கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

SHARE

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி 3: வேலு தாத்தா

  • அபிநயா அருள்குமார்

பகுதி 2 Link:

கருத்த, ஒல்லியான தேகம், முறுக்கு மீசை, தலையில் முண்டாசு கூடவே அந்த வியர்வை வாசம்…எழுதும் போதும் மணக்குது எனக்கு..என் தாத்தன். ..வேலு ..ஊருக்கு வேலு அய்யா. அம்மாவின் அப்பா!. 

8 வயது எனக்கு இருக்கும் அப்போது.

“தாத்தோவ்”

” ஆயாலு”….எந்துச்சிட்டியா, ஓடியா…”

முதல்நாள் இரவு பறித்து வந்த கோரைச் செடியைக் கொண்டு கூடை முடைந்து கொண்டிருந்தார் வேலு தாத்தா.

நான் கண்ட கனவுகளை ,வெள்ளை நிறமாக வெளியுலகத்திற்கு காட்டிய அந்த உமிழ்நீர் கோட்டை அழித்துக்கொண்டே,

“தாத்தா இது என்னா”

” கூட பின்னுறேன்”

”எதுக்கு?!”

”உன்ன இதுக்குள்ள போட்டு கவுக்க…”

கேலியும் கிண்டலும் ஊரிப்போன மனிதன்…சிரிக்காமலே சிரிக்க வைப்பார்… இன்றைய வழக்கத்தில் சொல்லப்போனால் மனுசர் மரண  கலாய் காலாய்ப்பார்.

“போயா கிழவா”..

” ஹா ஹா….பல்ல விளக்கு ஓடு “

“இரு அம்மா ப்ரஸ் எடுத்து தரட்டும்”

” வேப்பங்குச்சில விளக்கு…”

“கசக்கும் போ”.

” கசக்காம குச்சி ஒடிச்சாரவா”

“ம்ம்ம்ம்ம்ம் “

எல்லா குச்சியும் கசக்கத்தான் செய்யும், பொய் சொல்லிவிட்டு, பச்சையாக மகிழ்ந்து கிடந்த அந்த வேப்பமரத்தில் இலகுவான ஒரு குச்சியை  உடைத்தார். அதன் இலைகளை இழைத்து, என் வாய்க்குள் திணித்து பற்களால் கடிக்க சொன்னார்… கசப்பில் என் முகம்  அஷ்ட கோணத்தில் போனது.

சிரித்துக்கொண்டே…” கசக்குதா புள்ள”..

“இல்லை இல்லை கொஞ்சம் இனிக்குது”..

வேலு பேத்தி இல்லையா… அவர் வாய்விட்டு கொள் எனச் சிரித்தார்.

அதோடு போராடி, போராடி ஒரு வழியாக விளக்கிவிட்டேன்

”தாத்தாவோ…” என்றேன் 

”ஹ்ம்ம்ம் சொல்லு ஆயா…” மாட்டுக்கு புல் கொட்டிக்கொண்டே அவர்.

“என்னயும் வயலுக்கு கூப்புட்டு போறியா?”

“ஆத்தாடி, அங்க வந்தா உங்க ஆயா என்ன கொன்னுப் புடுவா, அதோட நீயும் தாத்தன் கலருக்கு வந்துருவ..ஹாஹா ஹா…”

” போ….”

“சாங்காலமா வந்து சாவடிக்கு போயி, பக்கடா வாங்கி தற்றேன்”… 

ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் பக்கோடா பிரபலம் அந்த ஊரில், குடிகாரர்களுக்கா குழந்தைகளுக்கா என்பது அவரவர் விருப்பம்.

” ஹ்ம்ம்”…

“ஏல பூச்சி!…” 

ஒரு குரல் 

ஒலித்த திசைய நோக்கி திரும்பினேன் என் மாமன் மகள் சுகந்திதான் அது!

” என்னால..”

“நேத்து மனோசு பயலுக்கு அவங்க அம்மாயி சைக்கிள் ,வாங்கி குடுத்துருக்கவோ நைட்டு ஓட்டிக்கிட்டு வந்தான், நாம அத வாங்கி கத்துக்குவமா?”

மனோஜ் எங்களை விடச் சிறியவன், ஆனாலும் சகல வசதிகளோடும் வலம் வருவான்!. காரணம் மலேசியாவில் வேலை பார்க்கும் அவன் அம்மாயி. 

” சின்ன சைக்கிளா..?”

“ஆமா…”

” சரி முதல்ல தருவானான்னு பாப்போம்ல, ஏல எங்க தாத்தோவோட மத்தியானமா ஏரிக்கரை போவமா?”

” ஹ்ம்ம்ம்ம்”..

தாத்தா யாரையும் எதிர்பார்க்கா மனிதர்….குண்டானுக்குள் பொங்கி வந்த பழைய சோற்றை தூக்கு வாளியில் வாரிப்போட்டு, மண்வெட்டியை சுமந்து மாடுகளை ஓட்டிக் கிளம்பினார்.


“ஆயாலு ஆத்தாகிட்ட சொல்லு, தாத்தா வயலுக்கு போயிட்டாருனு…” என்றபடி நகர்ந்தார்.

நான் தாத்தாவின் மறு வருகைக்காக காத்துக்கிடந்தேன் , அவ்வபோது கவனங்களை வேறு வழிகளில் செலவிட்டாலும் கண்கள் மட்டும் தாத்தா எப்போ வருவாரு என தேடிக்கொண்டே இருந்தன.

தாத்தாவும் மதிய உணவிற்காக  வீட்டிற்கு வந்தார்

நான் சுகந்தி மற்றும் என் மற்ற நண்பர்களோடு கட்டம் போட்டு  நாடு பிரித்து  விளையாடிக்கொண்டிருந்தேன்…

“யே… யே… தாத்தா வந்துட்டாரே!  நானும்  சுகந்தியும் ஏரிக்கரக்கு  போவோமே.” என விளையாட்டை பாதியில் விட்டு துள்ளிக்குதித்துக்கொண்டு வந்தோம். 

மற்றவர்கள் எங்களை சற்று ஏக்கத்தோடு பார்க்கத்தான் செய்தார்கள்!. 

“நாங்களும் வாத்தியார் வீட்டுக்கு 2 மணிக்கு படம் பாக்க போவோம்” சற்று பொறாமை நிறைந்த கோபத்தில் பெருமை பீத்தினான் மாமன் மகன் பிரவீன்.

”போங்களேன், நாங்க ஏரியில போயி குளிப்பம் இல்லலே” என சுகந்தியின் கைய  குஷியோடு குதித்து பிடித்து ,, இருவரும் தாத்தா பின்னால் ஓட்டம் எடுத்தோம்!

“தாத்தாவோ..”

“ஏ புள்ள மெதுவா ஓடியா” வியர்வையில் குளித்த தேகத்தை முண்டாசு கழட்டி துடைத்துக் கொண்டே மெதுவாக நடந்தார்.

“தாத்தா நீ சாப்புட்டு வயலுக்கு போறப்போ ஏரிக்கு கூப்புட்டு போறியா???”

“ஆத்தாடி அங்க பேயி இருக்கு, புடிச்சுக்கும்”

“நீதான் இருக்கல்ல விரட்டிவிடு”

“ஹா ஹா ஹா…”

சுகந்தி நான் சொல்ல சொல்ல எனது முகத்தை மட்டும் பார்த்து நடந்தாள், தாத்தாவை கண்டால் அவளுக்கு கொஞ்சம் பயம் 

”கூப்புட்டு போவியா”.

“சரி சாப்புட்டியா?”

”இல்லை, நீ கூட்டிட்டு போ சாப்புடுறேன்”

“சரி வா ஒன்னா சாப்புடுவோம்” 

சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுகந்தி கைகளால் சைகை செய்தால் 

“போறப்போ கூப்புடுல”

“நீயும் வால எங்கோட்டுல சாப்புடலாம்”

“எங்கம்மா திட்டும்ல வேணாம்”  என அவள் வீட்டிற்கு  ஓடினாள்

வீட்டில் நான் எப்போதும் சாப்பிடும் சாப்பாட்டினை வெடுக்கென கொத்தி திண்ணும் அந்த குண்டு கோழி, மணக்க மணக்க விருந்தாக விரிந்து கிடந்தது.

தாத்தாவும் நானும் எதிர் எதிரே அமர்ந்தோம்.. சுடச்சுட ஆவி பறந்த அந்த சோறும், எண்ணையில் மிதக்கும் தேங்காய்  பூவும் அடி நாக்கில்  உமிழ் சுரக்க செய்தன. அம்மாவின் கைப்பக்குவம் அப்படி!. என் அம்மா அவ்வபோது என்னை பார்க்க வந்து , தாத்தா வீட்டில் தங்கிவிடுவார் . 

“என்ன புள்ள இது?” தாத்தா கேட்க,

“கோழி குழம்பு ஐயா”. அம்மாவும் அவரை அய்யா என அழைப்பதுதான் வழக்கம். 

“காலையில இருந்த பழையது முடிஞ்சிருச்சா?”

“இல்லயே இருக்கே” அம்மா. 

“அத கொண்டாப்புள்ள சுடு சோற நீங்க சாப்புடுங்க”..

“அட நீ வேற சும்மா இரு, ஒரு நாளைக்கு அது கிடந்தா ஒன்னு ஆகாது, வடவம் போட்டுக்கலாம்” அம்மா.

‘ஏ புள்ள புருசமுட்டுலருந்து வந்திருக்க, நல்லா சாப்புடு புள்ள, ஆயாவுக்கு போடு”

”ஆமா ஆயா திங்க போறா எல்லாத்தையும்”அம்மா பதில் கூற அப்போது நான் தாத்தாவை பார்த்து ஈ ஈ ஈ என சிரித்தேன்..

காலையில் தாத்தா எடுக்க மிஞ்சியிருந்த பழைய சோற்றை கிண்ணத்தில் ஊற்றி, மோர் கலந்து அம்மா வைக்க, தாத்தா ஒரு பிடியை எடுத்து தண்ணீர் பிழிந்து அதில் அந்த சுட சுட கோழிக் குழம்பை ஊற்றி சொட்டமிட்டார்.அவர் சாப்பிடும் பொழுது ஓர் இரண்டு பருக்கைகளை முறுக்கு மீசையும் பதம் பார்க்கும் ! 

சப்பாட்டை முடித்து சவுக்காரம் (சோப்) எடுத்து கிளம்பினார் ஏரியில் குளியல் போட. நானும் குஷியோடு!

“ஏலே சுகந்தி, சீக்குறமா வா, சிம்மீசும் துண்டும் எடுத்துட்டு வா”

சொல்லிய வேகத்தில் சிட்டாய் பறந்து வந்தாள் சுகந்தி.

தாத்தா மூக்குப்பொடி போட தயாராக, தனது வேட்டியில் திணிக்கப்பட்ட பொட்டலத்தை எடுத்தார். 

“இரண்டு பேரும் கொஞ்சம் பின்னால வாங்க பொடி மூக்குல ஏறும்”

நாங்கள் இருவரும் பள்ளி கதைகளை பேசிக்கொண்டே கிந்து கிந்தாச்சி நடை போட்டோம்.

ஏரிக்கரை வந்தது.

தாத்தா எங்களை வெளியில் நிக்க விட்டு ஆழம் பார்த்தார்.

“இங்க வாங்க”

சில்லென தலைகேறிய தண்ணீரின் குளிரை பொருத்துக்கொண்டு, ஒருவர் .கையை ஒரு  பிடித்துக்கொண்டு. எங்களின் வயிறு நனையும் வரையில் இருக்கும் இடத்தை பதம் பார்த்து கொடுத்துவிட்டு ஆழப்பகுதிக்கு நீந்தினார் தாத்தா!

“ஆயா இங்கயே நின்னு குளிங்க, உள்ள வரப்புடாது”

“ஹ்ம்ம்ம்ம்”


கல கல சிரிப்போடு குளியல் போட்டோம் நாங்கள்.

“ஆழத்தில்(ஆழம் எங்களுக்குதான் அவருக்கு இல்லை) நின்று கொண்டு எதிர்பக்கமாக திரும்பிக்கொண்டு வாய்க்குள் இருந்து எதையோ துப்பினார். பார்க்கவே பயமாக இருந்தது எனக்கு. அது அவர் பல் செட்டு. சிக்கியிருந்த கோழிக்கறிகளை அலசிக்கொண்டிருந்தார் போலும். அப்போது அருவருப்பாக இருந்தது, பல் செட்டு போட்டால் தளர்ந்தவர் என நினைக்க வேண்டாம் இரும்புத்தேகத்தான் அவர்.

இப்படியே பல சுவாரஸ்யங்களோடும் , அன்போடும் கரைந்த தாத்தனுடனான பொழுதுகள் ஒரு நாள் முடிவுக்கு வந்தது.

“அம்மாடி(என்னை வீட்டில் அழைக்கும் வழக்கு)  மாமி(அத்தை) வீட்டுக்கு போயி தக்காளி வாங்கிட்டு வா,தோசை ஊத்தி சட்டினி வச்சி தர்ரேன்” பெரியம்மா கூறினார் .

மாமி 3 ஆண்மகன்களை பெற்றெடுத்தவர், மகள் நானாக இருந்தேன் என நினைக்கிறேன். என் மேல் எப்போதும் பாச மழையை பொழிந்து தள்ளுவார்.

மாமி வீட்டுக்கு ஓடினேன்

சுகந்தி ”எங்கல போற”..

”வடக்க போறேன்ல”.

 வடக்கு என்பது மாமன் வீடு, தெற்கு என்பது பெரியம்மா வீடு. சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தேன்.

மாமன் வீட்டிற்குள் நுழைந்ததும், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு ஒரு துண்டோடு, மீசை முருக்கி கம்பீர நடை போட்டு பார்த்த என் தாத்தனை அன்று ஆடை தளர்ந்து கை கால்கள் உதறிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஏதோ குழப்பம் தொற்றிகொள்ள ..

 ”தாத்தா…” என அழைத்தேன்.. சிரித்துக்கொண்டே சைகை செய்தார் மரண வலியிலும் பேத்தியை பார்த்ததும் சிரிப்புதான்.

“மாமி தாத்தா ஏதோ சொல்லுறாரு”..

அவர் நிலை உணராத அத்தை, ”தாத்தாவுக்கு முடியல, இங்க வா”  கொல்லை பக்கத்திலிருந்து அழைப்பு விடுத்தார். தாத்தா தெரு பக்கத்தில் கேட்பாரற்று கிடப்பது போல் இருந்தது ஏன் என இன்றளவும் புரியவில்லை, 

“மாமி அம்மா தக்காளி வாங்கிட்டு வர சொன்னுச்சு”

உள்ளே இருந்த குருதில் பதுக்கிய தக்காளியில் இரண்டை எடுத்துக் கொடுத்தார்.

 திண்ணையில் படுத்திருந்த தாத்தா நான் திரும்பி வருகையில் சாதரணமாக மாறிவிட்டார்.

”போயித்து வற்றேன் மாமி, தாத்தா டாட்டா”

மறுபடி மெதுவாக ஏதோ சைகை சொன்னார். புரியவில்லை மெல்ல மெல்ல திரும்பி பார்த்து ஓட்டம் பிடித்தேன்! விளையாட்டு குணம் அதிகம் எனக்கு. நியாயப்படுத்தவில்லை அவர் நிலை எனக்கு அப்போது புரியவில்லை அதுதான் நிதர்சனம்.பெரியம்மாவிடம் கூறவில்லை, தோசை சுட்டு சாப்பிடுவதில் இருந்தது எண்ணம்..

இரண்டாவது தோசையை சுடச்சுட திணித்துக்கொண்டிருந்தேன்.

வெளியே சென்ற பெரியம்மா “ஐயா…” என ஓட்டம் பிடிக்க.

நானும் வீட்டுக்கு வெளியே ஓடி வந்தேன்..


”பூச்செல்வி உங்க தாத்தா செத்து போயிட்டாவுல…“ சுகந்தியின் குரல்.

ஓட்டமும் நடையுமாக அங்கு நான் போகும் போது இரண்டு உரல்களை வைத்து குளிக்க வைத்தனர் என் தாத்தனை, எலும்பும் தோலுமாக மாற்றி வைத்திருந்தது அந்த காச நோய்

எல்லோரும் கதற எனக்கும் ஆத்திரம் வந்தது. அழுகையும் வந்தது ஆனால் அவர் திரும்ப வரமாட்டார் என்பது மட்டும் உண்மை. அவர் என்ன சொல்ல வந்தார் அந்த சின்ன பெண்ணிடம்… எதற்காக சிரித்தார்?, ஏன் உடனே இறந்து போனார்? ரோஷமாக வாழ்பவருக்கு இந்த நிலைதான் என அம்மா சொல்லிக்கொண்டிருப்பது ஏன்?… அவர் உருவாக்கிய விவசாய நிலங்களும், பயிர்களும் அந்த ஊரில் இப்போது இல்லாதது ஏன்?, சகல வசதிகளோடு வாழ்ந்த அவரது குடும்பம் இன்று செழிப்பற்று இருப்பது ஏன்? ஓயாமல் ஒலிக்கும் கேள்விகள்!.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 8: தொழிற் கை முத்திரையின் வகைகள் (20 – 24)

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 2: 32 வகை கை முத்திரைகள்.

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 10. 24 வகை தொழிற்கை முத்திரைகள் – சிறு பயிற்சி.

பிக்பாஸ் நாட்கள். நாள் 13: ”காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு…”

இரா.மன்னர் மன்னன்

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 27. ‘கமலின் முதல் பஞ்சாயத்து’

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

சே.கஸ்தூரிபாய்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment