டெல்லி விவசாயிகள், தொழிலாளிகள் மகாபஞ்சாயத்துத் தீர்மானத்தின் மீதான, SKMன் தமிழ்நாடு மாநிலச் செயற்பாட்டு குழுவின் அறைகூவல் என்று தலைப்பிட்டு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் SKM பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் மார்ச் 14 அன்று, SKM நடத்திய விவசாயிகள் தொழிலாளிகள் மகா பஞ்சாயத்து விடுத்த அறைகூவல் :-
“கார்ப்பரேட் கொள்ளையில் இருந்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க, இந்தியாவின் மதச்சார்பற்ற, சனநாயக, அரசியலமைப்பைப் பாதுகாக்க போராடிவரும் விவசாயிகள், தொழிலாளிகளின் இயக்கத்தை, பாஜகவிற்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் போராட்டமாக மாற்றுங்கள்.
கார்ப்பரேட் கிரிமினல் மற்றும் ஊழல் கூட்டை அம்பலப்படுத்துங்கள்; இந்திய குடியரசின் சனநாயக, மதச்சார்பற்ற மற்றும் கூட்டாட்சி தன்மையின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்களுக்காக பாஜகவை தண்டிக்க அணி திரளுங்கள்”.
மகா பஞ்சாயத்து விடுத்த இந்த அறைகூவலை விரிவாக, 18.03.2024 இணையவழி நடைபெற்ற மாநில செயற்பாட்டுக் குழு விவாதித்தது.
“தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற சூழலில், SKMஇல் உள்ள விவசாய அமைப்புகள் அனைத்தும் வெவ்வேறு வடிவங்களில் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன”.
“மற்றொருபுறம் தமிழ்நாட்டில் உள்ள சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து அரசியலமைப்புச் சட்டத்தையும், சனநாயகத்தையும் காப்பாற்ற பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன”.
இந்தச் சூழலில் சிவில் சமூகங்களோடு இணைந்து SKMன் அறைகூவலை நிறைவேற்றும் வகையில், பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக இந்தப் பிரச்சாரத்தை சிவில் சமூகங்களுடனும், அனைத்து பிரிவு மக்களுடன் இணைந்து நடத்த வேண்டும்; அதற்கான அனைத்து முயற்சிகளையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டுமென்று, SKMன் மாநிலச் செயற்பாட்டு குழு கேட்டுக் கொள்கிறது.