தெலங்கானா மாநிலம் பாரத ராஷ்ட்ரிய சமிதியை சேர்ந்த எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையில் உள்ள தடுப்பு மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது முதல் முறை அல்ல.
செகண்ட்ராபாத் கண்டோண்மெண்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருபவர் லாஸ்யா நந்திதா. இவரது தந்தை ஜி.சாயண்ணா இதே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு (பிப்ரவரி 13ஆம் தேதி) நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா நந்திதா தப்பினார்.
அப்போது அவர் பயணித்த கார் மீது ஆட்டோ மோதியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்குப்பின் மீண்டு வந்த லாஸ்யா, இன்று ஹைதராபாத் பாதஞ்செரு பகுதியில் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
10 நாட்களில் நடந்த இந்த இரண்டாவது சம்பவத்தில் தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சயன்னா ஓராண்டுக்கு முன்பு பிப்ரவரி 19ஆம் தேதி இறந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி அத்தொகுதியில் சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
வெகு அண்மையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தான் லாஸ்யாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதிலிருந்து 4 நாட்களில் மகளும் மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.