தமிழ் இலக்கியங்களில் பிணி என்ற சொல் பல இடங்களில் காணப்படுகிறது. நாம் பேசும்போது பிணி என்ற சொல்லை சில இடங்களில் இன்றும் பயன்படுத்தி வருகிறோம். கருவுற்ற பெண்ணை ‘கர்ப்பிணி’ என்றும், பசியை ‘பசிப்பிணி’ என்றும், பிறவியை ‘பிறவிப் பிணி’ கூறும் வழக்கம் இன்றும் மக்களிடம் காணப்படுகிறது.
பெரும்பாலான அகராதிகள் பிணி என்ற சொல்லுக்கு நிகரான சொல்லாக நோய் – என்ற சொல்லைக் காட்டுகின்றன. ஆனால் இரண்டும் ஒரே பொருள் கொண்டவை அல்ல!. இந்த இரண்டு சொற்களுக்குள் என்ன வேறுபாடு?.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – என்கிறோம் ஆனால் பிணியற்ற வாழ்வை அப்படிக் கூறிவிட இயலாது. ஏனென்றால் பிணி என்பது தேவையான தவிர்க்க இயலாத துன்பமும் கலந்த ஒரு அனுபவம். அதாவது நோயைப் போல பிணி முழுதும் தேவையற்ற ஒன்று அல்ல!.
உதாரணமாக பிறவி என்பது பிணிதான் என்றாலும், பிறவி இல்லை என்றால் முக்தி ஏது? ஒரு பெண் கருவுறுவது பிணிதான் ஆனால், அது இன்றேல் பரம்பரை ஏது? பசியும் ஒரு பிணிதான் ஆனால் பசி இல்லை என்றால் வாழ்க்கை ஏது? – அதனால் பிணி என்பது மனிதர்களுக்கு தேவையான ஒன்று.
மறுபக்கம் நிலத்தின் வளக்குறைவால் ஏற்படும் நோய்களுக்கும் பிணி என்ற பெயர் வழங்கி உள்ளது. திருக்குறளில் ‘பிணியின்மை’ என்ற சொல் ‘நிலநலம் இன்மையால் ஏற்படும் நோய் இல்லாமல் இருத்தல்’ என்ற பொருளிலும் புழங்கி உள்ளது. நோய் என்ற சொல்லுக்கு இப்படி வேறு பொருட்கள் கிடையாது!.
- இரா.மன்னர் மன்னன்