கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கம்பி எண்ணுவது உறுதி என்று பால்வள துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
ஆவடி அருகே திருமுல்லைவாலில் செயல்பட்டு வரும் விதையின் உதயம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என கூறினார்.
மேலும் எஸ்.பி.வேலுமணி பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, அதே கூட்டணியில் உள்ள அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோர் கவர்னரிடம் சென்று மனு கொடுத்திருந்தனர். தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறவர்கள் இவர்களின் செயலை என்ன சொல்லுவார்கள்.
தவறு செய்தவர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு உறுதியளித்திருந்தார். அதன்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடுக்கை எடுக்கப்படும். அவர்கள் கம்பி எண்ணப்போவது நிச்சயம். குறிப்பாக ஊழல் செய்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவார். சொல்லப்போனால் ஊழலின் ஊற்றுக் கண்ணே அவர்தான் என சா.மு.நாசர் கடுமையாக விமர்சித்தார்.
அவர்மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும். ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.
தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். உப்பு சாப்பிட்டவர்கள் நிச்சயம் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.