மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.
இதனை தொடர்ந்து கட்சியின் துணைத்தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் அதில் இருந்து விலகி கடந்த மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனிடையே மகேந்திரனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
அந்த வகையில் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.