பிரசாரத்தில் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. நாளேடுகள், மின்னணு, வானொலி மற்றும் கேபிள் டிவி போன்ற ஊடக பிரசாரங்களைப் போலவே சமூக ஊடகங்களுக்கும் விதிகளை ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான மீடியா சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு (MCMC) அந்தந்த மாநிலங்களுக்குப் பொறுப்பாக இருக்கும். அனைத்து வகையான அரசியல் விளம்பரங்களையும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு முன் MCMC இன் அனுமதியைப் பெற வேண்டும்.
அனுமதி பெற்று, மாதிரி நடத்தை நெறிகளை பின்பற்றிய பின்னரே அவற்றை பிரசாரத்தில் பயன்படுத்த வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
சமீப காலமாக வாட்ஸ்அப் பயனர்கள், ‘விக்சித் பாரத்’ என்ற பெயரில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்திறன் குறித்து கருத்துத் தெரிவிக்கும் பிடிஎஃப்களுடன் செய்திகளைப் பெறுகின்றனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டபோதிலும் அந்த செய்திகள் தொடர்வதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து இதற்கான பதில் வந்தது. “இந்தச் செய்திகள் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அனுப்பப்பட்டவை. மேலும் இது அமலுக்கு வந்தவுடன் பிரசாரம் நிறுத்தப்பட்டது. சில செய்திகள் தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க் தடங்கல்கள் காரணமாக மொபைல்களை தாமதமாக சென்றடைகின்றன,” என்று அது கூறியது.