பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் தனது மொபைல்போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுதொடர்பாக பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான வானதி சீனிவாசன், குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்றவர்கள்கருத்து எதுவும் தெரிவிக்காதது குறித்து பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதனிடையே நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பெயர் குறிப்பிடாமல் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இணையவாசி ஒருவர் ட்விட்டரில் குஷ்புவின் ஐடியை குறிப்பிட்டு ‘பாஜக பெண் தொண்டர்களின் நிலை உண்மையாகவே பரிதாபத்திற்குரிய நிலைல தான் இருக்கு. அவங்களுக்கு ஆதரவா நீங்க எல்லாம் முன் வரனும்ன்னு நினைக்கிறோம்’ என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு பாஜக கட்சியை சேர்ந்த யாராவது ஒரு பெண் யார் மீதாவது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளாரா? என கேள்வியெழுப்பியுள்ளார். கட்சி சார்ந்து மட்டுமல்லாமல் எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம்.
மேலும் இது தொடர்பாக கேள்வி கேட்பவர்களை கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு தனக்கு கேள்விகளை முன் வைப்பதாகவும் குஷ்பு அந்த பதிலின் போது விமர்சித்துள்ளார்.
1 comment
[…] பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகா… […]