முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

SHARE

சோழர்களின் வரலாற்றில் முதன்முறையாக தங்க நாணயம் வெளியிட்டவர் யார்? என்ற கேள்விக்கு இருவேறு பதில்கள் கிடைக்கின்றன. நாணய ஆய்வாளர்கள் இராஜராஜ சோழன் என்றும், கல்வெட்டு ஆய்வாளர்கள் இராஜராஜனின் சிற்றப்பன் மதுராந்தக உத்தம சோழன் – என்றும் இருவேறு பெயர்களைச் சொல்கின்றனர். இந்த இருவரில் யார் முதலில் தங்க நாணயத்தை வெளியிட்டவர்? – வாருங்கள் பார்ப்போம்…

சங்ககாலம் முதல் பல்லவர் காலம் வரையில் தமிழகத்தை ஆண்ட அரசர்கள் எவரும் தங்க நாணயங்களை வெளியிட்டது இல்லை. சங்க காலத்தில் தமிழர்களோடு வணிகம் செய்த ரோமானியர்களின் தங்க நாணயங்களே தமிழகத்தில் நெடுங்காலம் புழங்கின.

கிடைத்த ஆதாரங்களின்படி கி.பி.863 முதல் கி.பி.911 வரை ஆட்சி செய்த பிற்காலப் பாண்டிய அரசரான இரண்டாம் வரகுணன் என்பவர்தான், தங்க நாணயங்களை வெளியிட்ட முதல் தமிழக அரசர் ஆவார். திருச்செந்தூர் கோவிலுக்கு இவர் 1400 தங்கக் காசுகளை வழங்கியதாகவும், அம்பாசமுத்திரம் கோவிலுக்கு இவர் 290 தங்கக் காசுகளை வழங்கியதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் வெளியிட்ட தங்க நாணயத்தில் ஒரே ஒரு நாணயம் மட்டும் ஆய்வாளர்களுக்குக் கிடைத்து உள்ளது.

சோழர்களின் தங்க நாணய வரலாறு எந்த அரசரில் இருந்து தொடங்குகின்றது? – என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நாணயவியல் ஆய்வுகளின்படி,

இராஜராஜன் சோழ அரசனாகப் பதவி ஏற்கும் முன்னதாக பிற்காலச் சோழர்கள் வெள்ளியிலோ, தங்கத்திலோ நாணயங்களை வெளியிடவில்லை. செம்பில் மட்டுமே நாணயங்களை வெளியிட்டனர். அந்த நாணயமும் சுமார் 1 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய நாணயமாக இருந்தது. இது தவிர சில அளவில் பெரிய செம்பு நாணயங்களை சோழர்கள் சிறப்பு வெளியீடாக வெளியிட்டு உள்ளனர். ஆனால் அவையும் அதிக எண்ணிக்கையில் அச்சடிக்கப்படவில்லை. எனவே ஆய்வுகளில் அவை அதிகம் கிடைப்பதும் இல்லை.

இதன் காரணம் என்ன என்றால், பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் ஆதித்த சோழரின் காலத்தில்தான் மீண்டும் தலையெடுக்கின்றனர். ஆனாலும் இராஜராஜனின் ஆட்சிக் காலம் வரையில் சோழர்களுக்கு போர் வெற்றிகளும், விவசாய வருமானங்களும் பெரிய அளவில் இல்லை. எனவே அவர்கள் அரிய உலோகங்களில் நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வளமாக இல்லை.

ஆனால் இராஜராஜன் ஆட்சியிலோ 4 கிராம் தங்கத்தில் நாணயங்களை வெளியிடும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தது. அப்போது நாணயங்களும் அதிக எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டன. அதன் காரணமாக இப்போது ஆய்வுகளில் இராஜராஜனின் நாணயங்களே அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன.

கல்வெட்டு ஆய்வுகளின்படி,

மதுராந்தக தேவன் மாடை என்ற தங்கக் காசைப் பற்றிய குறிப்பு கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. சோழர்கள் என்ற வரலாற்று நூலை எழுதிய நீலகண்ட சாஸ்திரி அவர்கள் இந்தக் கல்வெட்டை வைத்துதான் ‘இராஜராஜனின் சிறிய தகப்பனார் மதுராந்தக உத்தம சோழன் தங்க நாணயம் வெளியிட்டார்’ – என்று கூறி உள்ளார். எனவே இதைத்தான் கல்வெட்டு ஆய்வாளர்கள் சோழர்களின் முதல் நாணயமாகக் கூறுகின்றனர்.

இந்த இரண்டு தகவல்களும் முரண்படுகின்றன என்றாலும், இரண்டிலும் உண்மை உள்ளது. இராஜராஜன் ஆட்சிக்கு வரும் முன்பு சோழ மண்டலத்தில் அவ்வளவு வளம் இல்லை என்பதும் உண்மை, சோழர் கல்வெட்டில் உள்ள மதுராந்தகன் மாடை என்ற நாணயமும் உண்மை.

ஆனால், மதுராந்தக தேவன் மாடை – என்பதில் உள்ள மதுராந்தகன் என்ற சொல் இராஜராஜனின் சிறிய தகப்பனார் மதுராந்தக உத்தம சோழனைக் குறிக்கவில்லை. அந்த சொல் அதே பெயர் சூட்டப்பட்ட இன்னொரு அரசரைக் குறிக்கிறது. அவர் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன். ஆம், இராஜேந்திரன் பிறந்தபோது இராஜராஜன் சூட்டிய பெயர் ‘மதுராந்தக உத்தம சோழன்’ என்பதுதான்.

நீலகண்ட சாஸ்திரி அவர்களுக்கு இராஜேந்திரனின் பெயரும் மதுராந்தகன்தான் என்பது தெரியும், ஆனால் அவர் ஏன் இராஜராஜனின் சிற்றப்பன் வெளியிட்ட நாணயமாக அதனைக் கருதினார் என்றால், ’மதுராந்தக தேவன் மாடை’ – என்ற குறிப்பு இராஜராஜனின் 31ஆவது ஆட்சி ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில்தான் முதன் முதலாகக் காணப்படுகின்றது. அதனால்தான் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ‘இது இராஜராஜனின் ஆட்சியில் புழங்கியதால், அவருக்கு முன்பு ஆண்ட அவரது சிற்றப்பன் மதுராந்தகனின் நாணயமே இது’ என்று கருதியுள்ளார். ஆனால் அதே சமயம், இராஜராஜன் தனது 29ஆம் ஆட்சி ஆண்டில் இராஜேந்திரனுக்கு முடி சூட்டியதால், இராஜராஜனின் 31ஆம் ஆட்சி ஆண்டு என்பது, இராஜேந்திரனின் 2ஆம் ஆட்சி ஆண்டு என்பதை சாஸ்திரியார் கவனத்தில் கொள்ளவில்லை. 

மேலும் நாணய ஆய்வாளர்களுக்குக் கிடைத்த மதுராந்தகன் மாடையின் வடிவமைப்பானது, ‘ராஜெந்திர சொளந்’ என தமிழ் கிரந்தத்தில் பொறிக்கப்பட்ட இராஜேந்திர சோழனின் தங்க நாணயத்தின் வடிவமைப்பு, எழுத்தமைதி ஆகியவற்றுடன் பெரிதும் ஒத்துப் போகின்றது. இதே அமைப்பில் உத்தம சோழந் – என்ற தமிழ்க் கிரந்த எழுத்துகளுடன் கிடைக்கும் நாணயமும் இராஜேந்திர சோழன் வெளியிட்ட ஒன்றே. இந்த மூன்று நாணயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும் உள்ளது.

மதுராந்தகந் – தமிழ் கிரந்த (சோழர் கால எழுத்து வடிவம்) நாணயத்தின் முன் பகுதியில், அமர்ந்துள்ள புலியைச் சுற்றி எழுத்துகள் உள்ளன. பின் பகுதியில் இரண்டு மீன்களைச் சுற்றி எழுத்துகள் உள்ளன. இது சோழர்கள் இரண்டு பாண்டியர்களையும் வென்றதைக் குறிக்கக் கூடியது. 

படம் 1: மதுராந்தகந் தங்க நாணயம்.

பின்னர், இந்த வடிவமைப்பு சற்று மாற்றம் கண்டு ’உத்தம சோள(ழ)ந்’ நாணயத்தின் இருபுறமும் புலியும் மீனும் உள்ள சின்னங்கள் பொறிக்கப்பட்டன. 

படம் 2: உத்தமசோள(ழ)ந் தங்க நாணயம்.

இவற்றின் தொடர்ச்சியாகவே ’இராஜேந்திர சோள(ழ)ந்’ நாணயத்தில் இரண்டு மீன்கள், புலி, வில் ஆகியவை இருபுறமும் பொறிக்கப்பட்டு உள்ளன. இந்த சின்னங்கள் மூவேந்தர்களும் சோழரின் ஒரே குடையின் கீழிருந்ததைக் காட்டுகின்றன. இந்த இறுதியான சின்னமே பின் வந்த பெரும்பாலான நாணயங்கள் மற்றும் பட்டயங்களில் இடம் பெற்று உள்ளது.

படம் 3: ராஜேந்திர சோள(ழ)ந் தங்க நாணயம்.

சின்னங்களின் இந்தத் தொடர்ச்சியும் இவை அனைத்தும் இராஜேந்திரனின் காசுகளே என்பதை நிறுவுகின்றன.

இதனால் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமன் அவர்கள் தனது ‘தமிழகக் காசுகள்’ நூலில் மதுராந்தகந் – எனப் பெயர் பொறிக்கப்பட்ட நாணயத்தை இராஜேந்திர சோழனின் நாணயம் என்றே குறிப்பிட்டுள்ளார். இதில் பிற நாணய ஆய்வாளர்களுக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே சோழ அரசர்களில் முதன்முறையாக தங்க நாணயம் வெளியிட்டவர் இராஜராஜ சோழனே!.

படம் 4: இராஜராஜ சோழனின் தங்க நாணயம்.

இன்னொரு பக்கம், வரலாற்று நாவல்களை வாசிக்கும் வாசகர்கள், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் சுந்தர சோழரின் நாணய சாலையில் ஒருபக்கம் புலியும் மறு பக்கம் கப்பலும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அச்சடிக்கபட்டதாக உள்ள குறிப்பை உண்மை என நம்புகின்றனர். இது ஒரு கற்பனையான செய்தி. இதற்கு கல்வெட்டு ஆதாரங்களோ நாணயவியல் சான்றுகளோ இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • இரா.மன்னர் மன்னன். எழுத்தாளர், நாணய ஆய்வாளர்.
    (நாணய புகைப்படங்கள் உதவி: ராமன் சங்கரன், நாணய ஆய்வாளர், சென்னை.)


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

Admin

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

மகாபஞ்சாயத்து 2024: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறைகூவல்

Admin

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான அவசியமில்லை – தமிழக அரசு எதிர்ப்பு

Admin

“அன்பின் வழியது உயிர்நிலை” முதல்வர் மு.க.ஸ்டாலினைக் கவர்ந்த வள்ளுவர் ஓவியம்!.

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பாலியல் வழக்கில் கைது

Admin

1 comment

இரத்தினவேலு August 17, 2021 at 10:09 am

(கல்) கிருஷ்ணமூர்த்தி பொன்ணியின் செல்வனில்பல உண்மைகளை மறைத்திருக்கிறார்; பொய்களும் சொல்லியிருக்கிறார். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அப்போதே சான்றுகளுடன் விளக்கியுள்ளார். அதுமட்டுமன்றி, பல இடங்களில் கிருஷ்ணமூர்த்தி Alexander Dumas கதைகளில் இருந்து பச்சைபச்சையாகக் காட்சிகளை, பாத்திரங்களைத் திருடியிருக்கிறார். பெரும்பாலான தமிழர்கள் மூடர்கள்.இப்போதும் கூட உளறலைக் கொட்டும் பாரதிபாஸ்கர், ராஜா, ஞானசம்பந்தம் லியோனி சேலம் குப்புசாமி, கிருபானந்தவாரி சுபவீரபாண்டியன், மதிமாறன் புகழப்படும் பேச்சாளர்களில் சிலர்!

Reply

Leave a Comment