கச்சத்தீவை எங்களிடம் கேட்காமல் கொடுத்துவிட்டது காங்கிரஸ் என்று திமுக நெடுநாளாக செய்து வந்த பிரசாரத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே இலங்கை கச்சத்தீவுக்கான உரிமையை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குட்டித் தீவான கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று அப்போதைய பிரதமர் நேரு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாக நேரு கூறியதாகவும் ஆர்.டி.ஐ. பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருணாநிதிக்கு தெரியும்:
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும் தகவலை, 1974-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“1973ல் கொழும்பில் நடந்த வெளியுறவுச்.செயலர் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின், கோரிக்கையை கைவிடுவதற்கான முடிவை, 1974 ஜூன் மாதம், வெளியுறவுச் செயலர் கேவல் இங்கால்,தமிழக முதல்வர் எம்.கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ராமநாதபுரம் ராஜாவின் ஜமீன்தாரி உரிமைகள் குறித்தும், கச்சத்தீவில் இலங்கையர் உரிமை கொண்டாடி வருவதை நிரூபிக்கும் விதமான ஆதாரங்களை இலங்கை தரவில்லை என்றும் இங்கால் குறிப்பிட்டார்” என்றும் ஆர்.டி.ஐ. குறிப்பிட்டது.
அத்துடன் “எவ்வாறாயினும் இலங்கை மிகவும் உறுதியான நிலைப்பாட்டை” எடுத்துள்ளதாக வெளிவிவகார செயலாளர் வலியுறுத்தினார் “ என்றும் தெரிவிக்கப்பட்டது.
முறையான ஆவணங்களைக் காட்டி அப்போது ராமநாதபுரம் ராஜா வசமிருந்த உரிமையை நிரூபித்து கச்சத்தீவை தக்கவைக்காமல் இழந்துவிட்டது இந்தியா என்று சொல்லப்பட்டு வந்த மேம்போக்கான காரணத்தைக் கடந்து, தகவல் தெரிவிக்கப்பட்டும் அதன் மீது கவனத்துடன் செயல்படாத திமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான கருணாநிதியின் மீது வலுவான குற்றச்சாட்டை இந்த ஆர்.டி.ஐ பதிவு செய்யும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இதன் மூலம் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இத்தனை காலம் மூடிமறைத்து வந்த திமுகவின் பிரசாரத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.