இந்த ஆண்டின் தொடக்கத்தில் 121 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர் இந்தியாவின் கௌதம் அதானி. கடந்த ஓராண்டில் மட்டும் அதானியின் சொத்தில் 44 பில்லியன் டாலர் கூடியிருந்தது.
அடுத்த சில வாரங்களில் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை அதானி அடைந்துவிடுவார் என உலக பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த வேளையில்தான், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வெளியாகி, அதானி குழுமத்தை சரவரவென இழுத்து கீழே தள்ளியிருக்கிறது.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் மதிப்பு 71 விழுக்காடு வீழ்ந்திருக்கிறது.
டாப் 3 என்ற நிலையிலிருந்த அதானி, இன்றைக்கு உலகப் பணக்காரர்கள் வரிசையில் 24-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அதானியின் மொத்த சொத்து மதிப்பு 52.4 பில்லியன் டாலராக சுருங்கிவிட்டது. பங்குகளின் விலையை உயர்த்திக் காண்பிக்க அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை அதானி குழுமத்துக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் தூக்கத்தை கெடுத்து பெரும் தலைவலியாய் மாறி உள்ளது.
“அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் தனிப்பட்டரீதியில் நெருங்கிய நட்புறவு இருக்கிறது. மத்திய அரசின் உடந்தை இல்லாமல் பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம், அதானியையும் அழைத்துச் சென்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். எனவே அதானி குழுமத்தின் மோசடிகள் குறித்து பிரதமர் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும். பா.ஜ.க-சுக்கு கௌதம் அதானி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு?” என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
அதானியும் பிரதமர் மோடியும் விமானத்தில் ஒன்றாக இருக்கும் படங்களையும் அவர் எடுத்துக் காட்டினார்.
ஆனால், `ராகுல் காந்தியின் பேச்சு மிக மலிவானது’ என மத்திய அரசு சாடியதுடன், அவர் பேச்சின் சில பகுதிகளும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, பயப்படவோ ஒன்றுமே இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மற்றபடி, அதானி குறித்து பேசுவதையே பா.ஜ.க-வினரும், மத்திய அமைச்சர்களும் தவிர்த்தனர்.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை


அதானி விவகாரம் மக்களவையிலும், மக்கள் மன்றத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த சமயத்தில், பிப்ரவரி 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “மத்திய அரசு நேருவின் பெயரைக் குறிப்பிட மறந்தால் காங்கிரஸ் கட்சியினர் ஆதங்கப்படுகிறார்கள்.
நேரு சிறந்த மனிதர் என்றால், அவரின் பெயரை குடும்பப் பெயராக வைக்காமல் ஏன் காந்தியின் பெயரை வைக்கிறீர்கள்… நேருவின் பெயரை வைப்பதில் என்ன தயக்கம்?” என்று சாடினார். மோடியின் இந்தப் பேச்சால் மக்களவையில் பா.ஜ.க எம்.பி-க்களின் சிரிப்பலை நீண்ட நேரம் ஒலித்தது.
சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான வாதங்கள், விவாதங்கள் அடங்கவே சில நாள்களானது.


“பொதுவாகவே குடும்பப் பெயரை, தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வது வட இந்தியர்களின் பழக்கம். பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை இந்திரா காந்தி திருமணம் செய்தபிறகுதான், நேரு குடும்பத்தினரின் பெயருக்குப் பின்னால் காந்தி பெயர் முதன் முதலாக வந்தது.
பெரோஸ் காந்தி- இந்திரா காந்தி தம்பதியின் மகன்களான ராஜீவ், சஞ்சய் ஆகியோரின் பெயர்களுக்குப் பின்னாலும் அப்படித்தான் காந்தி பெயர் வந்தது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்திக்கும் அதே அடிப்படையில்தான் காந்தி பெயர் நீடிக்கிறது.
பிரியங்கா காந்தி ராபர்ட் வதோராவை திருமணம் செய்துகொண்டதால் அவர்களின் குழந்தைகளான மிராயா, ரைஹான் ஆகியோர் பெயர்களுக்குப் பின்னால் காந்தி இல்லை, வதோராதான் இருக்கிறது.
எனவே மகாத்மா காந்திக்கும் நேரு குடும்பத்தினரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் காந்திக்கும் சம்பந்தமில்லை” என்று காங்கிரஸார் நீண்ட விளக்கங்களை கொடுத்தனர். அதானி குறித்த பேச்சுகளை மக்கள் மன்றத்திலிருந்து திசைதிருப்பவே பிரதமர் மோடி, வீம்புக்கு காந்தி பெயரை இழுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினரும் பதிலடி கொடுத்தன.
அதானி குழுமத்தின் வீழ்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதானி குறித்த மத்திய அரசின் மவுனமும்தான்.