தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்பேரில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறினார்.
மேலும் இந்த அறிக்கை தயாரிப்பின்போது ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்ததோடு, 2001 ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையையும் ஒப்பீடு செய்ததாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என்பதற்காகவே என் பெயர் இடம்பெற்றுள்ளது.
2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61, 320 கோடியாக உள்ளது.இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை. இதனால் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை ரூ.2,63,976 ஆக உள்ளது.
அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். மேலும் தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.