3 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. திமுக ஜாபர் சாதிக்கை நீக்கியுள்ளது. பாஜக இது குறித்து பலமுரை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என்கிறது. யார் இந்த ஜாபர் சாதிக்… இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?
யார் இந்த ஜாபர் சாதிக்:
குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை. இதில் ‘கயல்’ ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தயாரிக்கிறது ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ். இந்த படத்தின் தயாரிப்பாளர்தான் ஏ.ஆர். ஜாபர் சாதிக். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இந்த மங்கை படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டார்.
மக்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா நெருக்கமானவராக அறியப்படும் இவர், முன்னதாக இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இதில் நாயகனாக நடித்த மைதீன் இவரது சகோதரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மைதினும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்று முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போதைப்பொருள் கடத்தல் வெளிவந்தது எப்படி?
கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து 50 கிலோ போதைப் பொருளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு கடத்த முயன்ற மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர். தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் போதை பொருளை கடத்த முயன்றது அம்பலமானது.
விசாரணையில் இந்த கடத்தலுக்கு பின் மூளையாக செயல்பட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிய வர, தமிழ்நாட்டில் விசாரணை தொடங்கியது. இதன் விளைவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக என்பவரும் அவரது கூட்டாளிகளான மைதீன், சலீம் ஆகியோரும் இணைந்து கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
திமுக நிர்வாகி:
இவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பதவியில் செயல்பட்டு வந்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை வெளிவந்த பிறகு, கட்சியீன் அடிப்ப்டை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதே சமயம், பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை குறித்து பேசும்போது, “திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே போதைப்பொருள் புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.