திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 2 லோக்சபா தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா + ஒரு லோக்சபா தொகுதி (கோவை) கேட்டார். ஆனால் திமுக அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரேயொரு ராஜ்யசபா சீட் மட்டுமே திமுக வழங்கி மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்த்துள்ளது. இது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜகவினர் கமலஹாசனை வலிமையாக எதிர்த்து வருகின்றனர். அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் என பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் கமல் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்தவரிசையில், இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜகவின் மகளிர் அணியின் தேசிய தவைியுமான வானதி சீனிவாசன் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, கிண்டல் தொனியில் விமர்சித்தார்.
அவர் பேசியதாவது, “மக்களை சந்திப்பதில் அவருக்கு முகம் இல்லை என்று தான் இதற்கு அர்த்தம். ஏனென்றால் சட்டசபை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டபோதும் கூட தொகுதி மக்கள் அணுக முடியாத நபராக தான் அவர் இருந்தார். அதற்கு சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தார்கள்.
இப்போது மக்களை சந்தித்து போட்டியிடும் மனநிலையில் இருந்து அவர் மாறியிருக்கலாம். கோவையில் மூக்கு உடைத்து இருந்தாலும் நான் வருவேன் என்று சொல்லி இருந்தார். நாங்களும் ஆவலாக அவரை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் அவர் வராதது எங்களுக்கு ஏமாற்றம் தான்” எனக்கூறி சிரித்தார்.
இந்த வேளையில் திமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் மட்டுமே கமலுக்கு கொடுக்கப்பட்டுள்ளதே? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வானதி சீனிவாசன், ‛‛எப்படியாவது எம்பி, எம்எல்ஏ ஆக வேண்டும் என நினைக்கிறார். இதனை எப்படி பார்க்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நான் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறேன். தமிழ்நாட்டில் நான் ஆட்சியமைக்க போகிறேன். நான் ஒரு முதல்வர் வேட்பாளர் எனக்கூறி வந்த கமல்ஹாசன் அவரது இந்த குறைந்தகால அரசியல் பயணத்தில் எந்த கட்சியை விமர்சனம் செய்தாரோ, எந்த கட்சி லஞ்சம், ஊழல், வாரிசுக்கு ஆதரவாக இருக்கிறது எனக்கூறி விமர்சித்த கட்சியுடன் இப்போது கூட்டணியில் சேர்ந்துள்ளார். எப்படியாவது எம்பி ஆகமாட்டேனா? மக்கள் இப்படி தோற்கடித்து விட்டனரே. நாம் ஏதாவது ஒரு இடத்துக்கு போக வேண்டுமே என்ற அடிப்படையில் கூட அவர் ராஜ்யசபா இடத்துக்கு ஓகே சொல்லி இருக்கலாம்.
மேலும் வேட்பாளராகவே நின்று மக்களை சந்தித்து பேச முடியாத அவர் பேச்சாளராக மட்டும் பிரசாரத்துக்கு வந்து என்ன செய்ய போகிறார்?. அதனால் என்ன பிரயோஜனம் இருக்கப்போகிறது? அவரது அரசியல் ஆசைக்காக இந்த பதவியை எடுத்து கொண்டு நட்சத்திர பேச்சாளராக மாறப்போகிறார். ஒரு நட்சத்திர பேச்சாளருக்கு என்ன வேலை. அது தான் ராஜ்யசபா வேலை. அவ்வளவு தான். பதவிக்காக தான் அவர் இப்படி செய்துள்ளார். நிச்சயமாக அப்படித்தான் பார்க்க முடியும். இல்லாவிட்டால் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் தோற்றாலும் கூட திரும்ப வந்து மக்களை சந்தித்து பேசியிருக்கலாம்.
தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கலாம். அது எதையும் செய்யவில்லை. மேலும் மீண்டும் அவர் மக்களை சந்திப்பதில் தயக்கம், பயம் இருந்திருக்கலாம். இப்போது அவரது அரசியல் சாயம் என்பது வெளுத்துவிட்டது. பொதுவாக ஒரு கட்சி தலைவர் இன்னொரு கட்சி தலைவரை விமர்சிப்பதும், தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பதும் ஒரு தர்மசங்கடமான நிலை தான். இதனால் கமல்ஹாசன் பேசிய பேச்சுக்கெல்லாம் அவர் தான் பதில் சொல்ல வேண்டும்” என கிண்டல் செய்தார்.