மகசூல் – பயணத் தொடர்- பகுதி 3

க
SHARE

தேவையான பொய்

இட்டார்ஸி சைல்டு ஹெல்ப்லைன் டெஸ்க்கில் திரு.ஜோஜு வர்கீஸ் அவர்களை சந்திக்க வேண்டும். இவர் வளவன் அண்ணா (யாரென்று கடைசி பக்கத்தில் விவரிக்கிறேன்) வின் நண்பர். இப்போது வரை எனக்கு இவரைப் பற்றி தெரிந்தது இவ்வளவே. 

அடுத்து சென்னை கிளம்பும் வரையில் எனக்கு மத்திய பிரதேசத்தில் தெரிந்தவர்கள் என்ற பட்டியலில் முதலிடம் இவருக்குத்தான். 

இவரைச் சந்திப்பதுதான் அடுத்த திட்டம். இதற்கிடையில், யாரோ ஒரு அம்மா அருகில் வந்து ஏதோ கேட்க, நான் தட்டுத் தடுமாறி தமிழில் பதில் பேசியதையிட்டு ஏதோ திட்டாத குறையாக பேசிக்கொண்டே போனார். எப்படி அடுத்த நாட்களைக் கடத்தப் போகிறேன் என்ற பயம் வந்தது. இவ்வளவு சீக்கிரம் இந்த பயம் வந்திருக்க வேண்டாம். ஆனால், வந்துவிட்டது.  இதோ சைல்டுலைன் பூத்தும் வந்துவிட்டது. 

உரத்த கைகள், வயது ஒரு 40 ஐ ஒட்டிய தோற்றம் , எதிர்பார்த்ததை போலவே பன்மொழி பரீட்சயம், தலைமைக்குரிய தலை என பார்க்க அம்சமாக இருந்தார். 

நேராக, ரயில் நிலையம் விட்டு ஒரு அலுவலகத்துக்கு சென்றோம். இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். இந்தியில் என்னை அறிமுகம் செய்தார். ( என்னைத்தான் என்று தெரிகிறது. என்ன சொல்கிறார் என்பதை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை) 

ஒன்றில் அவர் தெளிவாக இருந்தார் என்பதை மட்டும் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.  

அது “இவனுக்கு இந்தி பேச வராது. ஆனால் இந்தி பேச வைக்க முடியும்” என்ற அவரது எண்ணம். 

அறிமுகம் செய்ததன் முடிவில் இவன் ஒரு இந்தி எக்ஸ்பர்ட் இந்தியில் பேசுங்கள் என்றார். உடனே, அந்த பெண்ணும் என்னிடம் ஏதோ ஆத்தா என்று ஆத்த ஆரம்பித்தார். 

நான் தமிழ்நாடு சே ஹூ என்றேன். அவர் சிரித்த படி அருகில் இருந்த இன்னொரு பெண்ணிடம் ஆங்கிலத்தில் சொன்னார். He is from tamilnadu but ஜோஜு  says he is a hindi pandit. 

எனக்கு  ஒன்றுதான் புரியவில்லை. நான் இந்தி பண்டிட் ஆக இல்லாதது, பிரச்சினையில்லை. தமிழ்நாட்டில் இருந்து வந்த யாருமே இந்தி பண்டிட் இல்லையா என்ன? 

முந்தைய பகுதிகளைப் படிக்க:

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 2

மகசூல் – பயணத் தொடர்- பகுதி 1

பேச்சு தொடர்ந்தது. நான் ஆங்கிலத்திலேயே கொண்டு செல்ல முயற்சித்தேன். ஆனால் இந்தியில் பேசுங்கள் என்பது ஜோஜு சாரின் கட்டளை. 

டீ வந்தது. எனக்கு டீ குடிக்கும் பழக்கமில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டேன். சுக்ரியா என்ற நானறிந்த இந்தி வார்த்தையை பயன்படுத்துவதற்காக. 

உள்ளே ஒரு கண்ணாடி அறையில் உட்கார்ந்திருந்த ஜோஜு, உரத்த குரலில், “நான் ஹிந்தியில் பேச சொன்னால், நீ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறாய்” என இந்தியில் சொன்னார். 

அதற்கு அந்த பெண் சொன்ன மறுமொழி தான் , இந்த நாளுக்கான என் தேவையாக இருந்தது. 

ஹீ இஸ் சோ எந்த்து.. ஹீ வில் லேர்ன் சூன்… யாருமில்லாத மண்ணில், நம் இருத்தலை நம்பிக்கையை உறுதி செய்ய சில பொய்கள் போதுமானவை. அவற்றில் ஒன்றுதான் இது. 

நல்லவேளையாக இதை இந்தியில் சொல்லாமலிருந்தார்.  

வாழ்க்கை வேறொன்றாக தெரியத்துவங்கும் நேரம் என்று வாசித்திருக்கிறேன். இப்போது அதைத்தான் அனுபவிக்கிறேனோ என்று தோன்றுகிறது. 

எனக்கு தெரிந்த இந்தியின் அளவை அவர் (ஜோஜு) புரிந்துகொண்டார். அதனால் இவனைத் தனியே விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். 

தங்குவதற்கு வளவன் அண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். முதல் பயணம் என்பதால் முதல் சில நாட்களுக்கு இப்படிக் கொஞ்சம் பாதுகாப்பான ஏற்பாடு. 

அங்கு அழைத்துப்போய், தங்குமிட ஏற்பாடுகள் முடித்து, மொழிப்பிரச்சினைக்கு சில சிறப்பு வசதிகள் செய்து தந்து (தேவைப்பட்டால் ஆங்கிலத்தில் எழுதி வரவேற்பு கூடத்துக்கு அனுப்பலாம்) பத்திரமாக இருக்க வைத்துவிட்டு கிளம்பினார். 

நான் அறையை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினேன். ஒரே ஒரு தெரிந்த முகமும் கிளம்பியாயிற்று. இனி யுத்தமோ, ரத்தமோ நானும் இந்த நகரமும் மட்டுமே.

நாளை நடக்கப்போகும் சம்பவங்கள் சிலவற்றை முன்பே கணித்து, அதற்கு தேவையான எளிமையான இந்தி வாசகங்களை தயார் செய்து படித்துக்கொண்டேன். இப்போது இது சரிதானா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.

சரி..கிளம்பு.

யாரென்று தெரியாதவர்களிடம் தப்புத்தப்பாக இந்தியில் வழிகேட்டேன். போகப்போவதில்லை என்று முடிவுசெய்த ஓட்டலுக்கும், தேவைப்படாத ஏடிஎம் க்கும்.

பரவாயில்லையே! இந்தியில் சமாளிக்க முடிகிறதே என்ற எண்னம் ஒரு கடையில் வந்தால், ஐயையோ பெருங்கஷ்டம் என்ற எண்ணம் அடுத்த கடையில் வந்து விடுகிறது. இப்படியே கழிந்த ஒரு 40 நிமிட நடைபயணத்தில், கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.  இதற்கிடையில் சென்னை அசோக் பில்லரை நினைவு படுத்தும் வகையில் ஒரு ஸ்தூபி இருந்ததை பார்த்தேன். 

சொல்ல மறந்துவிட்டேன். இத்தனையும் ஒரு நல்ல மழை பொழிவின் போது நடந்துகொண்டிருந்தது. நானும் மழையோடு மழையாக மத்திய பிரதேசத்தில் என் முதல் இரவை கொண்டாடிக் கொண்டிருந்தேன். (ஆம். மத்திய இந்திய மண்ணில் இந்த மதராசி கலக்க முயன்று தோற்று தன்னைத்தானே வியந்தும் நொந்தும் முயங்கிக் கொண்டிருந்தேன் ) 

(பயண ஏற்பாட்டின் போதே மழையில் செல்போனுடன் நனைய ஏதுவாக பிரத்யேக உறை வாங்கி வந்திருந்தேன். )   

ஒரு சாலையோரக் கடையில் சாப்பிட்டு விட்டு ( பூரி+சப்ஜி ) திரும்பிவரும் வழியில் ஏதோ ஒரு கோயிலை பார்த்தேன். ராமரா கிருஷ்ணரா என்பதில் குழப்பம் இருந்தது. நெருங்கிப் போகும்போது வில்லேந்திய இருவர் அருகில் ஒரு பெண் இருப்பதை பார்த்து உறுதி செய்துகொண்டேன்.  மிக அருகில் சென்றபோது அடியில் அமர்ந்திருந்த ஆஞ்சநேயர் மீதத்தை புரியவைத்தார். 

வழிபாட்டின் வடிவங்கள், ஆலய அமைப்பும் முற்று முழுதாக மாறியிருந்தன. ஆனாலும் வழிபடுபவர்களின் தேவை மாறவில்லை என்பதை உணர முடிந்தது. நான் சென்றிருந்தது விநாயகர் சதுர்த்தி சமயம் வேறு. அந்த 30 நிமிட சுற்று நடையின் போது குறைந்தபட்சம் 10 விநாயகர் சிலைகளையாவது பார்த்திருப்பேன். கோலாகலமாக இருந்தது.  

நாளை காலை கெஸ்லா எனும் கிராமத்தில் பழங்குடி மக்களைச் சந்திப்பதாக திட்டம் உறுதியானதையடுத்து உறங்கப்போனேன். இரவு 10.19 மணி படுத்துவிட்டேன்.

இந்தியாவுக்கும் முக்கியமான இரவு

ஆனால், எனக்கு மட்டுமல்ல. அன்றைய தினம் இந்தியாவுக்கும் முக்கியமான இரவுதான். இரவு 1 மணி இருக்கும். சங்கு சத்தம் கேட்டு விழித்தேன்.. பிறகுதான் தெரிந்தது அது ரயில் ஒலி என்று. ( ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்தது என் அறை ) உறக்கத்தில் எந்த சத்தமும் என்னை எழுப்ப முடியாது என்ற என் குடும்பத்தின் நம்பிக்கை இன்று பொய்த்துப் போனது. அம்மாவிடம் சொல்ல வேண்டும்.

கொஞ்சம் பசிப்பது போல தெரிந்தது. 

“அபி முஜே கானா சக்தே ஹே” னு இந்தில கேட்டாலும் “சோறு கிடைக்குமா” னு சொக்க தமிழ் ல கேட்டாலும்,

ஒரு மணிக்கு ஒன்னும் கிடைக்காது போன்னுதான் சொல்வாங்க. ஆனாலும் போனேன். 

சரி ஒரு மணிக்கு இந்த வீதியில் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று தேட கிளம்பியாச்சு. போலீஸ் ரோந்து வந்தா என்ன சொல்றது. இந்த ஊர்ல தான் போலீசுக்கும் இங்கிலீஷ் பஞ்சாயத்து ஆச்சே. (தமிழ்நாடு மட்டும் என்னவாம்னு கேக்காதீங்க)

சரி போவோம். ஒருவேளை ரோந்து போலீஸ் புடிச்சா விளக்க முயற்சி பண்ணுவோம். முடியலன்னா அதிகபட்சம் ‘41’ போடலாம்.. பெயர் எழுதி வாங்கிட்டு விட்டுடுவாங்க.. 

ஆஹா. இதெல்லாம் தமிழ்நாட்லதானே. இங்கேயும் அதுதானா? இல்ல மாறுமா? பசி மறந்தே போய்டும் போல. அவ்ளோ குழப்பம்.

இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தேன். கிளம்பிப் போவோம். ஒருவேளை போலீஸ் இருக்குறது உள்ளுணர்வுக்கு தப்பா பட்டா திரும்பிடுவோம். இல்லன்னா ரயில்வே ஸ்டேஷன் வரை போய் ஏதாவது சாப்பிடுறோம் என எனக்கு நானே முடிவு செய்து கொண்டு கிளம்பினேன்.

யாரும் இல்லை.. ஆமாம்.. யாருமே இல்லை. தெருநாய் கூட மழைக்கு ஒதுங்கி ஒரு பாவ் பஜ்ஜி கடையின் பாய்க்குள் பதுங்கியிருந்தது. 

அப்போ ஒரு அசோக் பில்லர் பாத்ததா சொன்னேனே. அந்த பில்லர பாத்தேன். ( ஆமா.. பக்கத்துல இருக்குற இடத்துக்குதா அப்போ அவ்வளவு நேரம் சுத்திருக்கேன்) 

பில்லர் கிட்ட நின்னப்போ பாத்தேன். கொஞ்ச தூரத்துல, நான் நினைச்சபடி போலீஸ் ரோந்து. சிலரை வண்டியில நிறுத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க.. குறுக்கு வழி ஒன்னு இருக்கு (இரவு நடந்தபோது கண்டுபிடித்து இருந்தேன்).  ஆனாலும் அவங்க பார்வையில படும்படி தான் வெளிய வரணும்.. 

யோசிச்சு பாத்தேன். நேரங்கெட்ட நேரத்தில் இது புத்திசாலித்தனமான முடிவு இல்லன்னு தோணுச்சு. அப்டியே பில்லர ஒரு போட்டோ எடுத்துட்டு திரும்பினேன்.. 

திரும்பி அறைக்கு வந்தேன். என் வரலாற்றில் எப்படி இந்த நாளோ, அதேபோல இந்திய வரலாற்றிலும் இந்த நாள் பிரிக்க முடியாத இடம் பிடிக்க தயாராகி கொண்டிருந்தது.. 

ஜூலை 22ம் தேதி கிளம்பி, 48 நாள் விண்வெளி பயணத்திற்கு பிறகு, உலகிலேயே முதல் முறையாக, நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் இறங்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. 

பாரத பிரதமர் தூங்காமல், பள்ளி மாணவர்களோடு சேர்ந்து இதனை பார்வையிடுவதாகத் தகவல் வந்திருந்தது.. 

சூரிய ஒளியே படாத, கனிமங்களின் தூய மூலமான தென்துருவ ஆய்வுக்கு இஸ்ரோ 4 காரணங்களை அடுக்கியிருந்தது. 

அதில் இரண்டு, ஆய்வின் காரணமா அல்லது விளைவா என்றே உறுதி செய்ய முடியாதவை. 

  1. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து அறிய முடியும்.. (அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும்) 
  1. இனிவரும் நாடுகள் தென்துருவத்தை ஆய்வு செய்ய நினைத்தால், அந்த ஆய்வில் இந்தியா முன்னோடியாக விளங்கும். 

சரி.என்னவோ…

மத்திய பிரதேசத்தின் முதல் நாள் இரவு சந்திரயான்2 வெற்றிக்கு சமர்ப்பணமாகட்டும்.. 

(கலைஞர் தொலைக்காட்சி இரவு முழுக்க சக்ஸஸ் சந்திரயான் என்று நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது..)

நேரம் போகிறது. காலை 10 மணிக்கு கெஸ்லா கிராமத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் இப்போது தூங்குவதுதான் பிரதானம். 

பார்க்கவிருப்பது வேறொரு இந்தியாவை.. படுத்து தூங்குகினேன்… ஆனால் விடியும் பொழுது இப்படி விடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – விநோத வரலாறு: பாகம் 2.

Admin

”மரணத்துக்கு முந்தைய அமைதி!” மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 1.

இரா.மன்னர் மன்னன்

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 2

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

1 comment

அரவிந்தன் வே September 8, 2021 at 4:25 pm

அந்த விடிந்த பொழுதுகளை வாசிக்கும் ஆவலோடு….

Reply

Leave a Comment