கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பேசியதன் சாரம் என்ன என்பதை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
எனதருமை சகோதர சகோதரிகளே!
திமுக காங்கிரசால் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் கொண்டு வர முடியாது. நீங்களே பாருங்கள் ஒரு பக்கம் பாஜகவின் நலத்திட்டங்கள். மறுபுகம் திமுக காங்கிரசின் ஊழல்கள். கணாடி இழை இணையவசதி 5ஜி வசதிகளை பாஜக ஆட்சி தந்து கொண்டிருக்கிறது. 2ஜி ஊழல் செய்திருக்கிறது திமுக.
திமுக தமிழ் பண்பாட்டின் எதிரி. அயோத்தியை கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி. அயோத்தி கும்பாபிஷேகத்தின்போது நான் தமிழகம் வந்து கோயில்களில் பூஜைகள் செய்தேன். ஆனால், திமுக அந்தக் கும்பாபிஷேகத்தை காணக்கூட விடாமல் செய்தது.
ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது மோடி அரசு கூட்டணிதான். தமிழர் பெருமை, தமிழ் மண்ணின், மக்களின் பெருமையை பறைசாற்றுபவர் மோடிதான். மோடி இருக்கும்வரை தமிழ்ப்பண்பாட்டை யாராலும் ஏதும் செய்ய முடியாது.
திமுக காங்கிரஸ் கட்சிகள் மீனவர்களின் உயிரோடு விளையாடு தவறைச் செய்தவர்கள். அண்மையில், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு மரண தண்டனை கூட வழங்கப்பட வாய்ப்பிருந்தது. ஆனால், நான் சும்மா இல்லை. வாய்ப்புள்ள எல்லா கதவுகளையும் தட்டி, எல்லா தடைகளயும் உடைத்து, எல்லா மீனவர்களையும் ஒரு துளி சேதாரம் கூட இல்லாமல் மீட்டு வந்தேன்.