ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலில் முதல் முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்ககொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில மாதங்களில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை மீட்பது, தமிழில் அர்ச்சனை என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், தமிழகத்தில்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோயிலில் முதல் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா 28 என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிறந்து வளர்ந்த சுஹாஞ்சனா 2019 செப்டம்பரில் சென்னை கிண்டியில் டிசைன் இன்ஜினியராக வேலை செய்யும் கோபிநாத் 31 என்பவரை திருமணம் செய்தார்.
சேலையூர் பகுதியில் வசித்து வரும் இவர் தேவாரம், திருவாசகம் இரண்டையும் கற்றுத் தேர்ந்தவர்.
இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக பெண் ஓதுவாராக
சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சுஹாஞ்சனா நேற்று தன் பணியைத் துவங்கிய நிலையில் தனது பணியின் போது அவர் மந்திரம் ஓதும் வீடியோ வைரலாக பரவி வருகிறது