சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டியில் கடந்த 08.05.2022-ல் “செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்” தொடங்கப்பட்டது. தொடங்கியவர் கண்டவராயன்பட்டியை சேர்ந்த S.L.S.பழனியப்பன். இவர் சிறு வயது முதலே பொதுநலத் தொண்டாற்றி வருபவர். தமிழ் வரலாற்றிலும், பழமையிலும், நாட்டுக்கோட்டை நகரத்தார்(செட்டியார்) வரலாறு மற்றும் வாழ்வியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.


அரிய பொருட்களை பேணிக்காத்து மக்களுக்கு காட்சிபடுத்துவதே அருங்காட்சியகம். அந்த வகையில் இந்த அருங்காட்சியகத்தில் 120 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கணக்கு ஓலைச்சுவடிகள், பழைய கணக்கு புத்தகங்கள், தமிழ் எண்களுடன் கூடிய பழைய பேரேடுகள், நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமண சீர் வரிசைப் பொருட்கள்,கலைப் பொருட்கள், பழைய திருமண பத்திரிகைகள், பழைய முத்திரைத்தாள்கள், பத்திரங்கள், கடிதங்கள், நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மண்பாண்டங்கள், ஆச்சிமாரின் கைவினைப் பொருட்கள், அரிய புகைப்படங்கள், சுதந்திரத்திற்கு முன்பு முதல் தற்போது வரை உள்ள நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பிரசுரமான தமிழ் நூல்கள், செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படங்கள், செட்டிநாட்டு 76 ஊர் பெயர்ப்பலகை புகைப்படங்கள், நகரக் கோயில்களின் புகைப்படங்கள். நகரத்தார் திருமண முறைகளைக் கூறும் வகையில் பிரத்யேகமாக ஓவியர்களைக்கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் என பற்பல அரிய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இன்னும் நிறைய பொருட்கள் காட்சிப்படுத்த தயாராக உள்ளன.












சோழ மன்னன் தனமகுடவைசியரான நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்கு மூன்று உரிமைகளை கொடுத்துள்ளான் என்கிறது வரலாற்று நூல்கள். அதன் படி முதல் உரிமை மன்னருக்கு முடிசூட்டுதல், இரண்டாம் உரிமை வீடுகளில் சிங்கக்கொடியை பறக்கவிடுதல், மூன்றாம் உரிமை வீட்டின் உச்சியில் அரண்மனையில் இருப்பது போல் தங்கக்கலசம் வைத்திருத்தல். இதை பின்பற்றி இந்த அருங்காட்சியக கட்டிடத்தின் உச்சியில் தங்கமுலாம் பூசிய கலசம் வைத்துள்ளனர். மன்னருக்கு வணிகர் முடிசூட்டும் பிரத்யேக ஓவியமும் காட்சிக்கு வைத்துள்ளனர்.




மேலும் இங்கு ஒரு நூலகம் உள்ளது அதில் நகரத்தார் வரலாறு மற்றும் வாழ்வியல் தொடர்பாக இதுவரை வெளிவந்த நூல்களும், நகரத்தார் சமூக மாத இதழ்களும் உள்ளன. ஒருவர் நகரத்தார் தொடர்பான முனைவர் பட்ட ஆய்வு செய்வாராயின் இந்த நூலகம் அவருக்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.










அருங்காட்சியகம் காலை 10மணி முதல் மாலை 4மணி வரை செயல்படுகிறது. ஒருவருக்கு 25ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர்.


-பழ.கைலாஷ்.