நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள் – நூல் மதிப்புரை

SHARE

முன்னுரை, என்னுரை, பதிப்புரை என எதையும் பொருட்படுத்தாமல் “கதைகளை” மட்டுமே முன்னிறுத்தியிருக்கும் புத்தகம். 

வழக்கமாக ஒரு சிறுகதைத் தொகுப்பென்றால்,  அந்த தொகுப்பில் உள்ள ஏதோ ஒரு கதையின் தலைப்போ அல்லது எழுத்தாளரின் பெயரோ தான் புத்தகத்தின் பெயராக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பைத் தேடினாலும் கிடைக்காது.

”நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலி கொடுத்துவிட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப்போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும் என….

போர்க்களம்போல காட்சியளிக்கும் நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்தான் அனுதினமும் வந்து கொத்துக்கொத்தாக குவிகிறார்கள். அவ்வாறு குவிகின்றவர்களின் இறுதி நம்பிக்கையும் அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் நுணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படும்போது, சிவப்புநிறக் கட்டிடங்களான இவை எனக்கு, குறிஞ்சிநில முருகன் அமர்ந்திருக்கும் செங்கோட்டு யானைகளாகவும், அசுரர்களின் ரத்தத்தால் மூழ்கிப்போன அதன் கூர்மையான தந்தங்களாகவும்தான் தெரிகின்றன.

நகரமே உறங்கும் ஒரு நள்ளிரவில், பகலில் தான் குத்திக் கிழித்த மனிதர்களைப் பற்றி, வழக்கு ஆவணங்களின் பின்னால் மறைந்திருக்கும் அவர்களின் வஞ்சகமற்ற வாழ்க்கையைப் பற்றி, ஒருவேளை இந்தக் கட்டிடங்கள் புரட்டிப் பார்க்குமானால்… அது தான் இந்தக் கதைகள்”

என  “நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்” எனும் தலைப்பைக் கொண்ட இப்புத்தகத்திற்கு விளக்கமளித்துள்ளார் ஆசிரியர். புத்தகத்தின் பெயரும், அட்டைப் படமும் அத்தனை பொருத்தம்.

எட்டு கதைகளும் வெவ்வேறானாலும்,  அவற்றை ஒன்றிணைப்பது புத்தகத்தின் தலைப்பு தான். 

“பட்டாளத்தார் இறந்துவிட்டார்: அந்நிலையே இறந்தார் எனப்படுதல் நன்று” எனும் கதையில் முதல் ஒன்றரை பக்கத்திற்கு வரும் வரிகள் எழுத்து மாறாமல் கதையின் முடிவிலும் வரும். ஆரம்பத்தில் அந்த வரிகளை வாசித்தபோது இருந்த மனநிலைக்கும் கதை முடிந்து மீண்டும் அதே வரிகளை இறுதியில் வாசிக்கும்போது இருக்கும் மனநிலைக்கும் அத்தனை வித்தியாசம். “யோசித்துப் பார்த்தால் பட்டாளத்தாரும் அந்த மரியாதைக்கு உரியவர்தானே?” என்ற கேள்வியுடன் முடிந்த அந்த பக்கத்தில் “ஆம்” என எழுதி, அதைத் தொடர்ந்து “கண்மூடி அமர்ந்திருக்கிறேன். நினைவின் நிழலில் பட்டாளத்தார் திண்ணையில் அமர்ந்து நண்பர்களுடன் சிரித்துக் கொண்டிருக்கிறார்” என எழுதி வைத்திருக்கிறேன்.

தெளிவாகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு கொலை, அதனால் உண்டான இழப்புகள், அந்த கொலைகாரனுக்கும் கொல்லப்பட்டவனுக்கும் அந்த தருணத்திலிருந்த எண்ணவோட்டங்கள் என விரியும் இரண்டாவது கதையான “வினயன்: பகை அச்சம் பழியென நான்கும்”.

மூன்றாவது கதையான “அமீரின் நாட்குறிப்புகள்: கொலைக்களத்து மாலை” வாசித்து முடித்தபோது “மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தளே” எனும் பாடல் வரிகள் ஒலித்தது தற்செயல் எனத் தோன்றவில்லை.

“மூன்று பெண்கள்: செய்தக்க செய்யாமை யானும் கெடும்” எனும் ஐந்தாவது கதையில் “காதலில் அவள் வென்றும் அவன் தோற்றும் போன” தம்பதியினருக்கிடையே வரும் விவாகரத்து வழக்கு ஒன்று. அவ்வழக்கைப்பற்றி மட்டுமல்லாமல் அதனால் பாதிக்கப்பட்ட கதைமாந்தர்களின் வாழ்க்கைச் சூழலும், அவர்களுள் உண்டான மாற்றங்கள், ஏக்கம், ஆசை, ஆற்றாமை, கொலை என நீள்கிறது கதை.

அதிகாரத்தின் அராஜகத்தால் தன் வாழ்க்கையே மாறிப்போகும் ஒருவனின் கதை தான் “7-மார்ச்-2018: நிழல்தன்னை அடிவிட்டு நீங்காது” எனும் ஆறாவது கதை. 52 பக்கங்கள் கொண்ட இக்கதை 6 குறு பாகங்களைக் கொண்டது. ‘பதினேழு மாதங்களுக்குமுன் ஒருநாள் மதியம்’, ‘ஏழு நாட்களுக்குமுன் ஒரு இரவுநேரம்’, ‘நான்கு மணிநேரத்திற்கு முன்பு’, ‘ஆறு மாதங்களுக்கு முன் ஒருநாள் மாலை’ எனச்சொல்லி ஒவ்வொரு பாகமும் முடிந்தாலும் கதையோட்டத்தில் எந்தத் தடையுமில்லாதது எழுத்தின் அழகு.

“சோபியா: மறத்தலைவிடக் கொடியது வேறில்லை” எனும் ஏழாவது கதை எப்போதும் நமக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, கிளர்ந்தெழச்செய்து, ஆர்ப்பாட்டம், போராட்டம்,  முகநூல், ட்விட்டர், புலனத்தில் பதிவுகள் மூலம் கண்டனங்கள் தெரிவித்து, ஒரு வாரமோ ஒருமாத காலமோ முக்கியச் செய்தியாக தொலைக்காட்சிகளில் வலம்வந்து, பின் அதை நாம் மறந்து, அன்றாடங்களுக்குள் புதைந்துபோயிருக்கும் போது, மீண்டும் அதே போல ஒரு சம்பவமும், மேற்சொன்ன அத்தனையும் நடந்து, பின் மறதியும் வந்து சேருமே!! அது போன்ற இரு வழக்குகளின் கதை.

“பொச்சுக்கிள்ளி: இன்முகம் காணும் அளவு”என்றும் மூன்றாவது கதையும், “நான்கு பேர்கள் இரண்டு சம்பவங்கள்: நாடொறும் நாடு கெடும்” எனும் எட்டாவது கதையும் மேற்சொன்ன கதைகளிலிருந்து சற்று மாறுபட்டவை. 

“பொச்சுக்கிள்ளி: இன்முகம் காணும் அளவு” எனும் கதைகளில் பட்டப்பெயர்களுக்கான பெயர்க்காரணங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையிருக்கும். 

“நான்கு பேர்கள் இரண்டு சம்பவங்கள்: நாடொறும் நாடு கெடும்” எனும் எட்டாவது கதையில் “பாசிச பொங்கல்” கிண்டப்படும்போதும், தலைப்பில் இருக்கும் நான்காவது குற்றவாளியை நாம் கண்டுகொள்ளும்போதும் வெடித்துச் சிரித்தால் எழுத்தாளருக்கு மானசீகமாக ஹைஃபை சொல்லுங்கள்.

”யதார்த்தவாதக் கதைகளின் காலம் முடிந்துவிட்டது என்றும், இது கடற்கரை மணல்களைப் பற்றியும், காஃபி ஷாப்களின் டேபிள்களைப் பற்றியும் எழுதும் பின்நவீனத்துவ எழுத்தின் காலம் என்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பவர்களை கொஞ்சம் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் பக்கமாக அழைக்கிறேன். சீனத்து உழவர்களை “எழுதப்படாத தாள்கள்” என்று மாவோ சொல்வார் அல்லவா.  அவர்களைப்போல எத்தனை எத்தனையோ மனிதர்கள் அங்கு உங்களுக்கு அறிமுகமாவார்கள்…

இந்தக் கதைகள் அந்த எழுதப்படாத தாள்களில் ஒன்றில்தான் எழுதப்பட்டுள்ளது என்று நான் சொல்ல வரவில்லை; அப்படியொரு நம்பிக்கையும் எனக்கு கிடையாது. ஆனால் “படைப்பு சுதந்திரம்” என்று சொல்லிக்கொண்டு நீங்கள் எழுதும் கதைகளில் வரும் ஆண்குறிகளை விட,யோனிகளைவிட, புராண இதிகாசக் குப்பைகளை விட இவர்கள் கொஞ்சம் பொருட்படுத்தத் தக்கவர்கள்தான் என்று மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்” – என்கிறார் ஆசிரியர். இதையே நானும் வழிமொழிகிறேன் யுவர் ஆனர்.

நூல்: நகர்துஞ்சும் நள்யாமத்தில் செங்கோட்டு யானைகள் எடுத்துப் படித்த VIII தஸ்தாவேஜ்கள்

ஆசிரியர்: பாவெல் சக்தி

வெளியீடு: எதிர் வெளியீடு 

பக்கங்கள்: 376

விலை: ரூ. 399/-

– நிவேதிதா அந்தோணிராஜ்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

ஓரு அடி ஆழத்தில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கக் காதணி!. ஆதிச்சநல்லூரில் அடுத்த ஆச்சரியம்!.

தற்குறி – என்றால் என்ன?

சிற்ப இலக்கணம். பகுதி 3: தொழிற் கை முத்திரையின் வகைகள் (1-4)

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

ரோசாப்பூ என்று ஏன் ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப்படுகின்றது?

Admin

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்

Admin

கீழடி அகழாய்வில் கிடைத்த குத்துவாள்..!!

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

காஞ்ச அய்லய்யா எழுதிய ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ – நூல் அறிமுகம்!.

இரா.மன்னர் மன்னன்

கால்நடை என்ற சொல் ஏன் மனிதர்களுக்குப் பொருந்தாது?.

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

Leave a Comment