மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

SHARE

சட்டமேதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ’பீமாராவ் ராம்ஜி அம்படவேகர்’ என்ற இயற்பெயரோடு 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இன்றைய மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ் என்னும் கிராமத்தில் பிறந்தார். (அவர் பிறந்த இடம் கடந்த 2003ஆம் ஆண்டில் ‘டாக்டர் அம்பேத்கர் நகர்’ – என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.) ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் தம்பதியினருக்கு 14 ஆவது குழந்தை அவர். 

மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்ட “மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பம் இவருடையது என்பதால், இவர் பள்ளியில் படிக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்.

அந்தக் காலத்தில் மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார் என்றும், இதனால், தன்னுடைய குடும்பப் பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்படவேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று அண்ணல் மாற்றிக்கொண்டார் என்றும் நெடுங்காலமாக ஒரு கதை உள்ளது. ஆனால் அந்தக் கதைக்கு சான்று எதுவும் இல்லை. 

அதே சமயம் 1900ஆவது ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியில் சத்தாரா அரசுப் பள்ளியில் 6 வயது பிவா-வை (பிவா – என்பது பீமாராவ் அம்பேத்கரின் செல்லப் பெயர்) சேர்க்கும் போது, குடும்பப் பெயராக ’அம்படவேகர்’ என்பதையே அவரது அப்பா ராம்ஜி கொடுத்து உள்ளார். அந்தக் குடும்பத்தின் பூர்வீக கிராமமான ’அம்படவே’ என்ற கிராமத்தைக் குறிக்கக் கூடியதாக அந்தப் பெயர் இருந்தது.

அதே பள்ளியின் 1914ஆம் ஆண்டின் ஆவணத்தில் அவரது பெயர் ‘பிவா அம்பேத்கர்’ என்று மாற்றப்பட்டு உள்ளது. அந்த ஆவணத்தை சத்தாரா பள்ளி நிர்வாகம் இன்றும் பாதுகாத்து வருகின்றது. இப்படியாக அம்பேத்கரின் பெயரை மாற்றியவர் அதே பள்ளியில் பணியாற்றிய கிருஷ்ணாஜி கேசவ் அம்பேத்கர் என்று அம்பேத்கர் படித்த பள்ளியின் நிர்வாகம் 2017ஆம் ஆண்டில் கூறி உள்ளது. இப்படியாக அந்த சர்ச்சை தொடர்கின்றது.

1904 ஆம் ஆண்டு, அண்ணல் அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. குடும்பத்தில் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அண்ணல் அம்பேத்கர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பரோடா மாகாண மன்னர் ஷாயாஜி ராவின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவருக்கு அங்கும் சாதி பிரச்சனை எதிராக நின்றது. 1912ல் அண்ணல் அம்பேத்கர் பெரிய போராட்டத்திற்குப் பின்னர் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

பின்னர் பரோடா மன்னரின் அழைப்புக்கு  இணங்கி அவரது அரண்மனையில் படைத்தலைவராக பதவியேற்றார். அங்கும் சாதிக்கொடுமையினை அனுபவித்தார். மற்ற படைவீரர்கள் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர் என்று குத்திக்காட்ட, அவர் தனது வேலையினை கைவிட்டு மீண்டும் மும்பை திரும்பினார். பரோடா மன்னர் அவருக்கு ஏற்பட்ட இன்னல்களை அறிந்தார். அண்ணல் அம்பேத்கரை அவரது வீட்டில் சந்தித்த  பின்னர் அவரை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பது என்று முடிவெடுத்தார். பரோடா மன்னரின் உதவியுடன் அண்ணல் அம்பேத்கர் முதுகலை படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க அமெரிக்க பயணம் மேற்கொண்டார். உயர்கல்விக்காக ஒரு இந்தியர் அமெரிக்கா பயணிப்பது அதுவே முதன்முறையாக இருந்தது. 

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் உயரவும், சமூகத்தில் அவர்களது நிலைமை மாறவும் நிறைய போராட்டங்களை மேற்கொண்டார். தீண்டாமை மற்றும் சாதிய ஏற்றத் தாழ்வு ஆகிய இரண்டையும் முற்றிலுமாக ஒழிக்க தாழ்த்தப்பட்ட மக்களிடையே தனது பேச்சுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைக்க அழைக்கப்பட்ட அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் என வலியுறுத்தினார். இதை காந்தி கடுமையாக எதிர்த்தார். பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனித் தொகுதிகளை ஒதுக்கினர். இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் அம்பேத்கர்.

அண்ணல் அம்பேத்கரின் பல்துறைத் புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடியது .பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர். ’இந்திய நிலத்தின் பூர்வ குடிமக்கள் என்று யாரையாவது சொல்ல முடியும் என்றால் அது தமிழர்களை மட்டுமே!’ என்று நேர்மையோடு முழங்கியவர் அம்பேத்கர் என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது!.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவில் உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள ஒற்றை ஆளாக நின்று அதைச் செதுக்கி உருவாக்கிய பெருமை அண்ணல் அவர்களையே சாரும். இதுவரை உலகில் எழுதப்பட்ட அரசியல் சாசனங்களில் எல்லாம் பெரியது என்ற சிறப்பை இந்திய அரசியல் சாசனம் பெற்றுள்ளது என்றால் அந்தப் பெருமையில் பெரும்பங்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கே உரியது.

தன்னை போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து நேரும் இன்னல்களுக்கு காரணம் அவர்கள் இந்து மதத்தில் இருப்பதே என்று நினைத்த அண்ணல் அம்பேத்கர் சிறிது சிறிதாக புத்த மதத்தின் மீது ஈடுபாடு காண்பித்து புத்த மதத்திற்கு மாறவும் முடிவெடுத்தார். 1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரபூர்வமாக ஒரு பெரும் விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். இவருடன் இவரது ஆதரவாளர்கள் 5லட்சம் பேர்களும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள்.

1955 ஆம் ஆண்டு முதல் கடுமையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார்.

தன்னால் உயர்வு பெற்ற பலரும், உயர்ந்த நிலைக்குச் சென்ற பின்னர் தனது கொள்கைகளையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான போராட்டங்களையும் கைவிட்டுவிட்டார்கள் – என்ற சோகம் அம்பேத்கரின் இறுதிக்கால பேச்சிலும் எழுத்துகளிலும் நிரம்பி வழிகின்றது. ஆனால் அம்பேத்கர் நம்பிய நபர்களைவிட அவரது எழுத்துகள் இன்னும் ஆற்றல் மிக்கவையாய், அவரது லட்சியங்களுக்காக போராடி வருவதையும் இந்தியா பார்த்துக் கொண்டிருக்கின்றது.

அம்பேத்கரின் பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபையானது இந்த ஆண்டு முதன்முறையாகக் கொண்டாடியது. தனது பள்ளியிலும், கல்லூரியிலும், பணியிலும், சமூகத்திலும் புறக்கணிப்புகளை சந்தித்த ஒரு இந்தியர் உழைப்பால் அடைந்த மிகப் பெரிய உயரம் என்று இதனைச் சொல்லலாம். ஆனாலும், அவரது கனவுகள் நிறைவேறும்நாள்தான் அம்பேத்கர் முழுமையாக வெற்றி அடைந்த நாளாகக் கருதப்படும். அந்த நாளை நோக்கி நடைபோடுவது இந்தியர் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

ஏபி மற்றும் ஏ வகை இரத்தப் பிரிவா? – கொரோனாவிடம் கூடுதல் கவனத்தோடு விலகி இருங்கள்!

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

Lok Sabha 2024: உணர்ச்சிவசப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன்…  யார் இந்த ட்ரெண்டிங் வேட்பாளர் திண்டுக்கல்  முபாரக்?

Pamban Mu Prasanth

தமிழுக்கு அகரமுதலி தந்த வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று… யார் இந்த வீரமாமுனிவர்?

இரா.மன்னர் மன்னன்

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

பீட்சா டோர் டெலிவரி செய்யும் போது ரேசன் பொருட்கள் செய்ய முடியாதா? .. கேள்வி எழுப்பும் டெல்லி முதல்வர்

Admin

டெல்லி கேப்பிடல்ஸ்சை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment