அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

SHARE

இந்த ஆண்டு அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. யார் இந்த அம்பை? – ஒரு எளிய அறிமுகம்.

1960ஆம் ஆண்டில் தனது 16ஆவது வயதில் கண்ணன் இதழில் எழுதத் தொடங்கியவர் எழுத்தாளர் அம்பை. 1962ல் அம்பை எழுதிய‌ ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற துப்பறியும் நாவல் இளம் வயதிலேயே நாவல்களுக்கான போட்டியில் முதல் பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது. பெரும் இலக்கிய ஆளுமைகளின் சிறுகதைகளோடு இவர் இளம் வயதில் எழுதிய கதைகளும் விகடனில் வெளிவந்தன. உடல் கடந்த காதல் குறித்து இவர் எழுதிய ‘அந்திமாலை’ என்ற நாவலுக்கு கலைமகள் நடத்திய போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்தது. இவை இவரது எழுத்துத் திறனுக்கு சான்றாக இருந்தன. ஆனால் அம்பை தொடங்கிய இடமும் பின்னர் அவர் பயணித்த தடமும் வேறானவை.

த‌னது அந்திமாலை நாவல் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றபோதும், அதுகுறித்து அம்பை பெருமைப்பட்டது இல்லை. ‘அது இரண்டு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு விற்கிறது என்கிறார்கள். அதை விட அதிக விலை அதற்குத் தர முடியும் என்று தோன்றவில்லை’ – என்று அவர் தனது எழுத்தை சுய விமரிசனம் செய்கிறார். அதுதான் அம்பை!. அந்திமாலை நாவலுக்குப் பின்னர் அம்பை தேர்ந்தெடுத்த எழுத்து வடிவமும் பேசு பொருட்களும் மாறின.

மாநில‌ எல்லையைக் கடந்து பல்வேறு களங்களில் பெண்களின் காதல், கோபங்கள், சுய இரக்கம், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை கேலி கலந்த விமர்சனத்தோடு பதிவு செய்தது அம்பையின் எழுத்துக்கே உரிய‌ தனிப் பாணி.

சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை – ஆகிய இவரது தொகுப்புகளின் கதைகள் பெண்கள் குறித்த சமூகத்தின் மதிப்பீடுகள் மீது கல்லெறியும் விதமாக இருந்தன. உரத்துப் பேசாத, கலகம் செய்யாத பெண் பாத்திரங்கள் மூலமாகவே இவர் தனது கலகக் குரலை வெளிப்படுத்தினார்.

ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவாக இவர் எழுதிய ‘பயணப்படாத பாதைகள்’ நூலும், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவாக இவர் எழுதிய ‘சொல்லாத கதைகள்’ நூலும் இவரது முக்கிய படைப்புகள்.

இவை தவிர காட்டில் ஒரு மான், சக்கர நாற்காலி, ஸஞ்சாரி, தண்ணியடிக்க, வற்றும் ஏரியின் மீன்கள், அம்பை சிறுகதைகள், செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள், உடலென்னும் வெளி, ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன் (மொழி பெயர்ப்பு), அம்மா ஒரு கொலை செய்தாள், அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு, ஒரு கருப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் எழுதி உள்ளார்.

சிறுகதைகள், நாவல்கள் போக ஆய்வுக் கட்டுரைகளையும் அம்பை எழுதி வருகிறார். தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் டாக்டர்.சி.எஸ்.லக்ஷ்மி என்ற இவரது இயற்பெயரில் வெளிவருகின்றன. தமிழ், ஆங்கிலம் தவிர இந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் எழுதக் கூடியவர் இவர்.

தனிப்பட்ட வாழ்விலும் சமரசமும் சத்தமும் அற்ற போராளியாக அறியப்படும் அம்பை 1976ல் திருமணத்திற்கு முன்பே கணவருடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி அம்பையின் கதைகள் மட்டுமே அவரது வாரிசுகளாக உள்ளன. 1988ஆம் ஆண்டில் ஸ்பேரோ (SPARROW – Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகவும் அம்பை செயல்பட்டு வருகிறார். தனது பணிகளுக்காக கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அம்பை பெற்று உள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

தோண்டத்தோண்ட சோழதேசம்… கங்கைகொண்ட சோழபுர அரண்மனை 2ஆம் பாகம் கண்டுபிடிப்பு!

Admin

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய குழு – முதல்வர் அறிவிப்பு..!

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

Leave a Comment