தமிழில் விலங்குகளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று கால்நடை. இது பொதுவாக வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது.
இந்த சொல்லைப் பயன்படுத்தும் சிலருக்கு ஒரு ஐயம் வரக் கூடும், ‘ஆடு மாடுகள் மட்டுமா காலால் நடக்கின்றன? மனிதனும் காலால்தானே நடக்கிறான்… மனிதனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை?’ – என்று.
இத்தனைக்கும் ஒருவர் நடந்து பயணம் செய்வதை ‘அவர் கால்நடையாக பயணித்தார்’ என்று சொல்வது உண்டு. ஆனால் ஏன் மனிதர்களைக் கால்நடைகள் பட்டியலில் சேர்ப்பது இல்லை?.
இதற்கான விளக்கத்தை கிருபானந்த வாரியார் அவர்கள் ஒரு மேடையில் அளித்தார். அவரது விளக்கத்தின்படி, ஆடு, மாடுகளைப் போலவே மனிதனும் கால்நடையாக பயணிக்கக் கூடியவன். ஆனால் அவனுக்கு மேலும் இரண்டு வகையான நடைகள் உள்ளன.
முதலாவது ‘நா நடை’ அதாவது பேச்சு நடை. இப்போதும் ஒருவர் பேசும்போது ‘உங்கள் நடை நன்றாக இருந்தது’ என்று பாராட்டப்படுவதைப் பார்க்கிறோம் அல்லவா, அந்த நடைதான் இது.
இரண்டாவது மன நடை. அதாவது எண்ணத்தால் பயணிப்பது. இப்போது யாராவது இமய மலை குறித்து உங்களிடம் பேசினால், இமய மலையை நேரில் பார்த்த காட்சியோ அல்லது இமய மலை குறித்த புகைப்படமோ உங்கள் மனதிற்குள் வந்து நீங்கள் அங்கு மனதால் பயணிப்பீர்கள்
. இதுதான் மனநடை. மனம் எண்ணிய இடத்திற்கு உடனே சென்று சேரும் வேகத்துக்கு ‘மனோவேகம்’ என்று பெயர். உலகின் உச்சபட்ச வேகம் என்று இதனைச் சொல்லலாம்.
இந்த இரண்டு கூடுதல் நடைகளும் வீட்டு விலங்குகளுக்கு கிடையாது. அவை காலால் மட்டுமே நடக்கக் கூடியவை அதனால்தான் அவை கால்நடைகள். மனிதன் நாவாலும், மனதாலும் நடக்கக் கூடியவன், கூடுதலான அறிவும் ஆற்றலும் பெற்றவன் எனவே அவன் கால்நடை அல்ல.
இரா.மன்னர் மன்னன்