*சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, உண்ணாநிலைப் போராட்டம் கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது தமுஎகச ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னையை சுற்றிலும் பல்வேறு இடங்களிலும் இந்த கோரிக்கைக்கான ஆதரவு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பிரபலங்களும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தமுஎகச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
“குடிமக்கள் தமது நீதிமன்றச் செயல்பாடுகள் தங்களது மொழியிலேயே நடக்க வேண்டும் என்று கோருவதற்கான உரிமையுடையவர்கள். இதனாலேயே அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆம் பிரிவினை பயன்படுத்தி ராஜஸ்தான், அலகாபாத், மத்தியபிரதேசம், பாட்னா ஆகிய உயர் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக அரை நூற்றாண்டுக்கும் முன்பே இந்தி அறிவிக்கப்பட்டது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கவேண்டும் என்னும் தமிழ்நாட்டவரின் நெடுநாளைய கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பிலே போடப்பட்டுள்ளது. 1994 ஏப்ரல் 24 அன்று சென்னையில் “தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுப் பாதுகாப்பு” மாநாட்டினை நடத்தி இக்கோரிக்கையை முதன்மைப்படுத்திய தமுஎகச தொடர்ந்தும் வலியுறுத்திவருகிறது. வழக்கறிஞர்களின் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாகவும் இது இருந்துவருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்ற நீதிபதியுடன் பங்கேற்ற பல நிகழ்வுகளில் நேரடியாகவே இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
ஆனாலும் ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றமும் இவ்விசயத்தில் முடிவெடுக்க மறுத்துவரும் நிலையில் வழக்கறிஞர்களும் தமிழார்வலர்களுமாக 24 தோழர்கள் சென்னையில் 28.02.2024 முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கவேண்டும் என்பதில் பற்றுறுதி கொண்ட தமுஎகச இப்போராட்டத்திற்கு தனது ஆதரவினையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.
வாராவாரம் தமிழ்நாட்டுக்கு வந்துபோகும் பிரதமர் தமிழ்மொழி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் தனக்கு அக்கறை இருப்பதாக வாய்ப்பந்தல் போடுவதை விடுத்து உடனடியாக தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்குவதற்குரிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமுஎகச வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.