இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

SHARE

(கவிஞர் மகுடேசுவரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கு மறு பதிப்பு செய்யப்படுகின்றது)

1. ஒரு பாடலின் முதற்சொல் தொடங்குவதற்கு முன்பாக முதல் இருபது நொடிகள் அல்லது முப்பது நொடிகளுக்கு ஒரு முன்னிசை அமைத்திருப்பார். அந்த முன்னிசையின் இன்பத் திகைப்பிலிருந்து தப்பித்து நாம் நடுநிலைக்கு வருவதற்குள் அந்தப் பாடலின் முதல் வரி தொடங்கும். வேறு வழியின்றி அந்தப் பாடலுக்குள் நாம் நம்மையறியாமல் மூழ்கத் தொடங்குவோம். ’அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ முதல் ’ராக்கம்மா கையத் தட்டுவரை’ இத்தன்மையோடு அமைந்த எண்ணற்ற பாடல்களை எண்ணிப் பாருங்கள். இந்த நுண்முறையைத் தாம் இளையராஜாவிடமிருந்து கற்றுக்கொண்டு தம் பாடல்களில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் தேவா குறிப்பிடுகிறார். அவர் அதனைத் திறமையாகச் செயற்படுத்திய பாட்டு “நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்.”

2. பல்லவியின் ஒவ்வொரு வரிக்கும் புதுப்புது மெட்டாக அமைத்துச் செல்வார். அது முன்பே அமைந்த வரியின் தொடர்ச்சியான மெட்டாக இருக்காது. மாறி மாறி மெட்டின் திசை செல்கிறதே என்பதற்காக எளிமையாகவும் இருக்காது. எடுத்துக்காட்டாக இந்தப் பழைய பாடலைப் பாருங்கள் – பாட்டு பாடவா, பார்த்துப் பேசவா, பாடம் சொல்லவா, பறந்து செல்லவா – இது தொடர்ச்சியான அமைப்பில் அமைந்த மெட்டு. “தூங்காதே தம்பி தூங்காதே, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” – இது தொடர்ச்சியாகவும் எளிமையாகவும் அமைந்த மெட்டு. தொடக்கத்தில் திரைப்பாடல்களுக்கு இத்தகைய எளிமையும் மறுதோன்றலும் தேவைப்பட்டன. இளையராஜா இந்தப் போக்கினை முற்றாகக் கலைத்தார். இளையராஜாவின் முதல் பாடலையே பாருங்கள் – அன்னக்கிளி உன்னைத் தேடுதே. அடுத்த வரி இதே அமைப்பில் அமையலாம்தானே ? ’வண்ணக்கிளி நெஞ்சம் வாடுதே’ என்று அதே இசைக்கட்டமைப்பில் செல்லலாம். இளையராஜா பாட்டு அப்படிச் செல்லாது. அப்படியே மெட்டை வெற்றிலை பாக்குப்போல் மடிப்பார். ‘ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பூ மேனி வாடுதே’ என்று வெவ்வேறு இழுப்பில் அமைத்துச் செல்வார். ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’ பாடலில் இரண்டு முறை வந்தாலும் இரண்டும் வெவ்வேறு மெட்டு. “என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே” இரண்டு முறை இடம்பெற்றாலும் இரண்டுக்கும் வெவ்வேறு மெட்டு. இவ்வாறு பல்லவி தரும் இந்த இசைப்புதிருக்குள் நாம் நன்றாகச் சிக்கிக்கொள்கிறோம்.

3. பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் இடையே வேதிச்சேர்மங்களின் கட்டுமானங்களைப் போல் இறுக்கிக் கட்டிவிடுகிறார் இளையராஜா. அவற்றுக்கு நடுவில் எங்கே கோடு போடுவது என்று நாம் திகைக்க வேண்டி வருகிறது. ”பொன்மாலைப் பொழுது, வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள், இது ஒரு பொன்மாலைப் பொழுது” – அனுபல்லவி வைத்தாரா இல்லையா இனிமேல்தான் அனுபல்லவி வருமா என்று நாம் குழம்பும்படியான கட்டமைப்பு. அத்தகைய அமைப்பில் அனுபல்லவி பாடலிலிருந்து விலகிச் சென்று தனியே தெரியாது. ஒன்றுக்குள் ஒன்றாக முயங்கிக்கிடக்கும்போது பாடலின் மெட்டுக்கு வலிமை கூடுகிறது. ஒவ்வொரு பாடலையும் எடுத்துக்கொண்டு இதில் எது அனுபல்லவி என்று எண்ணிப் பாருங்கள். 

4. பல்லவியின் வரிகளை மட்டுமே ஒரே மெட்டுக்குள் அமைக்காமல் மாற்றி மாற்றி அமைக்கிறாரா ? இல்லை. ஒரு வரியின் நான்கு சொற்களுக்குள்ளேயும் வெவ்வேறு மெட்டுகளைத் தருவதும் இளையராஜாவின் பாடற்சிறப்பு. ”கண்ணே கனியே முத்தே மணியே” என்று ஒரே மெட்டமைப்பில் செல்லலாம். அப்படிச் செல்லாமல் ஒவ்வொரு சொல்லுக்கும் வெவ்வேறு மெட்டு. இதற்கு நல்ல எடுத்துக்காட்டு – சிட்டுக்குருவி படத்தில் வரும் ‘என் கண்மணி’ என்ற பாடல். இன்னொன்று – எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன், அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம் குளிர் மேகங்கள் பனிக் காலங்கள் பெற வேண்டும் சுகங்களே – இந்தப் பாடலில் எந்தச் சொல்லும் ஒரே மெட்டுக்குள் தொடர்ந்திருக்காது. ஏறும் இறங்கும் மாறும் மீறும் எல்லாம் நடக்கும்.   

5. கண்ணதாசனின் மிகச்சிறந்த பாடல்கள் யாருடைய இசையமைப்பில் எழுதப்பட்டவை ?  விசுவநாதன்-ராமமூர்த்திக்கும் மகாதேவனுக்கும் எழுதப்பட்டவை என்று அடித்துச் சொல்லலாம். கண்ணதாசன் பாட்டெழுத வருகிறார் என்றால் அந்தப் பாடற்சிறப்புக்கான  முதலிடத்தைப் பெரும்பாலும் கண்ணதாசனே பெறுவார். இளையராஜாவிற்குக் கண்ணதாசன் எழுதிய பாடல்களில் அத்தகைய சிறப்பைப் பெற்றாரா ? துணிந்து சொல்ல முடியவில்லை. ஏனென்றால் இளையராஜா தந்த மெட்டுகள் ஒரே இயைபான தத்தகாரத்தில் அமையவில்லை. அதற்கு மேற்சொன்ன இரண்டு காரணங்கள்தாம் காரணம். “தான னன தனனா” என்று அடுத்தடுத்து நான்கு வரிகளுக்குக் கொடுத்தால் கண்ணதாசன் பின்னியெடுத்துவிடுவார். “பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா கோவில்கொண்ட சிலையா கொத்துமலர்க் கொடியா” என்று படியேறுவார். இளையராஜாவின் மெட்டுகள் அப்படி அமையவில்லை. மேற்சொன்னவாறு ஒற்றைச் சந்தத்திற்குள் அமையாத மெட்டுகள். கண்ணதாசன் வாலி போன்றவர்களைத் தம் மெட்டுகளால் இளையராஜா போட்டிக்கு அழைத்தார் எனலாம். என்னதான் மடித்து மடித்து மெட்டுகளைத் தந்தாலும் ”நேரமிது நேரமிது ! நெஞ்சில் ஒரு பாட்டெழுத ! இன்பம் என்னும் சொல் எழுத… நீ எழுத… நான் எழுத… பிறந்தது பேரெழுத” என்று கண்ணதாசன் புலமை காட்டினார். இவ்வாறு மூத்த பாடலாசிரியர்கள் இடம்பெற்றபோதும் பாடற்சிறப்புக்குத் தம்மை முதலிடத்திற்குக் கொணர்ந்தார் இசைஞானி.

6. பல்லவி முடிந்ததும் சரணம் தொடங்குவதற்கு முன்பாக அந்தப் பாடலின் முதல் பின்னணி இசைக்கோப்பு வருகிறது. பல்லவிக்குள் நம்மை இழுத்துத் தள்ள முன்னிசையைப் பயன்படுத்தியதைப்போல் சரணத்திற்குள் நம்மை இழுக்க முதல் பின்னணி இசையை அமைக்கிறார். ‘நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னால் தெரியுமா’ பாடலின் பல்லவி முடிந்ததும் ஒரு பின்னணி இசை வருகிறது. அது பல்லவியைப்போல அமையப் போகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்க தாளக்கட்டுக்குள் நுழைகிறது பாட்டு. சரணத்தின் தாளக்கட்டு அந்த முதற்பின்னணி இசையில் கோத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாடலின் முழு உருவத்தையும் முதற்பின்னணி இசை முடிந்த பிறகுதான் நாம் கணிக்கவே முடியும். அதற்கும் முன்னால் அந்தப் பாடலைப் பற்றி ஏதேனும் முன்கணிப்பிற்கு வந்திருந்தால் நாம் தோற்பது கட்டாயம்.

7. பெரும்பாலான பாடல்களில் பாடகர்களின் குரல்கள் தவிர்த்து ஏதேனும் ஒரு புதுக்குரலைப் பயன்படுத்தி ஈர்த்தார். “செவ்வரளித் தோட்டத்திலே உன்ன நினைச்சேன்” என்ற பாடலில் “ஆடும் அலை ஓயாதம்மா… ஆசை அது தேயாதம்மா… வாடை பட்டு நின்னாளம்மா வாசம்பட்ட பூவாட்டம்… மனசுல கொண்டாட்டம்… மலருற செண்டாட்டம்” என்று ஒரு நாட்டுப்புறக் குரல் வருகையில் பாடல் தொடும் உயரம் முற்றிலும் வேறு. தாலாட்டுதே வானம் பாடலில் “ஏ ஹொய்யா ஹொய்யா ஹொய்யா…” என்னும் குரல் மீனவர் ஓடத்திற்கு எத்துணைப் பொருத்தம் ! ’அட மச்சமுள்ள மச்சான்’ பாடலின் ”நாதரதனா திரணனா”வை மறக்க முடியுமா ? ’பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா’ பாடலில் “மலைமேல மழையடிக்க… மாந்தோப்பில் குடைபிடிக்க… ஆவாரங் காட்டுக்குள்ள… ஆயிரம்பூ பூத்திருக்க… மங்காத்தா காத்திருந்தா… மாமனோட பூப்பறிக்க” என்ன ஒரு கற்பனை ! ’அந்தி மழை பொழிகிறது’ பாடலில் வரும் அந்த மூத்த குரல். ’காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ போன்ற சில பாடல்களின் இடையே தோன்றும் தாலாட்டு வரிகள். பாடலை நினைவூட்டுவதும் நீங்காமல் நிலைக்கச் செய்வதுமான அழகிய தனிச்சுவடுகள் இவை.        

8. பேச்சுமொழியின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட வரிகளோடு இளையராஜாவின் பாடல்கள் அமைந்தன. புலமைத்திறத்தோடு ஏதேனும் பாடல்வரி எழுதப்படுவதை ஏற்றிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. “உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வெச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வெச்சேன் நெத்தியிலே நெத்தியிலே பொட்டு வெச்ச காரணத்தைப் புரிஞ்சுக்க ராசா விட்டுப் போனா உதிர்ந்துபோகும் வாசனை ரோசா” – இதுதான் பாட்டு வரி. பேச்சு மொழியை அப்படியே பாட்டு மொழியாக்கிய கலைத்திறம். “ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனைப்புத்தான்” – இதற்கும் மேல் எளிமைக்கு எங்கே செல்வது ? “ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது” – இதற்கும் மேல் கவிதைக்கு எங்கே செல்வது ? இளையராஜாவின் பாடல்களில் இலங்கிய பேச்சு மொழியும் எளிமையும் ‘டைட்டானிக்’ கப்பலை உள்ளூர்த் துறைமுகத்தில் கொண்டுவந்து நிறுத்திய வியப்பைத் தந்தன.

9. பாடல் வரிகளின் மொழியில்தான் எளிமையே தவிர இசைக்கருவிகளின் ஒலிக்கட்டுமானத்தில் எளிமையே இல்லை. ‘வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே’ என்னும் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். சரணத்தின் பின்னணி இசையை உங்களால் குறிப்பெடுக்க முடிகிறதா என்று பாருங்கள். “மன்னன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் பாவையல்ல பார்வை பேசும் ஓவியம்” என்று தொடங்கும் சரணத்தின் பின்னிசை ஒலிக்கோவையை நானும் பன்முறை கேட்டுவிட்டேன். தேர்ந்த கணக்காசிரியர் பெருங்கணக்கு ஒன்றை வழிவழியாக எழுதி விடையை நிறுவுவதுபோல் செல்கிறது அந்தப் பாட்டு. ஒவ்வொரு பாட்டிலும் எத்தனை தடவை கேட்டாலும் கண்டுபிடிக்க முடியாத நுண்கோவை ஒன்றைப் பொருத்திவிடுகிறார்.  

10. பாடல் முடிந்ததும் அது நம் மனச்செவியில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. கேட்டவுடன் மறந்துவிடும் ஒன்றாக அவருடைய பாடல் இருப்பதில்லை. இசைக்கென்று விளங்கும் இலக்கணங்கள் யாவும் அவர்க்கு ஐயந்திரிபறத் தெரிகிறது. அந்தக் கோட்டுக்குள் நின்றவாறு தம் பாடலைக் கட்டுவதால் இயல்பாகவே ஒவ்வொரு பாடலும் செம்மைச் செதுக்கம்தான். ’இந்தப் பாடலை எங்கோ கேட்டிருக்கிறோமே’ என்று நாற்பது ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும் நினைவூறி நிற்கின்ற பாடல்களாக அவை இருக்கின்றன. அதனால்தான் இளையராஜா காலங்கடந்து வாழ்கிறார் ! இனி என்றும் வாழ்வார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

Admin

மனிதன் விளைவித்த முதல் பயிர் எது?

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

ஜகமே தந்திரம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடல்… எங்கே ..? எப்போ தெரியுமா?

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

Leave a Comment