கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் ஒரே குழியில் அடுத்தடுத்து நான்கு சிவப்பு நிற பானைகள் கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழக தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் இணை இயக்குனர் பாஸ்கரன், தொல்லியல் அலுவலர்கள் சுரேஷ், அஜய், ரமேஷ், காவ்யா உள்ளிட்டோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில், கீழடியில் இதுவரை மூடியுடன் கூடிய பானை, உறைகிணறுகள், வரி வடிவ பானை ஓடுகள், சுடுமண் பகடை, கல் உழவு கருவி, வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழங்கால தமிழர் நாகரிகம் அடுத்தடுத்து வெளிவருவதால் பொதுமக்கள் பலரும் கீழடி அகழாய்வு பணியை ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் அகழாய்வில் ஒரு குழியில் சிவப்பு நிற சிறிய பானை, அடர் சிவப்பு நிற பானை 60 செ.மீ உயர பெரிய பானை, கிண்ணம் போன்ற கருப்பு சிவப்பு நிற பானை, தேமடைந்த நிலையில் மற்றொரு பானை என ஒரே குழியில் 4 பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வணிகர்களை கவர்வதற்காக இந்த சிவப்பு நிற பானைகளை பண்டைய கால மக்கள் பயன்படுத்தியிருக்க கூடும் என கூறப்படுகிறது.