2024 மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு 1+1 இடங்களும் தனிச்சின்னமும் கோரிக்கை வைத்திருந்த மதிமுகவுக்கு இப்போது மனம் மாறியது எப்படி?
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைவர் வைகோ, “நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்குகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம்” என்றார்.
மேலும், “திராவிட இயக்கத்தை மென்மேலும் வலுப்படுத்த எங்களது அனைத்து சக்தியையும் பயன்படுத்துவோம். இனி நிரந்தரமாக திமுகவுக்கு பக்க பலமாக இருப்போம் என்று நான் கூறியிருக்கிறேன். இன்று பேச்சுவார்த்தை ஏறத்தாழ முடிந்துவிட்டது. ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி எது என்பது மற்ற கட்சிகளுடன் பேசி முடித்துவிட்டு கூறுவதாக உறுதி கொடுத்துள்ளார்கள்.” என்றும் பேசினார்.
எந்த தொகுதி என்பதும் கூட இன்னும் முடிவாகாத நிலைதான் நீடிக்கிறது. சரி சின்ன்னம் தொடர்பாக ஏதேனும் பேசப்பட்டதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
எந்த சின்னத்தில் போட்டியிடுகிறீர்கள் என்று வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நாங்கள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம்” என்று கூறினார்.
அப்படியே, மாநிலங்களவையில் இடம் ஒதுக்குவது குறித்து ஏதேனும் பேசப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அது பற்றி இப்போது பேசப்பட வில்லை. அதற்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கின்றன” என்று கூறினார். அதாவது, மாநிலங்களவை உறுப்பான்மை குறித்த பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கலாம் என்ற தொனியிலேயே அவரது பதிலும் அமைந்தது.
கடந்த முறை 1 + 1 என்று ஒப்பந்தமானதே என மீண்டும் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அந்த சமயம் மாநிலங்களவைத் தேர்தலுக்கு ஒரு மாத காலமே இருந்தது. தற்போது 15 மாதங்கள் உள்ளது என்பதால் அந்த சமயத்தில் பேசப்படும்” என்று கூறினார்.