தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இடைவெளியில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
முந்தைய படமான அயலான் ‘அறிபுனை’ (அறிவியல் புனைவு – Science Fiction) கதையாக வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது டீசருக்கே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது அடுத்த படமான அமரன்.
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இராணுவ வீரராக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் டைட்டிலும், டீசரும் வெளியானது. காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
பிரச்சினை என்ன?
இந்த நிலையில், இந்த படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் வெடித்துள்ளது.
திருநெல்வேலியில் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனின் உருவ பொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருவதால் அமரன் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
படக்குழு சொல்வது என்ன?
படமே ரிலீசாகாத நிலையில், படத்தை முடிவு செய்வது தவறாகும் என்றும், முழு படத்தை பார்த்தால் தான் புரியும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படுவதோடு கமலஹாசனுக்கு இந்தியா கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கக் கூடாது என்றும் கோரிக்கைகள் வைத்து போராட்டங்கள் தொடங்கியுள்ளன.