உக்ரைன் ரஷ்யா போர் உச்சத்தில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உக்ரைன் சென்றுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர்:
உக்ரைன் ரஷ்யா போர் கடந்த பிப்ரவரிமாதம் 24 ம் தேதி தொடங்கிய நிலையில் ஒரு வருடங்களை கடந்து தொடர்ந்து நடந்து வருகின்றது , இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் உள்ளன . குறிப்பாக அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு தனது ஆதரவினை கொடுத்து வருகின்றது.
அமெரிக்காவின் ஆதரவு நிலைப்பாடு ரஷ்யாவிற்கு கடும் சிரமத்தை கொடுத்துள்ளது, உக்ரைன் போரினால் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில் போர் நடக்கும் யுத்த பூமியான உக்ரைனில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் சென்று வந்துள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக போர் நடக்கும் இடத்திற்கு அமெரிக்க அதிபர்கள் யாரும் சென்று வந்ததில்லை தற்போது ஜோப்டைன் உக்ரைன் சென்றுள்ளதன் மூலமாக புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
இந்த நிலையில் போர் சத்தங்களுக்கு மத்தியில் ஜோபைடன் உக்ரைன் பயணம் சாத்தியமானது எப்படி? விளக்குகின்றது இந்த செய்தி தொகுப்பு
அமெரிக்க நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இருந்து ஜோ பைடனின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் புறப்பட்டன
தனி விமானம்
அமெரிக்க ஜனாதிபதிகள் வழக்கமாக வெளிநாட்டு பயணங்களுக்கு விமானப்படையின் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தைத்தான் பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஜோ பைடன் வழக்கத்துக்கு மாறாக, உள்நாட்டு பயணத்தின்போது பயன்படுத்தக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட போயிங் 757 ரக விமானமான ஏர்போர்ஸ் சி-32 விமானத்தில் போலந்துக்கு சென்றார்.
இந்த விமானமானது, அதிகாலை 4.15 மணிக்கு ஆண்ட்ரூஸ்கூட்டுப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதியின் உக்ரைன் பயணம், உக்ரைன் மக்களுக்கு முன்கூட்டி தெரியாது. ஆனால் இந்தப் பயணம் குறித்து ரஷியாவுக்கு அமெரிக்கா முன்கூட்டியே தெரிவித்துள்ளது


ஜோ பைடனின் இந்தப் பயணத்துக்கான திட்டத்தை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு முகமை உயர் அதிகாரிகள் பல மாதங்களாக தீட்டி வந்துள்ளனர். இதற்கு கடந்த வெள்ளிக்கிழமையன்றுதான் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்
ஜோ பைடனின் விமானம் வழியில் ஜெர்மனியில் தரையிறங்கிறது.
ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்கவில்லை. விமானம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தது.
ஜோ பைடன் விமானம், போலந்து நாட்டின் ரெஸ்ஸோவ் நகரில் தரை இறங்கியது. அங்கிருந்து 10 மணி நேரம் ரெயில் பயணம் மேற்கொண்டு கீவ் நகரைச் சென்றடைந்தார்
பாதுகாப்பில் உக்ரைன்
காலை 8 மணிக்கு கீவ் நகரை சென்றடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரிட்ஜெட் பிரிங்க் வரவேற்றார்.
கீவில் உள்ள மாரின்ஸ்கி அரண்மனைக்கு ஜோ பைடனும், அவரது வாகன அணிவகுப்பும் விரைந்தது அந்த நகரை அதிர வைத்தது. முக்கிய வீதிகள் காரணம் எதுவும் குறிப்பிடாமல் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன.


ஜோ பைடன் பயணத்தில் 2 அமெரிக்க பத்திரிகையாளர்கள் மட்டுமே உக்ரைன் அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலான உக்ரைன் பத்திரிகையாளர்கள் அமெரிக்க பத்திரிகையாளர்களுடன் ஒரு ஓட்டலில் ஒன்றிணையுமாறு அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கும் ஜோ பைடன் வருகை பற்றி எதுவும் முன்கூட்டி தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்க படைகள் ஏதும் உக்ரைனில் கிடையாது.
கீவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மட்டும் அமெரிக்க கடற்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஜோ பைடன் கீவ் நகரில் இருந்தபோது போலந்து நாட்டின் வான்வெளியில் இருந்து அமெரிக்க கண்காணிப்பு விமானங்கள், கீவ் நகரை கண்காணித்துக்கொண்டிருந்தன.
அமெரிக்காவின் கரிசனம்
மொத்தத்தில் ஜோ பைடனின் 23 மணி நேர உக்ரைன் பயணம் உலகமெங்கும் பெரும் பரபரப்பையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல
அதே சமயம் அமெரிக்காவும் வலிய வந்து ஆதரவு கொடுப்பது , அமைதியினை நிலைநாட்ட வேண்டும் என்ற பரந்த நோக்கம் எப்போதும் இருந்தது கிடையாது .
கருங்ககடல் பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதே அமெரிக்க அரசின் நோக்கம் , கொஞ்சம் வரலாற்றை திருப்பி பார்த்தால் அமெரிக்காவின் சகுனித்தனத்தால் செய்த அரசியல் விளையாட்டு நமக்கு தெரிய வரும் உதாரணமாக ஆப்கானில் அப்பாவி மக்களை தவிக்க விட்டு தாலிபானுக்கு ஆதரவாக தங்களின் இராணுவத்தை அமெரிக்க அரசு திரும்ப பெற்றது இங்கு நாம் கவனிக்க வேண்டும்
தற்போது அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உக்ரைன் பயணத்தால் அடுத்து ரஷ்யா எடுக்கும் போர் நடவடிக்கைகளை சமாளிக்குமா உக்ரைன் ? அமெரிக்க அரசின் அடுத்த திட்டம் என்ன ? இதற்கான பதிலை காலம் தான் கூற வேண்டும்.