இன்று நாம் பணத்தை எளிமையாக பயன்படுத்துகிறோம். இந்த பணம் எப்போது தோன்றியது? பணம் என்ற ஒன்று வருவதற்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது? பணம் என்ற ஒன்று வந்த பிறகு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டது? பணம் என்ற ஒன்று எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்து நம்மிடையே வந்தது? பணத்திற்கு பதிலாக நாம் பயன்படுத்திய பொருள்கள் என்னென்ன? தங்கம், வெள்ளி, வைரம், பண்டைய காசுகள், உலக வரலாற்றில் பணம் என்ற ஒன்று எப்படியெல்லாம் இருந்தது? அவற்றின் வரலாறு எப்படி இருந்தது? எந்தெந்த காலத்தில் என்னென்ன பொருட்களை கடந்து வந்துள்ளோம்? – என்பதையெல்லாம் இந்த நூலைப் படிக்கும் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது.
வங்கி என்ற ஒன்று எப்போது வந்தது? எதனை அடிப்படையாக வந்து வங்கி தொடங்கப்பட்டது? பணத்தாள்களுக்கு எப்படி மதிப்பு கூடியது? – போன்ற பல கேள்விகளுக்கு ஆசிரியர் விரிவாக விடையளித்துள்ளார்.
பணத்தின் பயணம் என்ற தலைப்பும் மிகவும் பொருத்தமாகவே இருந்தது படித்து முடிக்கும் பொழுது, எத்தனை நிலைகளை கடந்து இன்று நாம் பணம் என்ற ஒன்றை பயன்படுத்தி வருகிறோம் என்பதை உணர்ந்த பொழுது வியப்பாகத்தான் இருந்தது.
பணம் என்று வந்துவிட்டால் இதில் அரசியலும் இருக்கத்தான் செய்யும். ஆசிரியர் இரா.மன்னர் மன்னன் அவர்கள் இதில் உள்ள அரசியலை தெளிவாக விளக்கியுள்ளார். கறுப்பு பணம் என்றால் என்ன? ஜி.டி.பி என்றால் என்ன? ஒரு நாட்டின் பொருளாதாரம் எதனை வைத்து கட்டமைக்கப்படுகிறது? இவற்றை நாம் எப்படி புரிந்து கொள்வது? பங்குச் சந்தை என்றால் என்ன? பொருளாதார கொள்கைகள் என்னென்ன உள்ளது? இதற்குள் என்னென்ன தில்லு முல்லு உள்ளது? மக்களை எப்படி அதிகாரத்தில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.
மோடி அவர்கள் அறிவித்த பணமதிப்பு நீக்கம் பற்றியும், பண மதிப்பு நீக்கத்தில் இருந்த பொய்கள், இவற்றில் இருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்பது வரை பல சான்றுகளுடன் ஆசிரியர் எளிமையாக எடுத்துரைத்துள்ளார்.
ரோத்சைல்டுகள் பற்றி மிகவும் விரிவாக ஆய்வு செய்து ஆசிரியர் எழுதியுள்ளார். ரோத்சைல்டுகள் என்பவர்கள் யார்? பணம், வங்கி போன்றவை இவர்களின் கட்டுப்பாட்டுக்கு எப்படி வந்தது? என்று படிக்கும் பொழுது ஆசிரியர் உலகப் பொருளாதாரம், உலக அரசியலை நோக்கியும் எழுத்து வழியாக அழைத்துச் செல்கிறார். நிறைய இடங்களில் நகைச்சுவையான பகுதிகளும் உள்ளது.
”ரோமானியர்களின் தங்க வெள்ளி நாணயங்களே பல்லவர்கள் ஆட்சிக் காலம் வரையில் தமிழகத்தில் புழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் ரோமானியர்கனின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தினுடைய வாணிபம் பெரும் தேக்கத்தை சந்தித்தது. தங்கமும் வெள்ளியும் வேறுபல வணிகங்கள் மூலம் பெறப்பட்டன. ஆனால் இப்போது தங்கமும் வெள்ளியும் முன்புபோல நாணயங்களாகக் கிடைக்கவில்லை, நாணயங்கள் குறைவாக இருந்ததால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல்லவர்களுக்குப் பின் வந்த பிற்கால மூவேந்தர்களுக்கு செலாவணிக்கு தங்க, வெள்ளி நாணயங்கள் தேவைப்பட்டன. தேவையினால் பிற்காலத் தமிழக மூவேந்தர்களில் பாண்டியர்களும் சேரர்களும் மிக அரிதாக தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர்.
இதுவரையிலான நாணயவியல் ஆய்வுகளில் பிற்காலப் பாண்டியர்களின் ஐந்துக்கும் குறைவான தங்க நாணயங்களே கிடைத்து உள்ளதால், அவர்கள் மிக மிக அரிதாகவே தங்க நாணயங்களை வெளியிட்டதாகக் கருத முடிகின்றது, இதுவரை பிற்காலப் பாண்டியர்களின் ஒற்றை வெள்ளிக்காக மட்டுமே கிடைத்து உள்ளது” – ஆகியவை நூல் கூறும் செய்திகள்.
நாணயங்கள் பற்றிய பல புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ”பாண்டிய அரசர்களின் நாணயங்களில் காணப்படும் கோட்டுருவ மீன் சின்னமானது சிந்து சமவெளி முத்திரை, கற்கால ஓலியம், சங்ககாலப் பானை ஓடுகள் ஆகியவற்றோடு ஒத்துள்ளது. இது தமிழரின் தீண்ட வரலாற்றுக்குச் சான்றாக உள்ளது” – என்பது போன்ற பல குறிப்புகளையும் ஆசிரியர் கூறியுள்ளார்.
பிட்காயின் பற்றி சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். அடுத்தடுத்து எழும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கமாக இந்த பகுதி அமையும். ”பிட்காயின்களுக்கு மதிப்பு எங்கிருந்து வருகின்றது? என்று கேட்டால் அதற்கான எளிய பதில், அமெரிக்க டாலர்களுக்கு எங்கிருந்து மதிப்பு வருகிறதோ அங்கிருந்துதான் என்பதாகும்” – என்பது போல நிறைய விளக்கங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் உள்ளன.
ஏ.டி.எம் முதல் கிரெடிட் கார்டுகள் வரையிலானவற்றின் வரலாறையும் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இந்த பொத்தகத்தில் மொத்தம் 60 தலைப்புகள் உள்ளது. எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து படிக்கலாம். அதாவது வரிசையாக படிக்க வேண்டும் என்ற தேவை இல்லை. எப்படி படித்தாலும் புரியும் என்று கூறுகிறேன்.
பணத்தின் வரலாறு தொடங்கி, பொருளாதாரம் சார்ந்த அறிவையும் ஆசிரியர் வாசகர்களுக்கு கடத்தியுள்ளார். இது மட்டும் தானா என்று கேட்டால் அதுதான் இல்லை. பணம் தொடர்புடைய பல துறைகளை நன்கு ஆராய்ந்து மிகவும் விரிவாகவே ஆசிரியர் எழுதியுள்ளார். படிப்பதற்கு மிகவும் எளிமையான நடை. இந்தப் பொத்தகத்தை படிப்பதற்கு முன்பு வேறு எதையும் படித்திருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும், வாசகர்களுக்கு எப்படி ஒரு தகவலை கொடுத்தால் அது சென்றடையுமோ அந்த அளவுக்கு எளிமையாக விளக்கியுள்ளார். பல தகவல்களையும், நிறைய புரிதல்களையும் கொடுக்க கூடிய பொத்தகம் இது.
பொத்தகம்: பணத்தின் பயணம்
ஆசிரியர்: இரா.மன்னர் மன்னன்
பக்கங்கள்: 488
விலை: ₹500
பதிப்பகம்: பயிற்று பதிப்பகம்
நூலை வாங்கவும் பிற ஐயங்களுக்கும்: +91 89250 95553 (பயிற்று பதிப்பகம்)
– யாழினியன் (முகநூல் பதிவு)