமுறை, ஜனநாயகம், நிர்வாகம் ,சொத்து, உரிமைகள் , வர்க்கம், சாதி, பெண்கள் அனைத்தும் எப்படி இருந்தது என்பதை ஆசிரியர் காஞ்ச அய்லய்யா சிறப்பாக ஆய்வு செய்து பலவற்றுடன் ஒப்பிட்டு சிறந்த தகவல்களை கூறியுள்ளார்.

நிறைய இடங்களில் புத்தரின் கொள்கைகளில் உள்ள முரண்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சங்கத்தின் நடைமுறை விஷயங்களில் புத்தரும் சங்க உறுப்பினர்களும் அதிக அளவிற்கு ஆணாதிக்கக் கொள்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டனர் என்பது மிகவும் தெளிவு. எடுத்துக்காட்டிற்கு, பெண்கள் மீது அவர் விதித்த நிபந்தனையைக் கூறலாம். பிக்குணி நூறு ஆண்டுகள் அமைப்பில் இருந்தவராக இருந்தாலும், பிக்குவிற்கு அவர் மரியாதை செலுத்தவேண்டும்; பிக்கு வரும்போது எழுந்து நிற்க வேண்டும். குனிந்து வணங்கவேண்டும். அவருக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும்.

பெண்களுக்குச் சங்கம் அளித்த சுதந்திரம் இடத்தைப் பொறுத்ததாக இருந்தது. ஆண்களுக்குப் பெண்கள் அடிபணிந்து போகும் வகையில் பிக்குணி சங்கத்திற்கான விதிகளைப் புத்தர் வகுத்தார். அதுமட்டுமின்றி, மணமுடித்து வாழ்வதற்குப் பெண்கள் முடிவெடுத்துவிட்டால், குடும்பத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் பெண்கள் பலருக்கு அறிவுரை கூறினார்.

அதிகாரப்பூர்வமாக ஒரு பிக்குவைக் கண்டிக்கும் உரிமை பிக்குணிக்கு இல்லை. ஆனால், பிக்கு, பிக்குணியைக் கண்டிக்க முடியும். பிக்குணிகள் தம் வாழ்நாள் முழுவதும் இந்த விதிகளை மதிக்கவேண்டும்; பின்பற்றவேண்டும் என்றார் புத்தர். எப்போதும் இவற்றை அவர்கள் மீறக்கூடாது. பெண்கள் சங்கத்தில் சேராமலிருக்க, அவர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே இந்த நிபந்தனைகளைப் புத்தர் விதித்ததாகத் தோன்றுகிறது.

ஒரு இடத்தில் புத்தர் கூறுகிறார்: ஆனந்தா, குடும்ப வாழ்வைத் துறந்து துறவுநிலை எய்த பெண்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்றால், சங்கத்தின் பரிசுத்தமான விதிகள் ஆயிரமாண்டுகள் நீடித்திருக்கும். ஆனால், அனுமதிக்கப்பட்டதால் இந்த அமைப்பு ஐந்நூறு ஆண்டுகள் மட்டுமே நீடித்திருக்கும்’ என்றார் புத்தர். பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை நெல் வயலில் பயிர்களைப் பீடித்த லேசான நோயுடன் புத்தர் ஒப்பிடுகிறார். 

மனு, கௌடில்யர்  போன்றவர்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் புத்தரின் சங்கத்தில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இந்து மதத்தில் பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் புத்தர் கல்வி, அரசியல் போன்றவற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் நிறைய நிபந்தனைகளுடன்.

மனு, கௌடில்யர் இருவரும் கற்பனை இல்லை என்பதையும் இவர்கள் பிராமணர்களுக்கு சார்பாக பல கொள்கைகளை இயற்றியுள்ளார்கள் என்பதையும் ஆசிரியர் ஆய்வில் காணமுடிகிறது. சூத்திரர்ககளை இருவருமே கீழ் நிலையில் தான் வைத்துள்ளார்கள்.

புத்தர் தொடக்கத்திலிருந்தே பிராமணர்களது நடவடிக்கைகளை எதிர்த்தார். என்றாலும் சங்கத்தில் அவர்களுக்கு அனுமதியை என்றைக்குமே அவர் மறுத்ததில்லை.

வட்டிக்குப் பணம் கொடுப்பதைப் புத்தர் மறைமுகமாக ஆதரித்தார், நேரடியாக ஊக்குவித்தார். வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க குடும்பத்தினருக்குப் புத்தர் அறிவுரை கூறுகிறார். அதுமட்டுமின்றி, கடன் வாங்கியவர்களைச் சங்கத்தில் அனுமதிப்பதையும் தடை செய்கிறார்.

புத்தர் கடன்காரர்களும், திருடர்களும், சிறைக்கைதிகளும் சங்கத்தில் உறுப்பினராவதைத் தடை செய்திருந்தார். உடலுறவை முற்றிலும் புத்தர் தடை செய்திருந்தார். உணவு அளிக்கும் பெண்ணின் முகத்தைப் பிக்கு பார்க்கக்கூடாது. மகாவீரர் போதித்ததுபோல் முழுமையான அகிம்சையைப் புத்தர் போதிக்கவில்லை.

பக்கம் 164 லில் புத்தரின் காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள் என ஆசீவகத்தில் இருந்த முக்கியமான நபர்களை ஆசிரியர் தெளிவாக கூறியுள்ளார்.

வேதாந்தமும் தத்துவ அறிஞர்கள் பலரும் முதன்மை அக்கறை கொண்டிருந்த ஆன்மா பற்றிய அனைத்துக் கருத்தாடல்களையும் சிறுபிள்ளைத்தனமானவை, பயனற்றவை என்றார் அவர். நிறைவான வாழ்க்கைக்கான இலட்சியத்திற்கும், அருக நிலையை அடைந்து வாழ்வதற்கும் விரோதமானவை என்றார் புத்தர்.

உடலற்ற ஆன்மாவைப் பற்றிப் பேசுவது சுத்த முட்டாள்தனம். ஆன்ம விடுதலை என்ற கருத்தியலும் ஓரளவிற்கு மோசடியானது என்று உறுதியாகக் கூறமுடியும்; அதுவும், உறுதியான அறிவியல் சார்ந்து மானுட அறிவை நிறுவுவதில் ஓர் அடி முன் செல்வது என்பதைத் தவிர்த்து வேறொன்றுமில்லை. இந்தச் சிந்தனை உண்மையில் பண்டைய பொருள்முதல் வாதிகளான உலகாயத வாதிகள் அல்லது சார்வாகர்களால் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர் ஜாதகக் கதைகளையும் நிறைய ஆய்வு செய்து அப்போது இருந்த வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு கூறியுள்ளார். புத்தரின் நிறைகள், குறைகள் பற்றி நிறைய இடங்களில் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது புத்தர் இறந்து 400 ஆண்டுகளுக்கு பின்பு தான் இவரின் வரலாறு எழுதப்படுகிறது. தற்போது இவர் சொன்னதாக வலம் வரும் பொன்மொழிகள், அறிவுரைகள் 80% யாரோ ஒருவர் எழுதியது தான். புத்தர் கூறியது இல்லை என்பது உறுதி. அந்த காலத்தில் புத்தரிடம் இருந்த சிறந்த தலைமைப் பண்பு பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பாராட்டும்படியாக தான் உள்ளது. ஆனால் நிறைய முரண்களும் உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது.

பொத்தகம்: அரசியல் சிந்தனையாளர் புத்தர்

ஆசிரியர்: காஞ்ச அய்லய்யா

பக்கங்கள்: 336

விலை: ரூ.350

பதிப்பகம்: எதிர் வெளியீடு

– யாழினியன் (முகநூல் பதிவு)


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யெஸ்.பாலபாரதி நூலுக்கு பாலபுரஸ்கார் விருது… முதல்வர் வாழ்த்து

Admin

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய சூதாடி – நூல் அறிமுகம்

கொற்கை அகழாய்வில் கிடைத்த பழங்கால வெளிநாட்டு நாணயம்…!

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

நிலக்கடலை ஏன் மல்லாட்டை என்று அழைக்கப்படுகிறது?

Admin

வெள்ளைக் காகிதம் ஏன் டெம்மி பேப்பர் என அழைக்கப்படுகின்றது?

Admin

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – நூல் மதிப்புரை

Leave a Comment