இந்திய உணவு வகைகளில் அப்பளத்திற்கு என்னைக்குமே தனி மவுசுதான்.மாநிலத்திற்கு தகுந்தாற் போல் பெயர் உருவம் மாறினாலும் அப்பளம் இந்தியாவில் இல்லாத இடமே கிடையாது எனலாம்.
அதிலும் நம்ம தமிழ் நாட்ல அந்த கல்யாண வீடுகளில் பாயாசத்தில் போட்டு உண்ணும் உணவு ரசிகர்கள் ஏராளம். ஆசை, தோசை, அப்பளம், வடை என்ற பழமொழிக்கேற்ப தனக்கென தனி இடம் பிடித்துள்ள அப்பளத்தை, “அதிகம் சாப்பிடாதீர்கள்… கொலஸ்டிரால் அதிகம்” என மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் அலட்சியப்படுத்திவிட்டு நொறுக்கி சாப்பிடுவோர் ஏராளம்.
இந்த நிலையில் அப்பளப் பிரியர்களில் ஒருவரின் ஆதங்கம் டெல்லி வரை ஒலித்துள்ளது. பொதுவாக, அப்பளம் வட்டமாக மட்டுமல்லாமல் சதுரம், நீள்வட்டம் என பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கின்றது.
சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்
இதில் சதுர வடிவ அப்பளப் பிரியரான ஹர்ஷ் கோயங்கா என்பவர் ட்விட்டரில் தன் மனக்குமுறலை வெளியிட்டிருந்தார்.
அதில், “வட்ட வடிவ அப்பளங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதே சமயத்தில் சதுர வடிவ அப்பளத்துக்கு வரிவிதிப்பதால் சதுர அப்பளத்துக்கு அதிக விலை தர வேண்டியிருக்கிறது” எனவும் மனம் வருந்தி குறிப்பிட்டு இருந்தார்.
அந்த அப்பள ரசிகரின் வேதனையும் குமுறல்களையும் பல ஆயிரம் அப்பளப் பிரியர்கள் லைக் செய்ய, டெல்லி வரை சென்ற அப்பளம் தனது உரிமைக்காக போராட, இதற்கு பதிலும் கிடைத்தது.
ஹர்ஷ் கோயங்காவின் ட்வீட்டை டேக் செய்த மத்திய மறைமுக வரி வாரியம், தனது ட்விட்டர் பதிவில், “வடிவத்தை பற்றியெல்லாம் எண்ணி வருத்தப்பட வேண்டியதில்லை உங்கள் அப்பளம் சதுரமோ, வட்டமோ, எல்லா வகை அப்பளங்களுக்கும் வரிவிலக்கு உண்டு” எனக் கூற, பாயாசத்தில் போட்டு அப்பளம் சாப்பிட்டது போல் குஷியானது ஹர்ஷ் கோயங்கா மட்டும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள அப்பள பிரியர்களும்தான்.
அப்புறமென்ன, இனி எல்லாவகை அப்பளத்தோடும் “ஒரு கடி அப்பளம்… ஒரு கடி சோறு…”