ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நாட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னணி என்ன?
பிரேசிலில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அந்த பெண் மற்றும் அவரது கணவர் பைக்கில் உலகை சுற்றும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 66 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.
இதுவரை சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாக அவர்களது சமூக ஊடக பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவுக்கு வருகை தந்த இவர்கள் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட பின் இறுதியாக ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பிகார் வழியாக நேபாளம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருந்தது.
மார்ச் 1ஆம் தேதி இரவு, அவர்கள் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் கூடாரத்திற்குள் நுழைந்து, அந்த பெண்ணின் கணவரை தாக்கி, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் நடந்ததைக் கூற, அவர்கள் மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று, குற்றவாளிகள் அடையாலம் காணப்பட்டு, இதுவரை 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் கண்ணீர் வீடியோ வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
https://www.instagram.com/reel/C4AE0nlPeto/
நாட்டிற்கே அவமானத்தை ஏற்படுத்தும் இது போன்ற இழிவான செயலில் ஈடுப்பட்ட குற்றவாளிகளுக்கு எப்படிபட்ட தண்டனையை அரசு வழங்கப்போகிறது என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Written by Gowsalya