இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்னும் அதிமுக, பாஜக, திமுக கூட்டணிகள் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று முதல் மனுத்தாக்கல் செய்யலாம்.
நீங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டுமானால் செய்ய வேண்டியது என்ன?
விண்ணப்பம்: மக்களவை தேர்தலில் போட்டியிடப் படிவம் 2A-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தல் எனில் படிவம் 2B-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வாக்குமூலம்: வேட்பு மனு தக்கல் செய்யும் போது படிவம் 26-கீழ் தன் மீது உள்ள வழக்குகள் விவரங்கள், பான் எண், சொத்து விவரங்கள், கடன், தொழில், கல்வித் தகுதி போன்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றைச் சரியாகச் செலுத்தி வருவதற்கான ஆவணங்கள், 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வருதற்கான சான்றிதழ் போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியல் கட்சிக்குக் கீழ் நிற்கும் வேட்பாளர்கள் படிவம் A மற்றும் படிவம் B-ஐ வேட்பு மனுவுடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும் தேர்தல் டெபாசிட் செய்ய வேண்டும். இதுவே எஸ்சி, எஸ்டி என்றால் இந்தக் கட்டணத்தில் 50 சதவீதம் டெபாசிட் செய்தால் போதும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது டெபாசிட் தொகைக்கான வரைவோலை (டிமாண்ட் டிராஃப்ட்) இணைக்க வேண்டும்.
உறுதிமொழி: மேலே கூறிய விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதற்கான உறுதியை அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுக் கையெழுத்திட வேண்டும்.
வேட்புமனுத் தாக்கல் செய்பவருக்கு 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், உடன் வர 4 பேருக்கு மட்டுமே அனுமதிக்க வழங்கப்படும். தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். விடுமுறை நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாது.
வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பிறகு அதற்கான ஒப்புகை படிவம் 6, தேர்தல் நடத்தை விதி படிவம் 9, தேர்தலில் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற விவரங்கள் போன்றவற்றை வேட்பாளர்களைத் தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வேட்பாளர் தங்களது மாதிரி கையொப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர் பெயர் வேறு தொகுதியில் உள்ளது என்றால் அதற்கான அத்தாட்சி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.