மகசூல் – பயணத் தொடர்… பகுதி 1

மகசூல்
SHARE

அன்பிற்கினிய வாசக நண்பர்களுக்கு,
மனிதர்களோடு வாழ்வதற்கும் மனிதர்களாக வாழ்வதற்கும் மனிதன் கற்றுக்கொள்ள பயணங்களை விடச் சிறந்த பாடசாலை இருக்க முடியாது. அப்படியான ஒரு பயணத்தில் நான் பெற்ற படிப்பினைகளை படைப்பதே இந்த தொடரின் நோக்கம். சரி… ஆரம்பிக்கலாமா?

மனித வினோதம்: 

05.09.2019. என் வாழ்க்கையில் இந்த நாள் அதிமுக்கியமானது. வாசிப்பில் பார்க்கும் இடங்களில் எல்லாம் வாழ்ந்தும் பார்த்துவிட வேண்டும் என்று எப்போதும் விரும்பும் நான், இப்போது அந்த நம்பிக்கையை முதல் முறையாக நனவாக்கிக் கொண்டிருக்கிறேன். 

நானும், என் பையும், பைக்குள் நான்கைந்து புத்தகங்களும் மட்டும், முதல் முறையாக பயணம் போகிறோம். நவ இந்தியாவின் நடுமையம் நோக்கி.

இந்த இரவு இப்படித்தான் முடிய வேண்டும். இதோ சரியாக இரவு 10 மணிக்கு சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து (செண்ட்ரல் ரயில் நிலையம்) புதுடெல்லி வரை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்ப உள்ளது. நான் அவசர அவசரமாக 9.40 மணிக்கு  ரயில் நிலையம் வந்து சேர்கிறேன். எல்லாம் சரிபார்த்து ரயிலில் அமரவும், ரயில் கிளம்பவும் நேரம் சரியாக இருந்தது. நல்லவேளை ரயிலைத் தவறவிடவில்லை.

பிறந்து 22 ஆண்டுகளில் முதல்முறையாக தமிழகத்தின் எல்லை கடந்து செல்கிறேன். அறிவுரைகள், ஆயத்தங்கள், ஏற்பாடுகள் என எவ்வளவு செய்திருந்தாலும் மனம் ஏதோ ஒரு வினோதத்தை உணர்ந்துகொண்டே இருக்கிறது. 

ஆம், புரிந்துகொள்ள முடியாத புதுமைகளுக்கு மனித மூளை வினோதம் என்று பெயர் சூட்டிவிடுகிறது.

எங்கு போகப் போகிறோம்? ஊரின் பேர் மட்டும் தெரியும். அந்தப் பெயருக்கு ஸ்பெல்லிங் கூடத் தெரியாது. அந்த ஊர் எங்கிருக்கிறது என்று தெரியாது. அந்த ஊரின் மொழி தெரியாது. பழக்க வழக்கங்கள் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். மனிதன் எப்படி பார்த்தாலும் மனிதன் தான். இந்த ஒரு நம்பிக்கைதான் இப்போது இருக்கிறது.

ரயில் கிளம்பி ஒரு 5 நிமிடங்கள் இருக்கும். ரயில் பயணம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. அறிமுகமில்லாத நபர்கள் என்றாலும், நேருக்கு நேர் முகத்தை பார்க்க வேண்டுமே என்பதற்காக சிரிக்க வேண்டியிருந்தது. காரணம் ரயில் என்னும் சமூக நீதி எந்திரம்.  

சாதி வேறுபாடற்று, நீங்கள் அமர்ந்த இடம் என்னுடையது நான் அமரலாமா (கழுவி விடவோ / துடைக்கவோ செய்யாமல்) என்ற கேள்விகளை இங்கு தான் பார்க்க முடியும். 

மனிதர்களோடு வாழ்வதற்கும் மனிதர்களாக வாழ்வதற்கும் மனிதன் கற்றுக்கொள்ள பயணங்களை விடச் சிறந்த பாடசாலை இருக்க முடியாது.

பாம்பன் மு.பிரசாந்த்

திருடர்கள் ஜாக்கிரதை என்ற நோட்டீசுக்கு கீழே உட்கார்ந்து கொண்டுதான் அந்த சிறுமி என்னிடம் சிப்ஸ் வேண்டுமா என்று கேட்டாள். இப்படித்தான் பல உறவுகளை உருவாக்கியிருக்கிறது ரயில். 

பல நேரம் ரயில் சிநேகிதத்தால் திருமணங்களே கூட நடந்திருக்கின்றன. எனக்கு இந்த ரயிலில் என்னவெல்லாம் நடக்குமோ?

ரயில் கிளம்பியதே 10 மணிக்குத்தான் என்பதால், படுக்கைக்கு தயாரானது என் ரயில் பெட்டி. நேராக இயங்கிக்கொண்டிருக்கும் ரயிலுக்குள் எல்லோரும் குறுக்கும் நெடுக்குமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். 

அவசர அவசரமாக லுங்கி மாற்றினான் ஒருவன். நிச்சயம் நம்ம ஊர் பக்கம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். என் கணிப்பு தவறவில்லை. இராமநாதபுரத்தை சேர்ந்த அவன், பணி நிமித்தமாக டெல்லி செல்வதாகச் சொன்னான். 

மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த சின்ன பையன் போறான். ( அவனுக்கு வயது 21 தான் என்பதை பிறகு உறுதி செய்து கொண்டேன்). உனக்கென்ன? என்று.

ஆனால், விளக்குகள் அணைக்கப்பட்ட (அவன் இருக்கையில்) பின்பு மெல்லமாக  “ஜி”  என்று அழைத்து இரண்டு கேள்விகள் கேட்டான். 

  1. உங்களுக்கும் இது முதல் பயணமா? 
  2. உங்களுக்கு இந்தி தெரியுமா? 

என் பைக்குள் இருந்த spoken hindi புத்தகம் பற்றி அவனுக்கு தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. ஆனால், நம் முக அமைப்பும், போன் பேச்சுகளும் இந்த இரண்டு கேள்விகளையும் கேட்க வைத்துவிட்டன. அதுசரி எப்படி பார்த்தாலும் நம்மூர் காரன் தானே? கேள்வி கேட்க யோசிக்க மாட்டான். 

“ஆமா” என்றேன்.

“அப்படியா இந்தி தெரியுமா?” என்றான்

“ஐயயோ… அதுக்கு ஆமா சொல்லல, இதுதான் முதல் பயணம். அதுக்கு ஆமான்னேன்” என்றேன்.

அப்போ உங்களுக்கும் இந்தி தெரியாதா? அவனுக்குள் ஒரு சந்தோசம். 

ஒருவேளை எனக்கு இந்தி தெரியும்னு பொய்யா சொல்லிருந்தா கூட மன உளைச்சல்ல தூக்கத்தை தொலைச்சிருப்பான் போல.

நல்லா, சந்திச்சேண்டா நம்மூர்காரன, என்று நினைத்துக்கொண்டேன். 

பயணத்துக்காக கொண்டு வந்த நூல்களில் 1 ஐ எடுத்து, 1ம் பக்கம் பிரித்தேன். எந்த புண்ணியவான் என்று தெரியவில்லை. பட்டென்று விளக்கை அணைத்துவிட, கடுங்கோபத்தில் யாரென்று பார்க்க தலை நீட்டினேன், எந்த அசைவும் இல்லை. ஏமாந்து போய் தூங்கி விட்டேன். விடியட்டும் கவனித்துக் கொள்கிறேன். 

பையை பத்திரமாக இறுகப் பிடித்துக் கொண்டு தூங்கத் தொடங்கினேன். ஆனால், நான் தூங்கிவிட்டால் கும்பகர்ணன் என்பது என் குடும்பத்துக்கு மட்டுமே தெரியும்.

-தொடரும்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள்: நாள் 3. இமான் அண்ணாச்சியின் ‘வானத்தைப் போல…’

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 26. ‘அணி பிரிஞ்சு அடிச்சுக்காட்டு…’

இரா.மன்னர் மன்னன்

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 2

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி1: பிடிக்காத பழம்

Admin

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment