நகைச்சுவை நடிகர் மயில்சாமி திடீரென நெஞ்சுவலி காரணமாக இறந்துள்ளது திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரைக் குறித்து மறைந்த நடிகர் விவேக் அவர்கள் பேசிய நெகிழ்ச்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அசத்தப் போவது யாரு? காமெடி டைம் போன்ற நிகழ்ச்சிகளிலும், நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் , கில்லி, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மயில்சாமி.


இவர் நடிகராக மட்டுமின்றி அரசியல் விமர்சகராகவும் இருந்தார். தனிப்பட்ட வாழ்வில் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகராக இருந்த மயில்சாமி கஷ்டப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். இவரது நடிப்பைவிட் இவரது சமூகக் கருத்துகளுக்கும், சமூகப் பணிகளுக்கும் இன்னும் கூடுதல் ரசிகர்கள் உண்டு.
சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டுவிட்டுத் விட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக மயில்சாமி உயிரிழந்தார். மயில்சாமியின் மறைவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மயில்சாமி அவர்களின் பழைய பேச்சுகள் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான விவேக், மயில்சாமி குறித்து முன்னர் மனம் திறந்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விவேக் அவர்கள் பேசியதாவது,
”மயில்சாமி, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், அவரை போலவே அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்.
நாம் அவரை பார்க்கும் போது இளிச்சவாயனா? – எனத் தோன்றும். ஆனால் பிறருக்கு கஷ்டம் என்றால் ஓடிஓடி உதவி செய்பவர்.
ஷீரடி சாய்பாபா மாதிரி ஒருநாள் பாத்தா பணக்காரனாக இருப்பான், ஒரு நாள் பாத்தா ஏழையாக இருப்பான். நல்ல மனிதன்.
அதேபோல, ஒரு புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின் போது கையில் இருந்த காசை எல்லாம் நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த இசை கலைஞருக்கு அன்பாக கொடுத்துவிட்டு, ஆட்டோவுக்கு பணம் இல்லாமல் என்னிடம் வாங்கிச் சென்றார்.
பாரதியார் போல தனக்கு பணம் வேண்டும் என்று துளியும் கவலைப்படாமல் பிறருக்கு கொடுத்து உதவி செய்யும் குணம் கொண்டவன்.
யாருக்காவது படிப்புக்கு உதவித்தேவை என்றால் தன்னிடம் பணம் இல்லாத போது நடிகர் சத்யராஜ் போன்ற சக நடிகர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் பணம் வாங்கி உதவி செய்யும் குணம் கொண்டவன் மயில்சாமி”.
மயில்சாமி குறித்து பலரும் நல்லவிதமான கருத்துகளைக் கூறிவரும் நிலையில், மறைந்த விவேக் அவர்களின் கருத்து மயில்சாமியின் ரசிகர்களுக்கு இன்னும் அதிக நெகிழ்ச்சியைத் தருகின்றது.