விழுப்புரம் (தனி) மற்றும் சிதம்பரம் ஆகிய தனித்தொகுதிகளில் விசிக இந்தியா கூட்டணியில் போட்டியிடும் என்று தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
”தொடக்கம் முதலே 2 தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத்தொகுதி என்று வலியுறுத்தி வந்த விசிக, இன்று 2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதன் பின்னனி என்ன?” என்ற கேள்வி, இந்த தொகுதி உடன்படிக்கை குறித்து எழுந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த தேர்தலின்போது கையாளப்பட்ட அதே பகிர்வு முறைக்கு ஒப்புக்கொண்டு இந்த தொகுதிப்பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ” என்று தெரிவித்தார்.
மேலும், “ தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 3 தொகுதிகள், கேரளாவில் 3 தொகுதிகள் என விசிக போட்டியிட உள்ளது. அத்துடன், ஆந்திராவில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. அதற்காக விசிகவுக்கென தனிச்சின்னமும் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.