அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தற்கொலை செய்து கொண்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை இரட்டை தலைமைகளான ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக தகவல் வெளியானது.
கட்சியை ஒற்றை தலைமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு ஓபிஎஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் வெளியான தகவல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள திமுக ஆதரவாளரும் திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சென்று விடுவார் என தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக கட்சியில் தீர்மானம் நிறைவேற்றாதது, அவரை விமர்சிக்காதது என அனைத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவையெல்லாம் ஓபிஎஸ் சசிகலாவிடம் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை காட்டுவதாக கூறியுள்ளார்.
மேலும் அரசியலில் மூன்று முறை தற்கொலை செய்துகொண்டவர் ஓபிஎஸ் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேறி தர்ம யுத்தம் நடத்தியது முதலாவது தற்கொலை, மூன்று முறை முதலமைச்சராக இருந்த அவர் துணை முதலமைச்சராவதற்கு ஒப்புக்கொண்டது இரண்டாவது தற்கொலை, கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவராக இருக்காமல் இருப்பது 3வது தற்கொலை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.