தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் நாளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கேட்டு ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது.
தீர்ப்பு வந்தபோதே எஸ்.பி.ஐ. இதற்கான விவரங்களை தராது. காரணங்களைச் சொல்லி நாள் கடத்தி இந்த செய்தியின் தன்மையை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிகள் நடைபெறும் என்று அரசியல் பார்வையாளர்கள பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவகாசம் கேட்டு நீதிமன்றத்திடம் அணுகியிருக்கும் எஸ்.பி.ஐ. விவகாரம் , அந்த அணுமானங்களை நிரூபிக்கும் விதமாகவே உள்ளன.
தேர்தலுக்குப் பின் இந்த விவரங்களை வெளியிடுகிறோம் என்று அவகாசம் கேட்டிருக்கிறது எஸ்.பி.ஐ தரப்பு.
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், தேர்தல் செலவுகளுக்கான நிதியை இந்த பத்திரங்கள் மூலம் இனி பெறக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. ஆனால், இதுவரை வந்த பணத்தை செலவழிக்க கூடாது என்றோ அல்லது வந்த நன்கொடைகளின் விவரத்தை கட்சிகளே வெளியிட வேண்டும் என்றோ எந்த அறிவிப்பும் இல்லை.
தேர்தல் சமயங்களில் இந்த பணம் ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களுக்கு கூடுதலாக உதவக்கூடும். எனவே அதைத் தடுத்து ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பின் நோக்கமென்றால், வரப்போகும் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அந்த ஜனநாயகம் காக்கப்பட வேண்டியதில்லையா?
இதுகுறித்து ஆறுகுட்டி பெரியசாமி தனது முகநூலி வெளியிட்ட கருத்து சலசலப்பையும் கலவையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் தெரிவித்ததாவது, “தேர்தல் ஆணையத்திடம் நாளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 30 ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளது ஸ்டேட் வங்கி. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.தேதியை கவனியுங்கள் ஜூன் 30. அதற்குள் தேர்தல் முடிந்து விடும்.
ஸ்டேட் வங்கி கூறும் காரணங்கள்:
- பத்திரங்கள் குறித்த விவரங்கள் ரகசிய மொழியில் எழுதப்பட்டு இரண்டு பாதுகாப்பான இடங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன. நன்கொடையாளரின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்கும் பொருட்டு மையப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இல்லை.
- மொத்தம் 29 கிளைகளில் 44,434 ஆவணங்களை திரட்டி ஒப்பு நோக்கி மொழியாக்கம் செய்து விவரங்களை இறுதி செய்ய ஏராளமான உழைப்பும் அவகாசமும் தேவைப்படுகிறது.
முழுக்கவும் கணினி மயமாக்கப்பட்ட வங்கித் துறையில் எந்தவொரு புள்ளி விவரமும் சில நிமிடங்களில் கிடைக்கும். ஸ்டேட் வங்கி நிர்வாகம் சொல்வது பொய். மையப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்கள் இல்லை என்றால் 44,434 என்கிற எண் எங்கிருந்து கிடைத்தது? உண்மையாக இருந்தாலும் கூட முழு விவரங்களையும் திரட்ட இரண்டு நாட்களுக்கு மேல் ஆகாது.
விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் வரை ஸ்டேட் வங்கி சேர்மன் தினேஷ்குமார் கரா நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தால் ஒரே நாளில் விவரங்கள் கிடைக்கும். உச்ச நீதிமன்றம் இதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.