ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ்,அண்ணன் நேற்று போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் தம்பி விபத்தில் இறக்கவில்லை, திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர்’ என கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் கடந்த வாரம் ஊட்டியில் போலீசார் முன் ஆஜராகி மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய தீபு, சதீசன், சந்தோஷ்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் விஜயன், முனிரத்தினம் ஆகியோர் மனு ஒன்று தாக்கல் செய்தனர்.
athil, ‘முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, முன்னாள் கலெக்டர் சங்கர், எஸ்பி முரளி ரம்பா, அதிமுக வர்த்தகர் அணி மாநில தலைவர் சஜீவன், அவரது சகோதரர் சுனில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ் உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணனிடம் விசாரணை மேற்கொள்ள கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி நேற்று காலை 11 மணியளவில் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்திற்கு தனபால் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை அளித்த தனபால்.
தனது தம்பியின் மரணம் திட்டமிட்ட கொலையே. விபத்து அல்ல என கூறியதாக தெரிகிறது. கனகராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதனால்,கொடநாடு விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கனகராஜின் விபத்து, கொலை குற்றமாக மாற்றப்பட்டு மீண்டும் விசாரணை துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.