இன்று எழுத்தாளர் கல்கி அவர்களின் 123ஆவது பிறந்த நாள். அவரைப்பற்றிய சில நினைவலைகள்.
கல்கியின் சாதனைதான் என்ன..? அவர் ஒரு இலக்கியவாதியா..? நூறாண்டு கடந்தும் அவர் கொண்டாடப்படுவதன் மந்திரம்தான் என்ன..?
”சரித்திரத்தின் பெருமையை அடுப்பறை பெண்களும் எட்டிப்பார்க்கும் நிலையை உருவாக்கியவர் கல்கி” – என்றார் அறிஞர் அண்ணா.
உண்மைதான்.பெரும் ஆய்வாளர்கள் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த வரலாற்று உலகின் வாசலை வெகு சாமானியனுக்காக திறந்து விட்டவர்.
1950 – கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் தொடர் ஆரம்பம் ..
ஒரு அத்தியாயத்தில் இவ்வாறு கூறுவார்.
”பிற்காலத்தில் கோப்பரகேசரி என்னும் பட்டத்துடன் சோழசிங்காதனம் ஏறப்போகும் உத்தமச்சோழரை நேயர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.. இந்த கோபரகேசரி என்னும் வார்த்தையின் பரிட்சயம் நீலகண்ட சாஸ்திரி போன்ற ஆய்வாளர்கள் மட்டுமே அறிந்த ஒன்று. ஆனால் பொன்னியின் செல்வன் வந்தப்பிறகு சரித்திரம் சாதரண மக்களுக்கும் சொந்தமானது. அன்றைய காலத்தில் நந்தினி கொண்டை மிகவும் வைரலாம். இன்றைக்கும் பிரபல பதிப்பகமான வானதி பதிப்பகம் பொன்னியின் செல்வன் நாயகி வானதி ஏற்படுத்திய தாக்கம்தான்”.
1899 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி மயிலாடுதுறை அருகே புத்தமங்கலம் என்னும் கிராமத்தில் கல்கி பிறந்தார். இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. பெற்றோர்: இராமசாமி – தையல் நாயகி..இவரது மனைவி பெயர் கல்யாணி. தன் பெயரை மனைவியின் பெயருடன் இணைத்து கல்கி ஆனார்.
கல்கி அவர்கள் எழுதியவை 9 நாவல்கள். 9 நாடகங்கள். 10 பெருங்கதைகள். 119 சிறுகதைகள். 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள்.
இவர் எழுதிய அலைஓசை நாவல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது.
கல்கி தனது பள்ளிக்காலம் முதலே விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார்.1921ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.1927ல் நவசக்தி பத்திரிக்கையின் துணை ஆசிரியரானார். பின்பு 1930ல் ஆனந்த விகடனில் சேர்ந்தார். கல்கி என்ற பெயரில் இவரது எழுதிய முதல் படைப்பு.
” ஏட்டிக்குப் போட்டி “
தமிழ்மகன் – குகன் – அகத்தியன் – பிராமண இளைஞன் – விவசாயி – பெற்றோர் – எமன் – லாங்கூலன். இவைகள் எல்லாம் இவரது புனைப்பெயர்கள்.
தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகள் பிரபலமாக இருந்த அக்காலத்தில் தமிழ் இசையை முன்னெடுத்தவர் கல்கி. எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து இதற்கான பல நிகழ்வுகளை முன்னெடுத்தார். எம்.எஸ். அவர்கள் நடிப்பில் உருவான மீரா திரைப்படத்திற்கு கதைவசனம் எழுதினார், அதே படத்தில் இவர் எழுதிய காற்றினிலே வரும் கீதம் என்னும் பாடல் இன்றும் பிரபலம்.
1941 ல் ஆனந்த விகடனில் இருந்து விலகினார். எம்.எஸ் அவர்கள் நிதியுதவி செய்ய, சதாசிவம் அவர்கள் முன்னெடுக்க, ரசிகமணி டி.கே.சிதம்பர முதலியார் அவர்கள் உற்சாகமூட்ட, 1941 ல் கல்கி இதழை ஆரம்பித்தார் கல்கி.
1941 அக்டோபர் 16 ம் நாள் பார்த்திபன் கனவு என்னும் வரலாற்று நாவல் கல்கியில் தொடராக ஆரம்பம் ஆனது. அது 1943 பிப்ரவரி மாதம் நிறைவுற்றது..
ஒரு முறை கல்கியும், ரசிகமணி டி.கே.சி.யும் மாமல்லபுர கடற்கரையில் அமர்ந்துள்ளனர். அப்போது கல்கி,
”விதியின் எழுத்தை கிழிச்சாச்சு விட்டகுறை வந்து தொட்டாச்சு” என்ற புகழ் பெற்ற கவிதையைச் சொல்லி. ”சிற்பிகளின் பேச்சுக்குரலுடன் அவர்களின் உளியின் ஓசையும் எனக்கு கேட்கிறது. ஒவ்வொறு சிற்பமும் உயிர் பெற்று எழுகிறது.பல்லவர்களை எழுத வேண்டும்” – என்றாராம்.
1944 – ஜனவரி 1ல் சிவகாமியின் சபதம் தொடர் ஆரம்பமானது. 1946 ஜூன் 30ல் முடிந்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 70,000 பிரதிகள் என்னும் மிகப்பெரும் இலக்கை கல்கி இதழ் அடைந்தது. ”முற்றும் என கொட்டை எழுத்தில் போட்டேன். என் 10 வருட பாரம் இறங்கியது” – என்றார் கல்கி. ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் சிவகாமியின் சபதத்தை பாரமாக சுமந்துள்ளார்.
1950 – அக்டோபர் 22 அன்று கல்கி வார இதழில் ஒரு எளிமையான விளம்பரம்.. ”ராஜராஜ சோழனின் இளம் பிராயத்தில் சோழநாட்டில் நடந்த சரித்திரக் கதை.. அடுத்தவாரம் முதல்.. பொன்னியின் செல்வன்..”
1950 – அக்டோபர் 29.. பொன்னியின் செல்வன் ஆரம்பம் ஆனது..சோழ வரலாறு என்னும் மிகப்பெரும் சரித்திர வாயில் சாமான்யனுக்காக திறந்தது. வாசிப்போனின் கரங்களை பிடித்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பின்னோக்கி அழைத்துச் சென்று வீரநாரயண ஏரிக்கரையில் நம்மை இறக்கி விட்டார் கல்கி. அன்று ஆரம்பமான அந்த வீரநாரயண ஏரிக்கரைப் பயணம் இன்றும் தொடர்கிறது.
அங்கேதான் நமது நண்பன் வந்தியதேவனின் அறிமுகம் கிடைக்கிறது.. அவனுடன் சேர்ந்தே நமது பயணமும் துவங்குகிறது. சோழ வரலாற்றின் கதவு திறக்கிறது. வாசிப்பது வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பே என்னும் மனநிலை எளிதாகவே நம்மை ஆக்ரமிக்கிறது..
அன்று ஆரம்பித்த பொன்னியின் செல்வனின் தாக்கம் 71ஆண்டுகள் கடந்து இன்றும் தொடர்கிறது.
1950 ல் அறிமுகமான கனவு நாயகன் வந்தியதேவன் இன்றும் அதே மிடுக்கோடு இருக்கும் அதிசயம்..
எது வரலாறு..? எது புனைவு.? என்று இன்றும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம்… பொன்னியின் செல்வனை நேசிப்போரும், விமர்சிப்போரும், இருவருக்குமான விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. பொன்னியின் செல்வன் பாத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.
பொன்னியின் செல்வன் வெற்றிக்கு என்னதான் காரணம்..? பல நிகழ்வுகள் உள்ளன.
சரியான வரலாற்று ஆதாரங்களில் இருந்து சம்பவங்களை எடுத்தார் கல்கி. கடுந்தமிழ் தவிர்த்து எளிய பழகு தமிழ் மூலம் வாசகர்களை கவர்ந்தார் என்கிறார் கல்கியின் பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ்..
என் தாத்தாவின் அளப்பரிய அர்ப்பணிப்பே பொன்னியின் செல்வன் என்கிறார் கல்கியின் பேத்தி லட்சுமி நடராஜன்…
கல்கியின் ஆஸ்தான ஓவியர் மணியம். இக்காலத்தில் ஓவியர் மணியம் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பொன்னியின் செல்வன் பிறந்த காலத்தில் மணியனுக்கு செல்வனும் பிறந்தான் என்றார் கல்கி.
அதுவே பெயராகி மணியன் செல்வனும் மிகச்சிறந்த ஓவியர் ஆனார்.
கல்கி வசித்த அடையாறு வீட்டில் இரவு நேரத்தில் எழுதுவார். ஓவியர் மணியம் அவர்களுடன் ஆலோசித்து அவ்வார ஓவியங்களை வரையச் செய்வார். ஒவ்வொறு வாரமும் இரண்டு அத்தியாயங்கள். 16 பக்கங்கள். ஐந்து ஓவியங்கள் என்று வகைப்படுத்துவார்..
கோட்டோவியம், நீர் வண்ண ஓவியம், என்று பலவாறு அமர்க்களப்படுத்தினார் மணியம்.. ஒவ்வொறு அத்தியாயத்தின் தலைப்புக்கேற்றவாறு ஒரு ஓவியம் இருக்கும்.. பருந்தும் புறாவும் என தலைப்பு.. பருந்து புறா ஓவியம் இருக்கும். ஐயனார் கோவில் என்று தலைப்பு.ஐயனார் கோவில் பற்றிய ஓவியம் இருக்கும். கல்கியின் வசீகர எழுத்து. எளிய நடை , மெல்லிய உரையாடல் , எதார்த்தமான சம்பவங்கள் , எளிய கருத்தாழமிக்க வசனங்கள் இழையோடும் நகைச்சுவை. இப்படி எல்லாமே சரியாக அமைந்ததால்
பொன்னியின் செல்வன் சிகரம் தொட்டது..
1950 அக்டோபர் 29ல் தொடங்கி 1954 மே 16ல் பொன்னியின் செல்வன் நிறைவு… என்னாது..? முடிஞ்சிடுச்சா..? என்றுதான் ஒட்டுமொத்தமாய் குரல்கள் எழும்பின.
உத்தமச்சோழருக்கு பட்டம் சூட்டிய பிறகு அருள்மொழி என்னவானார்.? வந்தியத்தேவன் எங்கே சென்றார்..? – இதுபோன்ற பல கேள்விகள் எழுந்தன.
( இன்றளவும் இக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கப் பெறவில்லை.)
வெகு சாமர்த்தியமாய் இக்கேள்விகளை எதிர் கொண்டார் கல்கி. பொன்னியின் செல்வன் முடிவுரையில் பதிலும் கூறினார்.
இதன் பிறகு பொன்னியின் செல்வன் ஐந்து முறை கல்கி வார இதழில் தொடராக வந்தது..
1950 – 1954 வரை மணியம் ஓவியம்.
1968 – 1972 வரை வினு ஓவியம்.
1978 – 1982 வரை மணியம் ஓவியம்.
1998 – 2002 வரை பத்மவாசன் ஓவியம்.
2014 முதல் வேதா ஓவியம்..
1954 டிசம்பர் 5ல் பொன்னியின் செல்வன் புத்தகமாய் வெளிவந்தது.
1999 ல் கல்கியின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டன.. பொன்னியின் செல்வன் விஸ்வரூபம் எடுத்தது. பல பதிப்பகங்கள் போட்டியிட்டு பொன்னியின் செல்வனை பதிப்பித்தன.
அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் இடம் பெற்று விற்றுத்தீர்வதே இதற்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கிகாரம். இதோ… இவ்வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படமாக வர இருக்கிறது.
கல்கி அவர்கள் மிகச்சிறந்த விடுதலைப் போராட்ட வீரராய் இருந்துள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இவர் எழுதிய தியாகபூமி நாவல் திரைப்படமாய் வெளிவந்தது. அப்படத்தில் தேசபக்கிப்பாடல்கள் மிகுதியாக இருந்ததால் அப்படத்தை தடை செய்யலாம் எனத் தகவல் கிடைத்தது. இயக்குனர் சுப்ரமணியமும் எஸ்.எஸ்.வாசனும் அப்படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காட்டினார்கள். தொடர்ந்து அப்படம் திரையிடப்பட்டது.
இந்தியா விடுதலைப்பெற்றது. ஆகஸ்டு 17 வரவேண்டிய கல்கி இதழ், ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று வெளிவந்தது .
கல்கி மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். மெல்லிய நகைச்சுவை அவர் எழுத்துக்களில் இழையோடும். “வர வர என் கையெழுத்து மிக மோசமாய் உள்ளது. கம்போசிடருக்கு புரிந்தால் சரி” என்று எழுதினார். அவரது உடல்நிலை மிகுந்த மோசமடைந்தது. மருத்துவரின் பரிசோதனை அறையிலிருந்து வெளிவருகிறார். எழுத்தாளார் பகீரதன்,
என்னாயிற்று என்று கல்கியிடம் கேட்க…
ஒன்றுமில்லை என்கிறார் டாக்டர் – என்றார் கல்கி
சந்தோசம்தானே – என்றார் பகீரதன்.
சிரித்தபடி கல்கி கூறுகிறார். ஏதாவது இருந்தால் நான் குணமாகலாம். என்னிடம்தான் ஒன்றுமில்லையே..
டிசம்பர்..5. 1954.
கல்கி மறைந்தார்.
மீ.ப.சோமு அவர்களின் தலையங்கத்தோடு அவ்வார கல்கி இதழ் வந்தது. இதழ் முழுவதும் கல்கிக்கு புகழஞ்சலி செலுத்தும் கவிதைகள். கட்டுரைகள்.
புத்தேனரி ரா.சுப்ரமணியன் இவ்வாறு எழுதுகிறார்..
” மாய்ந்ததே வசன மேதை!
மறைந்ததே ஹாஸ்ய ஜோதி!
காய்ந்ததே தமிழ்ப்பூஞ் சோலை!
கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம்
உடைந்ததே, கண்ணீர் வெள்ளம் பாய்ந்ததே
கல்கி வைத்த பயிரெல்லாம்
செழிக்குமாறே…”
கல்கி ஒரு சகாப்தம்.
நேற்றும்… இன்றும்… நாளையும்…
- மா. மாரிராஜன்.