உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

SHARE

பிரியா வேலு

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது தமிழில் மதி இறுக்கம் என்று அழைக்கப்படுகின்றது. மதியிறுக்கம் என்பது மூளையின் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு குறைபாடு மட்டுமே நோயல்ல.

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில்தான் மதியிறுக்க விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. மதியிறுக்கத்தின் வரலாற்றை நாம் பார்க்கப் போனால்…

டாக்டர் லியோ கானர் என்பவர்தான் ஆட்டிசம் என வார்த்தையையே உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். அவர் 1943ல் “தனது பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம் (Autistic Disturbances of Affective Contact)” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதில்தான் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்னைகள் பேசப்பட்டன. 

1965ல் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் மற்றும் டாக்டர் ரூத் சல்லிவன் ஆகியோர் இந்தக் குறைபாடு குறித்த ஆய்வுகளுக்காக ஆட்டிசம் சொசைட்டி என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதன் பிறகு நெடுங்காலம் கழித்து 2008ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏப்ரல் 2ஆம் தேதி ’உலக ஆட்டிச விழிப்புணர்வு தின’மாக அறிவிக்கப்பட்டது.

கருவுற்ற பெண்களிடம் காணப்படும் மன அழுத்தம், வலிப்பு நோய் மாத்திரைகளை சாப்பிடுவது, தைராய்டு பிரச்சனை, ஃபோலிக் அமிலம் குறைவாக இருத்தல் உள்ளிட்ட பல காரணங்களும் குழந்தைக்கு இந்தக் குறைபாடு ஏற்படுவதைத் தூண்டுவதாகக் கூறப்படுகின்றது. 

இந்த வளர்ச்சிக் குறைபாட்டில் Autistic Disorder, PDD, Asperger என பலவகைகள் உண்டு. எனவே இவை அனைத்தையும் சேர்த்து ’ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர்’ என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. 

ஆட்டிசத்தோடு பிறக்கும் ஒரு குழந்தையிடம்,  பிறந்தது முதல் மூன்று வயதுக்குள் ஆட்டிசத்தின் அடையாளங்களைக் காணலாம். அவர்கள் மொழித்திறன், பேச்சுத்திறன், மற்றவர்களோடு கலந்து பழகும் திறன், நடத்தைத் திறன், ஒருங்கிணைப்புத் திறன் போன்றவற்றில் சற்று பின் தங்கி இருப்பார்கள். 

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனித்துவமானவர்கள். தனக்கென தனி உலகத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் பயணிப்பவர்கள் இந்த மதியிறுக்க குழந்தைகள். இதனால் நமது உலகத்தைப் புரிந்து கொள்ள இவர்கள் சிரமப்படுவார்கள்.

அதே சமயம் ஒரு சில செயல்பாடுகளில் இவர்கள் பிறரை விட மிக அதிக திறமை உடையவர்களாகவும் இருப்பார்கள். கணினிகளை விடவும் செயல்திறன் மிக்க பல சாதனையாளர்கள் இளம் வயதில் ஆட்டிச குறைபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது ஆச்சரியத்திற்கு உரிய உண்மை!.

ஆட்டிசம் உள்ள ஒரு குழந்தையை சரியாகக் கண்டறிந்து, அதன் தனித் திறனை மேம்படுத்தி, நமது உலகத்தையும் அந்தக் குழந்தைக்கு எளிய முறையில் அறிமுகம் செய்தால் அவர்களை சிறந்த சாதனையாளர்களாக்க முடியும்.

ஆட்டிசம் குறைபாட்டை கண்டறிய இரத்த பரிசோதனை போன்ற நேரடி மருத்துவ சோதனைகள் எதுவும் இல்லை, ஆனால் குழந்தைகளை கூர்ந்து கவனிக்கும் சாதாரண மக்களால் கூட ஆட்டிசத்தை அடையாளம் காண இயலும். இதற்காக குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நடத்தைகளை சரி பார்ப்பதற்கான ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. 

ஒரு குழந்தையிடம்

• முகம் பார்த்து பேசாமல் சிரிக்காமல் இருப்பது.

• ஒரே சொல்லை திரும்பத் திரும்ப சொல்லுவது.

• மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல் இருப்பது.

• பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பி பார்க்காமலிருப்பது.

• கைகளை உதறிக் கொண்டே இருப்பது.

• காரணமற்ற பயம் – போன்றவை காணப்பட்டால் உடனே மனநல ஆலோசகர்கள் அல்லது மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே இது போன்ற அறிகுறிகளைக் கண்டுபிடித்தால் சிறப்பு சிகிச்சைகளை அளிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

• செயல் சார்ந்த சிகிச்சை 

• பேச்சுத்திறன் சிகிச்சை

• புலன் ஒருங்கிணைப்பு சிகிச்சை

• இசைச் சிகிச்சை

போன்ற சிகிச்சைகளை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர்.

சில குழந்தைகளுக்கு பிறப்பிலேயே மதியிறுக்கக் குறைபாடு இருப்பது 1990களின் மத்தியில்தான் தனித்து அறியபட்டது. எவ்வளவுதான் மருத்துவ உலகம் வளர்ந்து வந்தாலும் இக்குறைபாட்டிற்கான சரியான காரணம் இன்று வரை அறியப்படவில்லை.

மேலும் இதற்கான தனிப்பட்ட சிகிச்சை முறையும் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு உள்ளது என்பது உலகம் கவனிக்க வேண்டிய மிகப் பெரிய சிக்கல்களில் ஒன்றாக உள்ளது.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை நீண்டகாலக் குழந்தைகள் என்று சொல்லலாம். அவர்களை வளர்த்து எடுக்கும் பொறுப்பு முழு சமுதாயத்திற்கும் உண்டு.  ஆனால் இதை உணரும் அளவிற்கு இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் சமுதாயம் இன்னும் அறிவு வளர்ச்சி பெறவில்லை, மக்களிடையே மதியிறுக்கம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே சமுதாயம் தனது குறைபாட்டை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தும் நாள் இது என்று சொல்லலாம்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

1928ல் செல்போனா? – சாப்ளின் படத்தின் விநோத காட்சி!.

இரா.மன்னர் மன்னன்

குழந்தைக்குப் பால் கூட கிடைக்கவில்லை: காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் இந்தியப் பெண்ணின் வேதனை

Admin

செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து!

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

கையெழுத்து போட்ட ஜோபைடன் ..அமெரிக்காவில் டிக் டாக் தடை இனி இல்லை!

Admin

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

உலக அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம்?வெளியான அதிர்ச்சி தகவல்…!

Admin

துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம்… 17 பேர் பலியான பரிதாபம்

Admin

Leave a Comment