அரசு ஊழியர்கள் அரசின் எந்தச் செயல் குறித்தும் விமர்சனம் செய்யக் கூடாது என்று கூறுவது மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்புடையது அன்று. அதிலும் ஆசிரியர்கள் பொதுநலன் கருதி வெளிப்படுத்தும் கருத்துக்களை அரசிற்கு எதிரானதாகக் கருதுவது நியாயமான அணுகுமுறை கிடையாது என்றும் கருத்து வெளியிட்டு ஆசிரியர் உமா மகேஸ்வரி மீதான நடவடிக்கைக்கு கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு அன்பான வேண்டுகோள்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21 வழங்கும் வாழ்வுரிமை வெறும் உயிர் வாழும் உரிமையன்று. கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உத்தரவாதம்.
ஒரு மனிதன் தன் சிந்தனையை வெளிப்படுத்தும் உரிமையை உள்ளடங்கியதுதான் கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உத்தரவாதம்.
மக்களாட்சியில் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசிடம் சில எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள்.
தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை என்பது தேர்ந்தெடுப்பவருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் இடையேயான உத்தரவாதம். (Election Manifesto is a binding document – a covenant between the electorate and elected.)
இந்திய அரசமைப்புச் சட்டம் இறுதி இறையாண்மையை மக்களிடம் தந்துள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள இறையாண்மையைத் தாங்கள் செலுத்தும் வாக்குச் சீட்டின் வாயிலாகத் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதி மூலம் அரசிற்கு இறையாண்மையைத் தருகின்றனர்.
இந்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் இறையாண்மை மக்களிடம் இருந்தே கிடைக்கின்றது.
மக்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அரசிடம் கோரிக்கை வைக்க, அரசிற்கு ஆலோசனை வழங்க, தேர்தல் காலத்தில் தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோருவதற்கு முழு உரிமையும் மக்கள் பெற்றிருப்பதுதான் மக்களாட்சியின் இலக்கணம்.
மக்கள் வெறும் வாக்காளர்கள் அல்லர். வாக்களிப்பது மட்டுமே மக்களாட்சியில் மக்களின் கடமையன்று.
விவாதிப்பது, விமர்சிப்பது, மக்களின் தேவைகளை அரசிற்கு உணர்த்துவது போன்றவை மக்களாட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கு அடையாளம்.
தந்தை பெரியார் வளர்த்தெடுத்த சுயமரியாதை இயக்கம் இம்மண்ணில் மக்களாட்சி உயிர்ப்புடன் இருக்க பெரும் பங்காற்றியுள்ளது.
அதன் வெளிப்பாடாக 1975ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று நெருக்கடி நிலைப் பிரகடனப் படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் திமுகவின் செயற்குழுவில் கலைஞர் அவர்கள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றினார். மக்களாட்சி மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் தனது நிலைபாட்டில் இறுதிவரை உறுதியோடு இருந்தார் கலைஞர் அவர்கள்.
அரசு ஊழியர்கள் அரசின் எந்தச் செயல் குறித்தும் விமர்சனம் செய்யக் கூடாது என்று கூறுவது மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்புடையது அன்று. அதிலும் ஆசிரியர்கள் பொதுநலன் கருதி வெளிப்படுத்தும் கருத்துக்களை அரசிற்கு எதிரானதாகக் கருதுவது நியாயமான அணுகுமுறை கிடையாது.
எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலேயே கேள்வி எழுப்பியவரின் குரல் வளையை நெறிக்கும் செயல்கள் நடக்கும்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றும் ஒரு பெண் பட்டதாரி ஆசிரியர் முன்வைத்த சில கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும்.
விவாதிப்பதற்குப் பதிலாக உலகப் பெண்கள் தினத்திற்கு முன்னாள் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவது தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டிற்கும், கலைஞர் உயர்த்திப் பிடித்த மக்களாட்சி மாண்பிற்கும், இன்றைய முதல் அமைச்சர் அவர்களின் பெண்ணுரிமை முழக்கத்திற்கும் நேரெதிராக அமைகிறது.
உரையாடல் கல்வியை வலியுறுத்தும் சூழலில் விவாதப் பொருளாக ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் கருத்தை வெளிப்படுத்துவதே தவறு என்று கருதுவதை நாகரீக ஜனநாயக சமூகம் ஏற்காது.
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம், அரசு மேல்நிலைப் பள்ளி கணிதப் பட்டதாரி பெண் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க ஆணையைத் திரும்பப் பெற்று, அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அவரது ஆசிரியர் பணியை அவர் தொடர தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அனுமதிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
பெண்கள் தினத்தில் வாழ்த்துச் செய்திக்குப் பதிலாக பெண் ஆசிரியரின் ஜனநாயக உரிமையைக் காக்க அறிக்கை வெளியிட வேண்டிய சூழல் மிகவும் வேதனை தருகிறது” என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.