சமூக நீதியை மையப்படுத்தித்தான் எங்கள் அரசியல் என்று விளம்பரங்களில் தம்பட்டம் அடிக்கும் திமுக, நாமக்கல் மக்களவை தொகுதியில் கூட்டணி என்கிற பெயரில் நிகழ்த்தியிருக்கும் சாதி-சார் செயல்பாடு விமர்சனங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டுக்கு திமுக தலைமை வகிக்கிறது. இதில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சியும் அங்கம் வகிக்கின்றன.
இதில் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவரைக்கும் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், கொமதேக அங்கு அறிவித்திருக்கும் வேட்பாளர்தான் கடுமையான சாதிய வன்மம் நிறைந்த நபர் என்ற விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
கவுண்டர் சாதியை பிரதானப்படுத்தி அவர் பேசும் பேச்சும், கவுண்டச்சியை காதலிக்கும் பிறசாதி இளைஞர்களைக் குறிப்பிட்டு, “கருவோடு கருவறுப்போம்” என்ற சூளுரையும் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எப்போதோ பேசிய பேச்சுக்கு இப்போது இப்படி எதிர்வினை வருவது சரியா என்ற கேள்விகளும் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால், எப்போது பேசினாலும் இன்று வரையில் வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்காதது அவ்ரது மனநிலையின் விஷமத்தை வெளிக்காட்டுகிறது. வேறெங்கும் இதுவரை இப்படியொரு வன்முறையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை.
அப்படி ஏதும் மன்னிப்பு கேட்டிருந்தால் அதையும் வெளியிட மெய்யெழுத்து தயாராக இருக்கிறது. அதேசமயம், இப்படி ஒரு வேட்பாளரை அறிவித்திருக்கும் கொமதேகவின் நடவடிக்கையை கண்டும் காணாமல் சத்தமின்றி இருக்கிறது திமுக. ஏனைய கட்சிகளை சாதி அரசியல் செய்வதாக தூற்றித் தூற்றி சுகம்கண்ட திமுக, தன் உள்மனதுக்குள் இருக்கும் சாதிய வன்மத்தை இதன் மூலம் பார்த்து பூரிப்படைகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இந்த வீடியோ பொய் என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருக்கும் சூரியமூர்த்தி, இது பொய் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் சொல்கிறார்.
அதாவது, “அது பொய்யான வீடியோ.. என் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அது பொய்யான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டு விடுதலையாகி விட்டது. கவுண்டர் இன பெண்கள் யாரும் காதலிக்க நினைக்காதீர்கள் என்று நான் பேசவில்லை. வேட்பாளராக நிற்பதால் மீண்டும் அதை பரப்புகின்றனர் என்றார். அப்படி நான் பேசவே இல்லை என்று உறுதியாக சொன்னார்”
உண்மை என்ன என்பதை எல்லோரும் அறிவர். திமுகவின் சாதி ஒழிப்பு நாடகம் எடுபடாது என்பதை பயன்படுத்தி லாபம் பார்க்க நினைக்கிறதா கொமதேக?