ஒலிக்கு உருவம் கொடுத்தால் எழுத்துகள். இந்த உருவம் முழுமை பெறும் இடமாக இருந்தவைதான் கடிதங்கள். ஆம், ஏறக்குறைய அழிந்துபோய்விட்ட கடிதம் எழுதும் கலையை நினைவுபடுத்திக் கொள்ளும் நாளாகவே இந்த கடிதம் எழுதும் தினம் (World Letter Writing Day) ஆண்டுதோறும் செப்டம்பர்1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அன்புக்குரியவர்களுக்கு தகவல் சொல்ல, தகவல் பெற ஒரே ஊடகமாக இருந்த கடிதங்கள், வேலை முடிந்த பிறகு ஆவணங்களாகவும் காலப் பொக்கிஷங்களாகவும் பாதுகாக்கப்பட்டன.
அனுப்பி அழித்துவிடும் மெசேஜுகளைப் போல் அல்லாமல், உணர்வுகளின் பெட்டகமாக கடிதங்கள் விளங்கின.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலகாபாத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது, தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், தன்னுடைய அந்தப் 10 வயது மகளுக்கு , இந்தப் பூமியின் கதை, பூமியிலுள்ள நாடுகளின் கதைகள், இயற்கையின் வரலாறு, உலக நாகரிகங்களின் தோற்றம் உள்ளிட்டவற்றை எல்லாம் சுருக்கமாக எழுதினார்.
10 வயது மகளுடன் நேரம் செலவிட இயலாத நிலையில் நேரு இருந்தாலும், தனது மகளுக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். அதன்மூலம், அவர், தனது மகளுக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்.
பின்நாட்களில் ஆவணமாக ஆன அந்தக் கடிதங்கள்தான் அன்றைய குழந்தை இந்திராவை இந்தியாவின் இரும்புப் பெண்மணியாக மாற்ற அச்சாரமிட்டன.
அதுபோக காந்தி-டால்ஸ்டாய் கடிதங்கள், சாவர்க்கரின் எரவாடா சிறைக் கடிதம், அம்பேத்கர்-ரமாபாய், அம்பேத்கர் -சவிதா இடையிலான கடிதங்கள் என வரலாற்றில் சம்பவ விவரிப்பு மற்றும் சமூக நிலைப் புரிதலுக்கு கடிதங்கள் பெரும் உதவியாக விளங்குகின்றன.
அன்புக்குரியவர்களுக்கு உங்கள் அன்பை தொட்டு உணர வைக்கும் ஒரு வழி உண்டு என்றால் அது கடிதம் எழுதுவது மட்டுமே…