ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

SHARE

ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில், பழங்குடியின மக்களுக்கு எதிரான மனநிலை கொண்ட காவல் ஆய்வாளர் கதாப்பாத்திரம் தொலைபேசியில் பேசும்போது,  பின்னே உள்ள 1995ஆம் ஆண்டின் காலண்டரில் அக்னி சட்டி உள்ளது. பொதுவாக அக்னி சட்டி குறியீடு வன்னியர் சங்கங்களின் காலண்டர்களில்தான் காணப்படும் என்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜெய்பீம் திரைப்படத்தில் வட்டார வழக்கில் வசனங்களை மாற்றியமைக்க உதவியவர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். இதற்காக படத்தின் டைட்டில் கார்டில் அவருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் இந்த சர்ச்சை குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விரிவான பதிவை இட்டார். அந்தப் பதிவு: 

“விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வாகவே எனக்கு விருப்பம். சினிமாவின் மீது எனக்கு எப்போது ஈடுபாடு இருந்ததில்லை.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் என் வீட்டுக்கு வந்தார். இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டாரமொழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆகவே பிரிதியில் மாற்றித்தாருங்கள் என்றார்.

எனக்கு பரிச்சயமில்லாத துறையாக என்னைத்தேடி வந்ததால் தயக்கத்தோடு சம்மதித்தேன்.

எனக்கு காட்டப்பட்ட பிரதியில் படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய “எலிவேட்டை” என்றே இருந்தது. உரையாடல்களும் சற்றேறக்குறைய இப்பகுதியின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு சொன்னேன்.

மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாக தெரியவில்லை. அந்த பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் சொன்னார்.

அந்த உரையாடல் தொடர்பான சிறு வேலைக்காக எனக்கு ஐம்பதாயிரம் பணம் கொடுத்தார்கள். பிறகொருநாள் படம் திடுமென பெயர்மாற்றம் பெற்று “ஜெய்பீம்” என விளம்பரம் வந்தது.

படத்தை பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தததை மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்கு தெரியாமல் இது நடந்திருக்காது என்பது மாதிரி தொடர்ந்து அழைப்புகள் விசாரிப்புகள்.

நண்பர்களுக்கு சொல்லிக்கொள்வது இந்த படத்தில் வட்டார உரையாடல் தொடர்பாக மிக சொற்ப வேலையை மட்டுமே நான் செய்திருக்கிறேன். மேலும் என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் கலசம் போன்ற குறியீடுகளெல்லாம் அப்போது அதில் இல்லை, மீறி இருந்திருந்தால் நிகழ்விற்கு சற்றும் பொருத்தப்பாடு இல்லாத அந்த பகுதியை நீக்க சொல்லியிருப்பேன். அல்லது நான் விலகியிருப்பேன்.

தற்கால அரசியல் சூழலை கருத்திற்கொண்டு படத்தின் வியாபாரம், விறுவிறுப்பிற்காக எல்லோரையும் போல நிகழ்விற்கு சற்றும் தொடர்பில்லாத வன்னியர் வெறுப்பு அரசியலை கையிலெடுத்திருக்கிறார் போலும்.

எல்லா சாதியிலும் மோடுமுட்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். வன்னியர்களிலும் அந்த ஆய்வாளர் போன்று இருக்கவும் கூடும். அதற்காக ஒரு சமூகத்தின் குறியீடான அக்கினிக் கலசத்தை பின்னணியில் காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் வன்முறையாளராக கொலையாளியாக காட்ட முயல்வது மிக மோசமான மனநிலையே.

இத்தனைக்கும் உண்மை நிகழ்வில் அந்த காவல் ஆய்வாளர் வன்னியரில்லையென ஆதாரத் தகவல்களோடு சொல்கிறார்கள். மனசாட்சியை முற்றும் அடகு வைத்துவிட்டு வேறொரு சமுதாயத்தை சேர்ந்தவர் செய்த கொலைக்கு வன்னியரை அடையாளம் காட்டியிருக்கிறார்.

படம் சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். முற்றும் கண்டுகொள்ளாமல் புறந்தள்ளப்பட்ட இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பெருந்துயரை ரத்தமும் சதையுமாக சொல்கிறது என்கிறார்கள். வாழ்த்துகள்

.அதேசமயம் தூக்கிவிட்டு ஈரக்குலையில் குத்தியது போன்று எனக்கு நன்றியும் தெரிவித்துவிட்டு இன்னமும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கிக்கிடந்து வன்முறையாளர்கள் என்கிற அவப்பெயரோடு கூடுதலாய் கொலையாளிகள் என எங்களை சித்தரிக்கிற தங்களின் (இயக்குநரின்) சராசரி செயலைத்தான் என்னால் அங்கீகரிக்க இயலவில்லை.

எதிர்வரும் காலத்திலாவது சமாசம்பந்தமில்லாத வன்னியர் வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் படமெடுக்க எங்கள் குலதெய்வம் முதனை செம்பையனார் தங்களுக்கு அருள்புரிவாராக” – என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து பலரும் இந்தப் பதிவை பகிர்ந்ததோடு, குறிப்பிட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆய்வாளர் வன்னியர் இல்லை எனும்போது, ஏன் அவரை அப்படிக் காட்டினார்கள்? – என்ற கேள்வியையும் பரவலாக முன்வைத்தனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து மீண்டும் ஒரு பதிவை கண்மணி குணசேகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், ‘சற்று முன்னர் “ஜெய்பீம்” திரைப்படத்தின் இயக்குநர் அலைபேசியில் பேசினார். சம்பந்தப்பட்ட காட்சி பீரியட் காட்சியாக எடுக்கையில் ஆர்ட் சைடில் தவறுதலாக அந்தக் காலண்டர் வந்து விட்டது எனவும் அதற்கு ஏதும் உள்நோக்கம் இல்லையென்றும் சொன்னார் .இதனால் ஏற்பட்ட எனது சிரமங்களை அவர் உணர்வதாகவும் வருத்தப்படுவதாகவும் கூறினார். குறிப்பாக தான் ஏதும் உள்நோக்கத்தோடு எடுக்கவில்லை. அப்படியிருந்தால் தங்களைத் தேடி ஊருக்கு வந்திருக்க மாட்டேன் என்றார்.

நேற்றைக்கே இக்காட்சி தொடர்பான இக்கட்டை உணர்ந்து சம்பந்தப்பட்ட காலண்டரை தொழில்நுட்பரீதியாக ‘சாமி’ காலண்டராக மாற்ற டெல்லியில் உள்ள அமேசான் அலுவலகத்துக்கு சொல்லிவிட்டதாகவும் மாற்றிய பிரதி அப்டேட் ஆக இரண்டொரு நாள் ஆகுமெனவும் அதிகபட்சம் மூன்று நாட்களில் திருத்தப்பட்டக் காலண்டர் காட்சியோடு வந்து விடுமெனவும் உறுதியளித்தார். உணர்வுகளை புரிந்துகொண்ட இயக்குநருக்கு நன்றி’ எனக் கூறி உள்ளார்.

இதனால் குறிப்பிட்ட காட்சி குறித்த சர்ச்சை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மனி ஹெய்ஸ்ட் வெப் தொடர் – அடுத்த சீசன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

Admin

தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

கோ பேக் ராமர்… நாடகமாடினாரா பெண் துறவி? நடந்தது என்ன?

Pamban Mu Prasanth

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

பிரபலமான இந்தியப் படங்களில் முதலிடத்தில் மாஸ்டர்!

Admin

3ஆவது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் – குவியும் வாழ்த்து

Admin

நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல்..!!

Admin

குடும்பம் தான் முக்கியம்… பிக்பாஸ் இல்லை : ஜி.பி.முத்து அதிரடி

Admin

40 திருமணம் கூட செய்துகொள்வேன்: கடுப்பான வனிதா விஜயகுமார்

Admin

Leave a Comment