நமது நிருபர்
யூடியூபில் சென்னை தமிழச்சி என்ற பெயரில் பிரபலமான பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பேரவைத் தேர்தலில் 136 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 70 வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.
இந்த வேட்பாளர் பட்டியலில் சமூக ஆர்வலர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கல்வியாளர்கள் போன்ற மக்களுக்கு பரிச்சயமான பலர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுபவராக பிரபல யூடியூபரான சென்னை தமிழச்சி பத்மப்பிரியா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு 2020 ல், தனது யூடியூப் சேனலில் மத்திய அரசின் ’சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” வரைவு அறிக்கையை பற்றிய தகவல்களையும், இதனால் மக்களுக்கும், சுற்றுக்சூழலுக்கும் ஏற்படப்போகும் பாதிப்புகளையும், பற்றி பேசிய ஒரு வீடியோவை இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். கோபத்தோடு இவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததால், அவருக்கு தனிப்பட்ட முறையில் நிறைய எதிர்ப்புகள் வந்தன. இதனால் முதலில் அந்த வீடியோவை நீக்கிவிட்டார். இதன்பிறகு இவருக்கு நிறைய மக்கள் ஆதரவும், அன்பும் கிடைத்தது. அதே சமயம் உடல் ரீதியான தாக்குதலுக்கும் இவர் ஆளானார். முன்னர் சமையல், மருத்துவம் போன்றவை பற்றிய காணொலிகளை அதிகம் வெளியீடு வந்த இவர் இந்த சம்பவத்திற்குப் பின்னர் மக்கள் சார்ந்த போராட்டங்கள் குறித்து அதிகம் பேசத் தொடங்கினார்.
“மக்கள் நலன்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் என்பதற்காக என்னைப் போராளி என்று சொல்வார்களேயானால், நான் போராளியாக இருந்துவிட்டுப்போகிறேன்’ என்று ஒரு பேட்டியிலும் அவர் கூறி இருந்தார். பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த அவருக்கு இப்போது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்து உள்ளது. யூடிபூபில் ஆதரவு கொடுக்கும் மக்கள் அரசியல் களத்தில் ஆதரவு கொடுப்பார்களா? – என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் சொல்லும்.