பிறந்த குழந்தை ஒன்று அழாமல் “நான் வெளியே வந்துட்டேன்” எனக் கூறியதாக பரவிய செய்தி இணையத்தில் வெளியானது. பெரிய செய்தி நிறுவனங்களும் இது குறித்து செய்தி வெளியிட, இணையம் முழுவதும் இந்த செய்தி தீயாகப் பரவியது.
பலரும் அதிசயக் குழந்தைக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியுமா? பிறந்த குழந்தை எப்படிப் பேசும்? – என்ற சந்தேகம் நம் அனைவருக்குமே இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியிலுள்ள களியாம்பூண்டி என்ற கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சந்திரன் – ரேவதி என்ற இணையருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தைதான் பேசியதாக செய்திகள் வெளியாகின.


ஆனால் குழந்தையின் தாயும் அந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்களும் குழந்தை பேசியதாக ஊடகங்களுக்கு கூறியது ஏன் எனத் தெரியவில்லை.
குழந்தையின் தாயுடன் இருந்த உதவியாளர் ஊர்மக்களிடம் குழந்தை பேசியதாக கூறியதும் அங்கு குழந்தையைக் காண பலர் கூடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஊடகங்களும் அந்த பகுதிக்கு விரைய இது பெரிய விஷயமாக வளர்ந்துள்ளது
இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது, ”குழந்தை பிறந்த போது இருந்த சத்தம் ஏதாவது அப்படித் தவறாக கேட்டிருக்கலாம் என்றும் தாயின் அதீத அன்பினால் அப்படி கேட்டிருக்கலாம்” என்றனர்.
மருத்துவர்கள் பல விளக்கங்கள் கூறினாலும் தங்கள் குழந்தை பிறந்தவுடன் பேசியாதாகவே கருதுகின்றனர் அதன் பெற்றோர்களும் உறவினர்களும்.