சென்னையில், மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று (04-03-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் அவர் ஆற்றிய உரையில், “வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே வைகுண்டர் தோன்றினார். சனாதன கோட்பாட்டின் அடிப்படையில், பாரதத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அவர்களது ஒற்றுமை, கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். ” என்று பேசினார்.
மேலும், “திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல் போன்றோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள். மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜி.யூ. போப் மற்றும் கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்” என ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், தனக்கு இயேசுவையும், பைபிளையும் பிடிக்கும் என்றும், ஆங்கிலேயர்கள் தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.