மதன் – கே.டி.ராகவன் – அண்ணாமலை என பாஜகவுக்குள் நடக்கும் வீடியோ விவகாரம் குறித்தது அல்ல இந்தக் கட்டுரை. அதை STING OPERATION என்று சொல்லும் குளறுபடிதான் இங்கு பேசுபொருள்.
தமிழக பாஜகவுக்குள் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள் மெல்ல மெல்ல பொதுவெளியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. எப்படி யாருடைய அந்தரங்க விவகாரங்களுக்குள்ளும் நாம் தலையிடக் கூடாதோ, அதுபோலத்தான் எந்த ஒரு உட்கட்சி விவகாரத்துக்குள்ளும் நாம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அது சமூகவெளிக்கு வந்து இடையூறை ஏற்படுத்தும் வரையில்.
எந்த ஒரு பிரபலத்தையோ, பிரமுகரையோ எளிதாக அவமானப்படுத்தும் கருவிகளாக பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்பது நாம் மறுக்க முடியாத ஒன்று. இந்த உத்தி நேரு-எட்வினா முதல் நேற்று வெளிவந்த கே.டி.ராகவன் விவகாரம் வரை உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால், இதை வெளிக்கொண்டு வந்ததாக சொல்லும் மதன் இதனை ஸ்டிங் ஆப்பரேஷன் என்கிறார். ஆனால், இது ஸ்டிங் ஆப்பரேஷன் இல்லை என்பதோடு மக்களுக்கு கூடுதலாக சில புரிதல்களும் அவசியமாகிறது. இதைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
‘’மதனுக்கும் அந்த பெண்ணிற்கும் டி.என்.ஏ சோதனை நடத்துங்க ’’ – கொந்தளித்த இந்து முன்னணி தலைவர்!
ஸ்டிங் ஆப்பரேஷன்கள் என்றால் என்ன என்பதை எளிமையாக விளங்கிக் கொள்வோம்.
சமூகத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய அல்லது ஒரு சட்டவிரோத குற்றச் செயலைக் கையும் களவுமாக ஆவணப்படுத்தும் நோக்கில், மறைமுகமாக நடத்தப்படும் இரகசிய திட்டங்களுக்கு ஸ்டிங் ஆபரேஷன்கள் என்று பெயர். தமிழில் இதனை புலனாய்வு என்றும் சிலர் சொல்வதுண்டு. அது தவறு. எந்த ஒளிவு மறைவுகளோ, கூடுதல் ஆய்வு முடிவுகளோ இல்லாத, குற்றத்தை மட்டும் ஆவணப்படுத்தும் ஆதாரத்தை திரட்டும் நிகழ்வுதான் ஸ்டிங் ஆப்பரேஷன். அதாவது குற்றவாளியால் குற்றத்தை மறுக்கமுடியாத அளவுக்கான வலுவான ஆதாரத்தை ஸ்டிங் ஆப்பரேஷன்கள் மூலம் திரட்டலாம்.
ஆனால், அந்த ஆதாரங்கள் எதுவும் துளி கூட மாற்றப்பட்டோ, திருத்தப்பட்டோ இருத்தல் கூடாது. மார்ஃபிங் செய்தல், வெட்டி ஒட்டுதல் என எந்தவிதமான மனிதவேலைப்பாடுகளுமற்று இருந்தால்தான் அது சந்தேகத்துக்கிடமில்லாத ஆவணம்.
அதுபோக, ஆதாரத்தை திரட்டும் இந்த இரகசிய நபர் மூன்றாவது நபராக இருக்க வேண்டும். மாறுவேடத்தில் குற்றச் செயல்புரியும் கும்பலோடு இருந்தாலும் (இரகசிய போலீஸ் மாதிரி) ஆவணம் வெளிவரும்போது இவர் செய்தவற்றில் நல்நோக்கம் இருந்தால் மட்டுமே இவர் மன்னிப்புக்குரியவர். இல்லாவிட்டால் இவரும் குற்றமிழைத்தவராகவே கருதப்படுவார். ஏனெனில், ஒருவருக்குத் தெரியாமல் அவரது செயல்களை பதிவு செய்யும் முறை என்பது சட்டவிரோதமானதுதான்.
பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை
தற்போது வெளியாகியிருக்கும் கே.டி.ராகவன் விவகாரத்தில், நடைபெற்று வரும் குற்றத்தை ஆதாரத்துடன் விளக்கும் நோக்கில் காணொலிகள் வெளிவரவில்லை. அவை எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதுபோக, குற்றத்தை நடத்திய நபரே ஆதாரம் திரட்டிய நபராகவும் இருக்கிறார். இது சதி என்னும் முகாந்திரத்தையே வெளிப்படுத்துகிறது.
இந்த விவகாரத்தில் அரசியல் கேள்விகள் ஏராளமாக சுற்றிவரும் நிலையில், அது உள்கட்சி விவகாரமாகவே இன்னும் இருக்கிறது. எனவே அவற்றை அரசியல் தளம் பார்த்துக் கொள்ளும். ஊடகத்துறைக்குள் வரும் புதியவர்களுக்கும், மக்களுக்கும் ஸ்டிங் ஆப்பரேஷன் குறித்த தவறான வழிகாட்டுதலை வழங்கும் ஒரு கெட்ட முன்னுதாரணமாக இது மாற வாய்ப்பிருக்கிறது. எனவேதான் இந்த விவகாரத்தில் மக்களுக்கு புரிதல் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
அப்படியென்றால் மதன் செய்தது என்ன?
இதற்கு பொறி வைத்தல் -Entrapment- என்று பெயர். ஒரு குற்றம் நடைபெறுவதாக கேள்விப்பட்ட பிறகு, அந்தக் குற்றத்தை மீண்டும் வலிந்து நடைபெற வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு எதிராக ஆவணத்தை உருவாக்கி இருக்கிறார். இதற்கான காரணங்களாகவும், நிர்பந்தங்களாகவும் மதன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், இது ஒரு negative honey entrapment என்பது மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
இது போன்ற ஆபரேஷன்களுக்கென்று அரசு அல்லது அதிகாரப்பூர்வ அமைப்புகளின் சார்பில் எந்தவிதமான வரைமுறைகளோ சட்டங்களோ இல்லை என்பதிலிருந்தே இவை சட்டத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஸ்டிங் ஆபரேஷன் என்பது முழு ஆவணத்தை வெளியிடுவது, இல்லை என்றால் மீத ஆவணத்தை வைத்து பேரம் நடக்கிறதோ? – என்ற சந்தேகம் வர அது வாய்ப்பளிக்கும்.
செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : எவற்றுக்கெல்லாம் தடை
அதுபோக, அண்ணாமலை பேசிய ஆடியோவை மதன் வெளியிட்ட வீடியோவிலும் துளித்துளி வீடியோக்களாக அவை கட் செய்யப்பட்டு இருந்தன. அதற்கு மதன்சொன்ன பதில்கள் என்ன என்ற கேள்விக்கும் இதில் இடமிருக்கிறது.
இராகவன் விவகாரத்தில் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணோ, இராகவனின் மனைவியோ புகார் அளிக்க இயலும். மூன்றாவது நபர் இது குறித்து பேசுவது சட்டப்படி ஏற்கத் தக்கது அல்ல. இதனால் இராகவன் மீது வழக்கு தொடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
திரும்பவும் நினைவில் கொள்வோம். இது அவர்களது உட்கட்சி விவகாரமாகவே முடிந்துவிட்டால் சிக்கலில்லை. ஆனால், மதன் இதை உண்மையான ஜர்னலிசம் என்கிறார். அதனால்தான் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே இப்படி பலரின் அந்தரங்க படங்கள், காணொலிகள் வந்துள்ளன. இவற்றுக்கு ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரை பயன்படுத்தியதுதான் பொருந்தாத செயல்.